“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!
படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.
“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.
அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!
நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.
“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.
அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!
ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.
எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.
கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.
ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.
கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.
இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!
அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!
இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.
இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.
“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!
ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!
ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.
No comments:
Post a Comment