Tuesday, May 17, 2011

தி.மு.க.வின் தூண்கள் (!) குப்புற விழுந்த ரகசியம்!!

தமிழகத்தில ஓங்கியடித்த தி.மு.க. எதிர்ப்பு அலை, தி.மு.க.வின் அமைச்சர்கள் சிலரையும் விட்டு வைக்கவில்லை. வாரிக்கொண்டு போயிருக்கின்றது. தி.மு.க.வின் தூண்கள் என்றும், தமிழகத்தின் VVIPக்கள் என்றும் கூறப்பட்ட சிலரும் குப்புற விழுந்துள்ளனர். இதோ விபரங்கள்:

பேராசிரியர் அன்பழகன்

தி.மு.க.வின் #2 என்று அறியப்பட்டவர். கட்சியில் கலைஞருக்கு அடுத்தபடியாக சீனியர். தி.மு.க.வில் யார் தோல்வயடைந்தாலும் இவர் தோல்வியடைய மாட்டார் என்று ஒரு பிம்பம் இருந்தது. தேர்தல் வரும்போது எப்போதுமே பாதுகாப்பான தொகுதி ஒன்று இவருக்கு ஒதுக்கப்படும். அந்தளவுக்குக் கட்சியில் செல்வாக்கு!

இம்முறை, பாதுகாப்பான தொகுதி என்று கருதி இவர் களமிறங்கிய வில்லிவாக்கம் தொகுதியே இவரது காலை வாரிவிட்டிருக்கிறது!

கட்சியில் மாத்திரமின்றி, கலைஞரின் குடும்ப விஷயங்களிலும் ஆலோசனை சொல்லும் அளவுக்கு கலைஞருடன் நெருக்கமானவர் இவர். தனது தோல்விக்குக் காரணம் கலைஞரின் குடும்ப விவகாரம் என்று இப்போது புரிந்து கொண்டிருப்பார்!

தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இவரிடம் இல்லை. அதேநேரத்தில் ஓகோ என்று நல்ல பெயரும் தொகுதியில் கிடையாது! கீழ்மட்டத் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பு கிடையாது. முழுக்க முழுக்க தி.மு.க.வின் அதி உயர் ம்டத்துடன்தான் இவரது தொடர்புகள். அதுதான், அதி உயர்மட்டத்தின் ஊழல் இவருக்கும் தேர்தலில் குழிபறித்துவிட்டது!

தோல்விக்குக் காரணம், தி.மு.க. எதிர்ப்பு அலை 50%, கலைஞரின் குடும்ப விவகாரங்களால் ஏற்பட்ட பாதிப்பு 50%.

பன்னீர்செல்வம்

ஆச்சரியகரமான தோல்வி இவருடையது. காரணம் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. மற்றய தி.மு.க. அமைச்சர்களைவிட தொகுதியில் நல்ல பெயரும் இருக்கிறது. அப்படியிருந்தும் எப்படித் தோற்றார்?

தி.மு.க.வின் கடலூர் மாவட்டச் செயலாளராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டபின் கடலூரில் தி.மு.க. வலுப்பட்டது. அடிமட்டத் தொண்டர்களோடு நெருக்கமான நபர். 1996ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது ஏனோ தனது தொகுதியை மாற்றிக்கொண்டார். அப்போது தொகுதிமாறிப் போட்டியிட்ட தொகுதி குறிஞ்சிப்பட்டி.

தொகுதி மாறினாலும் தொண்டர் பலம் இருந்ததால் அங்கும் ஜெயித்தார். ஜெயித்தபின் தொகுதியை மறக்காமல் நிறையவே அபிவிருத்தி வேலைகளைச் செய்த விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். இதனால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் சுலபமான ஜெயித்துவிட்டுப் போனார். 2001ம் ஆண்டு தேர்தலில், தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து சாதனை படைத்தவரும் இவர்தான்!

இம்முறை போட்டியிட்டதும் அதே குறிஞ்சிப்பட்டியில்தான். இவரது வெற்றி நிச்சயமான ஒன்று என்று எதிர்பார்த்திருக்க, தோல்வியடைந்திருக்கிறார்.

தனது சொந்தச் செல்வாக்கு, தொண்டர் பலம், தேர்தல் வியூகங்களில் கெட்டித்தனம், அனுபவம் என்று அனைத்தும் இருந்தும் தோற்றதற்கு ஒரே காரணம் தி.மு.க. எதிர்ப்பு அலை மாத்திரமே. இவரது தோல்வியிலிருந்து தி.மு.க. எதிர்ப்பு அலை எந்தளவு வேகமாக வீசியிருக்கிறது என்று கணித்துக் கொள்ளலாம்.

பாவம், மறைமுகமாக கலைஞர் குடும்பத்தினரில் கெட்டபெயரால் இவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்! தோல்விக்குக் காரணம் 100% தி.மு.க. எதிர்ப்பு அலை.

பொன்முடி

கலைஞரின் அமைச்சரவையில் இருந்த “சர்வ வல்லமை” பொருந்திய அமைச்சர்களில் ஒருவர்! விழுப்புரம் தொகுதியில் 5 தடவைகள் தொடர்ந்து போட்டியிட்டு, அதில் 4 தடவைகள் வெற்றி பெற்றவர். தோல்வியடைந்த ஒரேயொரு தடவைத் தேர்தலுக்கு முன்னர்தான் ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டிருந்தார். இதனால் அந்தத் தோல்வி ராஜிவ் அனுதாப அலையால் ஏற்பட்ட தோல்வி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நீண்டகால எம்.எல்ஏ. என்ற வகையில் விழுப்புரத்தில் இவர் கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னர்போல! இவர் விழுப்புரத்தின் எம்.எல்.ஏ.யாக இருந்தபோது பிறந்த குழந்தைகூட, இம்முறை வாக்களிக்கும் வயது வந்து ஓட்டுப் போடும் அளவுக்கு நீண்டகால குறுநில மன்னர்.

அதே விழுப்புரம் சிற்றரசில் இம்முறை மண் கவ்வியிருக்கிறார்!

தமிழக அளவில் ஊழல் விவகாரங்களில் இவரது பெயரும் அடிபட்டிருக்கிறது. கன்ட்ராக்ட் விஷயங்களிலும் நன்றாகச் சம்பாதித்தவர் என்பது தொகுதிக்குள் தெரிந்திருக்கின்றது. தொகுதிக்குள் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளைவிட, அதற்கான விளம்பரங்களே அதிகம். மொத்தத்தில் நீண்ண்ண்ட கால மன்னரிர் விஷயத்தில், விழுப்புரம் மக்களுக்கு ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டிருந்தது.

மொத்தத்தில் இவரது தோல்விக்குக் காரணம் தி.மு.க. எதிர்ப்பு அலை 50%, இவர்மீது மக்களுக்கு இருந்த ஆயாசம் 50%.

No comments:

Post a Comment