Saturday, July 9, 2011

சக்சேனாவுக்கு 15 நாள் சிறைக்காவல்

சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் 15 நாள் சிறையில் வைக்க, சைதாப்பேட்டை கோர்ட் மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் செல்வராஜ். இவர், சென்னை கே.கே., நகர் போலீஸ் ஸ்டேஷனில், சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்தார். அப்புகார் தொடர்பாக சக்சேனாவை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடத்துவதற்கு, சக்சேனாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் கோர்ட்டில் சக்சேனாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.சக்சேனாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்ற மனு, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்துவிடும் வாய்ப்பு இருப்பதால், சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு வழக்கறிஞர் கோபிநாத் ஆட்சேபனை செய்தார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.


சக்சேனா மற்றும் அவரது கூட்டாளியான அய்யப்பன் மீது, சேலத்தைச் சேர்ந்த மற்றொரு வினியோகஸ்தர் சண்முகவேலு, கே.கே., நகர் போலீசில் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். "தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தின் வினியோக உரிமை வழங்குவதில் சக்சேனாவுக்கும் தனக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக சக்சேனாவும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரும் தன்னை தாக்கி, ஒரு அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாகவும் அப்புகாரில் கூறியுள்ளார்.


அப்புகார் தொடர்பாக சக்சேனா, அய்யப்பன் ஆகியோரை நேற்று மாலை, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாள் சிறைக்காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.இதற்கிடையில், சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் சண்முகவேலு கொடுத்த புகாரில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்ற மனுக்களை, வழக்கறிஞர்கள் நேற்று தாக்கல் செய்தனர். ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 11ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி தள்ளி வைத்தார். இதையடுத்து, சக்சேனா, அய்யப்பன் ஆகியோரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment