Thursday, May 5, 2011
கனிமொழி நாளை கைது?
2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment