அ.தி.மு.க. கூட்டணி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றும் அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் துயர் துடைக்கும் வண்ணம் கழக ஆட்சி அமைந்துள்ளது.
மக்கள் விடுதலை பெற இந்த ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எனது முதல் நோக்கமாகும். அந்த விதத்தில்தான் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே மக்கள் நலன்பெறும் 7 புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன்.
மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு எனது ஒவ்வொரு நடவடிக்கையும் எப்பொழுதும் அமைத்துக் கொண்டுள்ளேன்.தமிழக சட்டமன்றம் மற்றும் தலைமைச் செய லகம் தற்போதுள்ள புதிய கட்டிடத்திலிருந்து ஏற்கனவே இயங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடத்திற்கு மாற்ற நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சட்டமன்ற மும், தலைமைச் செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் இயங்கிட வேண்டுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்த புதிய கட்டிடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்தான் நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த நடவடிக்கையையும் நான் எப்பொழுதும் எடுத்ததில்லை என்பது நடுநிலையாளர் அனைவரும் அறிந்ததே.
சென்றமுறை நான் தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எல்லாம் மத்திய அரசில் அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கருணாநிதியின் தூண்டுதலால் எவ்வாறெல்லாம் தடை ஏற்படுத்தினார் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே.
எனது அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அவ்வாறு தடையை ஏற்படுத்தியவர்கள்தான் பின்னர் புதிய தலைமைச் செயலக கட்டடத்தினை கட்டியுள்ளனர். அவ்வாறு தலைமை செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. எனினும் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலக கட்டடத்திலிருந்து பணியாற்றுவது அரசு பணிக்கும், நிர்வாகத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதால்தான் புதிய தலைமைச் செயலக கட்டடத்திலிருந்து பணிபுரிய நான் விரும்பவில்லை.
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகம் 2008-ம் ஆண்டு முடிவில் துவங்கப்பட்டு கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்க விழா நடத்தப்பட்டது என்பது எல்லோருக்குமே தெரியும். புதிய தலைமைச் செயலகத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப் படாமலேயே தற்காலிக செட்டிங் போடப் பட்டு அதற்கே 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப் பட்டதும் எல்லோரும் அறிந்ததே.
2010-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கி வைக்கப்பட்ட கட்டடம் முழுமையடைந்த கட்டடமாக இருந்திருந்தால் ஏன் முந்தைய அரசு அன்றைய தினம் முதலே அரசுத் துறைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வில்லை? 2010-ம்ஆண்டு மார்ச் மாதத்திலேயே புதிய கட்டட துவக்க விழாவினை நடத்திய காரணத்தால் சட்டமன்ற செயலகம் அப்போதிலிருந்தே புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது.
19.3.2010 அன்று புதிய கட்டடத்தில் முதல், சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்ற தரையில் புதிய தரைவிரிப்புதான், போடப்பட்டிருந்தது. கேலரிகள் உள்ள முதல் மாடி முடிக்கப்படாததினால் பெரிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.
சட்ட மன்றப் பேரவைத் தலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது. கட்டிடம் முழுமை பெறா மலேயே திறப்பு நடை பெற்றதை மக்கள் குறை கூறிய காரணத்தால் அவசர கோலத்தில் ஒரு சில துறைகள் மட்டும் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.
மேலும் தங்களது ஆட்சியை மக்கள் தூக்கியடித்துவிடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, புதிய கட்டிடத்தில் இருந்து தான் பதவி இறங்குவதற்கு முன் பணிபுரிய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் முழுமையாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் இருந்து செயல்பட அவசர முடிவு எடுத்தார். எனவே தான் அப்போதைய முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோரது இலாகாக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
அவையும் முழுமையாக கொண்டு செல்லப்படவில்லை. டிசம்பர், 2010க்குப் பிறகே நான்கு அரசுத் துறைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் மாற்றப்பட்டது.
முன்னாள் துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றப்படவில்லை. இந்தப் புதிய கட்டிடத்தில் சட்டமன்ற செயலகத் துறை, பொதுத்துறை, உள் துறை, தொழில் துறை, பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, ஆகிய துறைகள் மட்டுமே மாற்றப்பட்டன.
மேலும் அப்போதைய அனைத்து அமைச்சர்களின் அறைகளும் மாற்றப்பட்டன. தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகளும் மாற்றப்படாமல், அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் முந்தைய அரசு 2 தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதாவது புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்படும் தலைமைச் செயலகம் ஒன்று, புதிய கட்டிடத்தில் தலைமைச் செயலகம் ஒன்று என 2 தலைமைச் செயலகங்கள் இயங்கிக் கொண்டு வந்தன.
