Wednesday, July 20, 2011

ஜாபர் சேட் மீது பல கோடி ரூபாய் மோசடி புகார்

02

பல கோடி ரூபாய் அரசு பணத்தை மோசடி செய்ததாக, முன்னாள் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், அந்த மாநிலத்தின் முதலமைச்சரை பலி வாங்கியது. போரில் இறந்த ராணுவத்தினரின் குடும்பத்துக்காக கட்டப்ப ட்ட அடுக்குமாடி குடியிருப்பில், முதலமைச்சராக இருந்த அஷோக் சவானும், உயர் அதிகாரிகளும் ஒதுக்கீடு செய்து கொண்டார்கள். இந்த ஊழல் நாட்டையே உ லுக்கியது. இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தமிழகத்தில் அரசு நிலங்கள் முன்னாள் முதல்வருக்கு வேண்டப்பட்டவர்கள், அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து பலமுறை புகார் கொடுக்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் இதுகுறித்து உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி. இந்த புகாரை டி.ஜி.பி. ராமானுஜத்திடம் கொடுக்கும்படி சொல்லியுள்ளார். இதையடுத்து அவரிடமும் புகார் கொடுத்து, விவரங்களைச் சொல்லியுள்ளார். இதையடுத்து புகழேந்தியின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து புகழேந்தியிடம் பேசினோம்.

“ஜாபர் சேட்டுக்கு, 1995-ல் நான்கு வீட்டு மனைகள் சென்னை முகப்பேரில் ஒதுக்கப்பட்டது. அந்த மனைகளில் வீடு கட்டினார். 2008-ல் சென்னை திருவான்மியூரில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனை ஜாபர் பெயருக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஒதுக்கப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டு அதே வீட்டு மனை எண்- 540 ‘சமூக சேவகர்’ என்ற பிரிவில் அவர் மகள் ஜெனிஃபர் பெயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் மகள் ஜெனிஃபரும், வீட்டு மனைக்கான தொகையான ரூ. 1.26 கோடியை ஒரே நாளில் கட்டினார். ‘கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ஏது இவ்வளவு தொகை? என்று கேள்வி கேட்பார்களே என்று, அந்த ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வைக்கிறார் ஜாபர்.

மீண்டும் அந்த வீட்டு மனை எண்- 540, ஜாபரின் மனைவி பர்வீன் ஜாபருக்கு அதே ‘சமூக சேவகர்’ என்ற பிரிவின் கீழ் ஒதுக்கப்படுகிறது. மூன்று முறை அரசாணை மாற்றப்பட்டுள்ளது என்றால் என்ன அர்த்தம்?

அந்த வீட்டு மனையையும், தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து அதில் 12 வீடுகளைக் கட்டி பல கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். இதன் மூலம் அவர் அரசு பணத்தை மோசடி செய்திருக்கிறார். வீடு வாங்க வசதி இல்லாத ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட வீட்டு வசதி வாரியத்தின் நிலங்களை அதிகாரம் படைத் தவர்கள் இது போல அபகரிப்பது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் புகார் கொடுத்தேன்’’ என்றார் புகழேந்தி.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தனக்கு ஒதுக்கீடு வாங்கியதற்காக மட்டுமல்ல... தனக்குக் கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு நிலம் ஒதுக்க அனுமதி கொடுத்த விவகாரத்தி லும் ஜாபர் சேட் விதிகளை மீறியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், வினோதன் மற்றும் கணேசன் ஆகியோருக்கு அரசு நிலத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்துள்ளார்’’ என்ற புதிய குற்றச்சாட்டைச் சொன்னார்.



“பாண்டியன் என்பவர், இரண்டாம் நிலை ஆயுதப்படைக் காவலராக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர். ஆரம்ப காலம் முதலே தி.மு.க. தலைவர் கருணாநிதியோடு இருந்த நெருக்கம் காரணமாக, காவலராக பணியில் சேர்ந்தவர், கடந்த ஆட்சிக் காலத்தில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு கொடுத்த பதவி உயர்வில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை.

