சூப்பர் ஸ்டார் ரஜினி பூரண உடல் நலத்துடன் வந்ததும் ராணா படப்பிடிப்பு முழு வேகம் பெறும் என்று என்வழி இணையதளத்துக்கு தெரிவித்தார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
ரஜினியின் உடல்நிலை காரணமாக அவர் 3 வேடங்களில் நடிக்கும் ரூ 100 கோடி பட்ஜெட் படமான ராணா கைவிடப்படலாம் என ஆங்கில நாளிதழ் ஒன்றும், சில இணையதளங்களும் சில தினங்களாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
ரஜினி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்த நிலையில், இப்படி ஒரு வதந்தி செய்தி வடிவில் வந்ததால் ரசிகர்கள் இன்னும் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் அதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் ‘என்வழி’ சார்பில் பேசினோம்.
அவர் கூறுகையில், “யார், எங்கிருந்து எப்படி இதுபோன்ற அபாண்டமான வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் கேட்கும்போது கோபம் கோபமாக வருகிறது.
ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ஒரு குற்றமா… உங்களுக்கும் எனக்கும் இதுபோல உடம்பு சரியில்லாமல் போகாதா.. அப்படித்தான். ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்.
ஆனால், வெளியில் பேசப்படுகிற அளவுக்கு அவர் உடல்நிலை மோசமாக இல்லை. அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
உண்மையில், ரஜினி சார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வரும் ஜூலையிலிருந்துதான் படமாக்கத் திட்டமிட்டிருந்தோம்.
அதுவரை ரஜினி சார் நன்கு ரெஸ்ட் எடுப்பார். சமீபத்தில்தான் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக, தாய்லாந்து மற்றும் புக்கட் தீவுக்கு சென்று வந்தேன். அடுத்து லண்டன் போக வேண்டியுள்ளது. ரஜினி வருவதற்குள் இந்த வேலைகளை முடித்து நாங்கள் தயாராக இருப்போம்.
மற்றபடி ராணா கைவிடப்படும் என்பதும், அதுகுறித்து ஈராஸ் நிறுவனம் பேசியதாகவும் வருகிற வதந்திகளையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,” என்றார்.
No comments:
Post a Comment