மாற்றப்பட்ட துறைகளைத் தவிர மேலும் ஒரு துறை மட்டும் செயல்படுவதற்குத் தான் புதிய கட்டிடத்தில் இடவசதி உள்ளது. இரண்டாம் பிளாக் முடிக்கப்பட்டால் தான் எஞ்சியுள்ள துறைகளுக்கு இடவசதி இருக்கும். அந்த இரண்டாவது பிளாக் கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும்.
சட்டமன்ற பேரவைச் செயலகம் உள்பட 36 துறைகளுள், வெறும் 6 துறைகள் மட்டும் புதிய கட்டிடத்தில் இருந்தும், எஞ்சிய 30 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தும் செயல்பட்டால் அரசு இயந் திரத்தை செம்மையாக நிர்வ கிக்க முடியுமா? நிர்வாக வசதிகளை புறந்தள்ளி விட்ட காரணத்தால் தான், முழுமை அடையாத கட்டிடத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
தற்போதும் அவ்வாறு இரண்டு தலைமைச் செயலகங்களில் இருந்து செயல்படுவது நிர்வாக நலனுக்கு ஏற்றதா என்பதை தமிழக மக்கள் தான் கூற வேண்டும். துறை அமைச்சர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், துறைச் செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பிறிதொரு கட்டிடத்தில் இருந்தும் செயல்பட்டால் அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட இயலுமா?
தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதி பூண்டுள்ளேன். அவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமெனில் அனைத்து தலைமை செயல கத்துறை களும் ஒரே இடத்தில் செயல் படுவது தான் சரியானது ஆகும்.
அமைச்சர் பெருமக்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிக்க அவர்களை 2 கிலோ மீட்டர் தொலைவி லுள்ள கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு முறையும், வரவழைப்பதும், அமைச்சர்கள் பார்க்க வேண்டிய கோப்புகளையும் அவ்வாறு தொலைவில் உள்ள கட்டிடத்தில் இருந்து பெறுவதும், காலவிரையம் பொருள் விரையம் மற்றும் நிர்வாகக் குறைபாட்டை தானே ஏற்படுத்தும்?
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தக் கட்டடத்தின் மேல்மாடி களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்படுவதற்கு பல வணிகர்கள், குறிப்பாக, ரிட்சி தெருவில் மின்னணு சாதனங்களை விற்கும் வணிகர்களும், புதுப்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தே வந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் அந்தக் கடைகளை அங்கிருந்து காலி செய்யப்பட்டுவிடும் என்ற அச்சத்திலேயே அவர்கள் இருந்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மத்திய பகுதியில் உள்ள அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் மிகுந்த இடர்ப்பாடு ஏற்படுகிறது.
எனவே, மேம்பாலங்கள் கட்டப்பட்டால் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கலாம் என்பதை உணர்ந்து, முந்தைய அரசு, மேம்பாலங்கள் கட்டப்படும் என்று 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவித்திருந்தது.
2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அண்ணா சாலையில் உள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் மேம்பாலங்கள் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் என குறிப்பிடப்பட்டது.
மேலும் 2010-2011 ஆம் ஆண்டு அத்துறை சார்ந்த அறிவிப்புகளில், சென்னை அண்ணா சாலையில் மேம்பாலங்கள் என்ற தலைப்பில், ரூபாய் 500 கோடி மதிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தில், அண்ணா சாலையில் புதிய சட்டப் பேரவை வளாகத்திற்கும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு இடையே துவங்கிபட்டு லாஸ் சாலை சந்திப்பு வரை சுமார் 2.00 கி.மீ. நீளத்திற்கும், அண்ணா அறிவாலயம் அருகே துவங்கி சைதாப்பேட்டை மாம்பலம் கால்வாய் வரை சுமார் 3.00 கி.மீ. நீளத்திற்கும் இரண்டு சாலை மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில், புதிய தலைமைச் செயலகப் பகுதியில் உள்ள அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது. இவ்வாறு நிர்வாக வசதியே இல்லாமல், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஒரு பக்கமும், பல துறைகள் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலும் இயங்கி வந்தால், அரசை நிர்வகிக்க இயலாது என்பதால் தான் சட்டமன்றம் மற்றும் அரசுத் துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால், புனித ஜார்ஜ் கோட்டையில் எனது பணியைத் தொடருவேன் என்று தேர்தலின் போதே நான் அறிவித்திருந்தேன்.
எனவே, நிர்வாக நலன் கருதி நான் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தே செயல்பட முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
No comments:
Post a Comment