Saturday, May 7, 2011

ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ‘ஸ்டெல்த்’ ஹெலிகாப்டர்கள்!

ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை (‘stealth’ technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக சிறப்பு வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிய படையினர், அதை குண்டு வீசி அழித்துள்ளனர். ஆனால், அந்த ஹெலிகாப்டர்கள் முழுமையாக சிதையவில்லை.


வால் பகுதி மட்டுமே சிதறியுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் முழு அளவிலேயே அப்படியே கிடந்தது. இதை பாகிஸ்தானிய படையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர். அதை அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கக் கூறியுள்ளதாகத் தெரிகிறது

ரேடார்களில் இருந்து தப்ப அந்த ஹெலிகாப்டரின் முனைகளை மேலும் கூர்மையாக்கியுள்ள அமெரிக்கா, அதன் சத்தத்தைக் குறைக்க இறக்கைகளை மேலும் சிறிதாக்கியுள்ளது.

முன்னதாக இந்தத் தாக்குதலுக்கு 4 பிளாக்ஹாக் (Blackhawk) ரக ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அங்கே விட்டுச் சென்ற ஹெலிகாப்டரை பார்த்தபோது, அது பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர் போலவே இல்லை.

கிட்டத்தட்ட F-117 ரக விமானத்தைப் போல காணப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்கள், பாகிஸ்தானின் ரேடார்களில் மண்ணைத் தூவிவிட்டு அந்த நாட்டுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள், அபோடாபாத்துக்கு வந்து தங்கள் தலைக்கு மேலே பறக்கும் வரை எங்களுக்கு சத்தமே கேட்கவில்லை என்று பின்லேடனின் வீட்டுக்கு அருகில் வசிப்போர் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் வெற்றியடைய முக்கிய காரணமே இந்த ஹெலிகாப்டர்கள் என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எந்தவித ஆயுதமும் கையில் இல்லாத நிலையில், அமெரிக்க வீரர்களிடமிருந்து அதி வேகமாக பாய்ந்து வந்த குண்டுகள் நெற்றிப் பொட்டிலும், மார்பிலும் பாய்ந்ததால் சுருண்டு விழுந்து இறந்துள்ளார் அல்கொய்தா தலைவர் பின்லேடன். தலையில் பாய்ந்த குண்டு பின்லேடனின் தலையின் மேற் பகுதியை அப்படியே பிளந்து விட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

தலையில் குண்டு பாய்ந்ததில், பின்லேடனின் மண்டை ஓடு பிளந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பார்க்கவே படு கோரமாக இருப்பதால்தான் இந்தப் படத்தை வெளியிட அமெரிக்கா தயங்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வெளியிட்டால், உலகம் முழுவதும் பின்லேடன் மீது பச்சாதாப உணர்வு வந்து விடுமோ? என்று அமெரிக்கா பயப்படுகிறது.

பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க செனட் சபையின் புலனாய்வுப் பிரிவு தலைவரான டியான் பெய்ன்ஸ்டீன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,

"கிட்டத்தட்ட 38 நிமிடங்களுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. மேல் மாடி வழியாக உள்ளே புகுந்த அமெரிக்க சீல் படையினர், மேல் மாடியில் இருந்த பின்லேடனைப் பார்த்ததும் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது பின்லேடனிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் ஆயுதங்கள் இருந்துள்ளன.

அதை அவர் எடுக்க தயாராவர்க்குள் அமெரிக்கப் படையினர் அதி வேகமாக சுட்டுள்ளனர். ஒரு குண்டு அவரது நெற்றிப் பொட்டில் பட்டு தலையை துளைத்துச் சென்றது. இதில் தலை பிளந்துவிட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்தது. அதி வேகமாக நடந்த இந்த தாக்குதலால் பின்லேடன் உடனடியாக இறந்து போனார்" என்றார்.

இன்னொரு அதிகாரி கூறுகையில், "பின்லேடன் சரணடைய மறுப்பது போல நடந்து கொண்டதாலும், ஆயுதத்தை எடுக்க முயல்வது போல நடந்ததால் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தினர்" என்றார்.

பின்லேடன் உடல் மற்றும் அவரது தலை ஆகியவை அடங்கிய புகைப்படங்களைப் பார்த்த ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், "பின்லேடனின் இடது கண்ணுக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. அதி வேகமாக பாய்ந்ததால் தலையின் மேற் பகுதி அப்படியே பிளந்து போய் விட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்துள்ளது" என்றார்.

பையில் இருந்த யூரோ பணம்:

பின்லேடனைக் கொன்ற பின்னர் உடலைக் கைப்பற்றிக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு விரைந்த அமெரிக்கப் படையினர் பின்லேடன் வீட்டிலிருந்த பல பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

10 ஹார்ட் டிரைவ்ககள், ஐந்து கம்ப்யூட்டர்கள், 100க்கும் மேற்பட்ட சிடி, டிவிடிக்கள் ஆகியவை இதில் அடக்கம். மேலும் பின்லேடனின் சட்டைப் பையில் 500 யூரோ பணம் இருந்ததாகவும், சில தொலைபேசி எண்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

ஐந்து செல்போன்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஏ.கே.47 உள்ளிட்ட ஐந்து துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏதாவது ஆபத்து நேரிட்டால் உடனடியாக தப்பிப் போகும் அளவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் பின்லேடன் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கப் படையினரின் மின்னல் வேகத் தாக்குதலிலிருந்து அவனால் தப்ப முடியாமல் போய் விட்டது.

No comments:

Post a Comment