Monday, May 2, 2011

தெய்வத்திருமகளாக மாறிய விக்ரம்!



தேவர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் விக்ரமின், "தெய்வத்திருமகன்" படத்தின் தலைப்பு மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது. டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியிருக்கும் படம் தெய்வத்திருமகன். ஆரம்பத்தில் இந்தபடத்திற்கு தெய்வமகன் என்று பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பிதா என்று மாற்றப்பட்டது. பின்னர் பிதா படத்தின் தலைப்பும் யாரோ பதிவு செய்திருக்க அந்த தலைப்பையும் மாற்றி இறுதியாக தெய்தவத்திருமகன் என்று சூட்டி ஆடியோ ரிலீஸ் மற்றும் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் தெய்வத்திருமகன் பட தலைப்புக்கு தேவர் இன அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டு அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இதனிடையே மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று படத்தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து படத்தின் தலைப்பு மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் அவர்கள் தமது ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவனம் சார்பில் விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "தெய்வத்திருமகன்" படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள் நேரிலும், கடிதம் வாயிலாகவும், மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். அதில் மக்கள் பசும்‌பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை‌ தெய்வத்திருமகன் என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி, படத்தின் தலைப்பை மாற்றிக்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மோகன் நடராஜன் அவர்கள், "தெய்வத்திருகமன்" படத்தலைப்பை "தெய்வத்திருமகள்" என்று மாற்றிக்கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். எனவே இப்படத்தின் தலைப்பை "தெய்வத்திருமகள்" என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிப்பாளர் திரு.மோகன் நடராஜன் அவர்களது ஒப்புதலோடு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment