நியூயோர்க், அமெரிக்கா: Sony நிறுவனத்துக்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அவ்வளவு சந்தோஷமான தினமாக இருந்திருக்க முடியாது. காரணம், நேற்று வெளியிடப்பட்ட அவர்களின் வருடாந்த வரவு-செலவு கணக்கில் காட்டப்பட்டிருப்பது, 360 பில்லியன் யென் (ஜப்பானிய கரன்சி) நஷ்டம்!
Sony நிறுவனத்தின் இந்த வருடக் கணக்குகள், Red Inkல் (நஷ்டம் காட்டுவதை அப்படித்தான் அழைப்பார்கள்) காட்டப்பட்டுள்ளதற்கு, ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற பூகம்பம் காரணமல்ல. ஏனென்றால், இந்த நஷ்டத்தின் பெரும்பகுதி சென்ற வருடத்திலிருந்து கொண்டுவரப்பட்டது!
உலக அளவிலான பொருளாதார சீர்குலைவு ஒரு காரணம், அதிகரித்த எண்ணைவிலை ஏற்றுமதிச் செலவை அதிகரித்தது மற்றொரு காரணம். மூன்றாவது காரணம், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட கொரியப் பொருட்களின் அருமையான சந்தைப்படுத்தல்.
ஒருகாலத்தில், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கச் சந்தைகளுக்குள் நம்பகத்தன்மையற்ற பொருட்களாக ஒதுக்கப்பட்டவை கொரியத் தயாரிப்புகள். இன்று நிலைமை தலைகீழ். அவற்றின் திறமையான மார்க்கெட்டிங், அட்வர்டைசிங் ஆகியவை அவற்றைத் தாங்கி நிற்கின்றன.
2010க்குப் பின், ஜப்பானியப் பொருட்களில் கார்களைத் தவிர வேறெந்தப் பொருளுக்கும் தனித்துவ மார்க்கெட் கிடையாது.
Sony நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ரெட் இங்க் வரவு-செலவு அறிக்கை, அவர்களது பங்குகளை நியூயோர்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் சிறிதளவு சரிய வைத்திருக்கின்றது. ஆனாலும், நிலைமை எதிர்பார்த்த அளவுக்கு மோசமில்லை.
Sony நிறுவனத்தின் சீஃப் பைனான்சியல் ஆபிசர் மசாரு காட்டோ, இந்த நஷ்டம் தமது கையிருப்பிலுள்ள நிதியையோ, நிறுவனத்தின் ஓவர்ஆல் நிதிநிலைமையையோ பாதிக்காது என்று உறுதி செய்திருக்கின்றார். நிறுவனத்தின் கேஸ் ஆன் ஹான்ட், இதைப்போல மூன்று நஷ்டக் கணக்குகள்வரை சமாளிக்கும் அளவில் உறுதியாக இருக்கின்றது.
இருப்பினும், Sony நிறுவனம், செலவு குறைந்த தயாரிப்பு முறைகள் பற்றி அதிகம் அலசத் தொடங்கியுள்ளது. இந்த வருடம், மூன்றாம் உலக நாடுகளில் தொழிற்சாலைகள் தொடங்குவதுதான் அவர்களது முன்னுரிமையாக இருக்கப்போகின்றது.
No comments:
Post a Comment