இந்த சலுகையோடு, முதலமைச்சரின் விருப்புரிமைக் கோட்டாவின் கீழ் இவரது மனைவிக்கு சென்னை முகப்பேரில், உயர் வருவாய்ப் பிரிவினர் குடியிருக்கும் பகுதியில் இரண்டு கிரவுண்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவரைப் போன்ற மற்ற இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளான வினோதன் மற்றும் கணேசனுக்கு ‘அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்’ என்ற பிரிவின் கீழ் இதே போல முகப்பேரில் தலா இரண்டு கிரவுண்டுகள் ஒதுக்கப்பட்டது. பாண்டியனுக்கு, உதவி ஆய்வாளராக பணி புரிந்த காலத்தில், ஒரு தண்டனை இருப்பதால், இவர் ‘அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்ற பிரிவில் ஒதுக்கீடு பெற வழியில்லை. இதனால், இவர் மனைவி மீனா பெயரில், ‘சமூக சேவகர்’ என்ற பிரிவின் கீழ் 2008-ம் ஆண்டு ஒதுக்கீடு பெற்றார். மீனா ரத்த தானம் செய்துள்ளார் என்று ஒரு அமைப்பு கொடுத்த சான்றிதழை வைத்தே, அவருக்கு சமூக சேவகர் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 கிரவுண்டு நிலத்தின் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய். ஆனால் இவருக்கு வெறும் 75 லட்சத்து 28 ஆயிரத்துக்கு கருணாநிதி இந்த நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.

75 லட்சமாக இருந்தாலும், அதைக் கட்டுவதற்குக் கூட, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் அப்போது இருந்த பாண்டியனுக்குப் போதுமான ஊதியம் இல்லை. ஆனாலும், 31 மார்ச் 2008-ல் மீனா, மொத்த தொகையான 75 லட்சத்தையும் ஒரே தவணையில் செலுத்துகிறார்.

ஒரு அரசு ஊழியர் அசையா சொத்தை வாங்கும்போது, அரசிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும். அதற்குப் பின்னரே சொத்தை வாங்கமுடியும். ஆனால், பாண்டிய ன், முன் அனுமதி பெறாமல், வாங்கிய பிறகு பின் அனுமதி கேட்டு உளவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பாண்டியன், தனது மனைவி மீனாவுக்கு வீடு ஒதுக்கீடு கிடைத்திருப்பதாகவும், அந்த வீட்டை மீனா, கல்யாண் குமார் என்பவரின் மனைவி பத்மா எ ன்பவருக்கு பவர் ஆப் அட்டார்னி மூலம் ரூபாய் 95 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அதன் மூலம் 20 லட்ச ரூபாய் லாபம் கிடைத்திருப்பதாகவும், இதற்கு பின்னேற்பு வழங்குமாறும் கேட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள பாண்டியனுக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டியவர், உளவுத்துறையின் டி.ஐ.ஜி. காவல்துறையில் டி.ஐ.ஜி.க்கு மனு அனுப்பும் நபர், அதை டி.எஸ்.பி., எஸ்.பி., மூலமாகவே அனுப்ப வேண்டும் என்பது விதி. ஆனால், பாண்டியன் நேரடியாக அப்போது ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட்டிடம் கொடுத் தார். ஜாபர் சேட்டும், உரிய வழி மூலமாக மனுவை அனுப்பும் படி பாண்டியனுக்கு அறிவுறுத்தாமல், அவரே அனுமதி அளித்து விட்டார்.

இதன் மூலம், பாண்டியனுக்கு சட்ட விரோதமாக 20 லட்ச ரூபாய் கிடைக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி, உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட், பாண்டியனின் மனைவி மீனா மற்றும் நிலத்தை வாங்கிய பத்மா ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, அரசை ஏமாற்றியிருக்கிறார்கள்.

அரசு விருப்புரிமைக் கோட்டாவில் கொடுத்ததை வாங்கிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் எப்படி நடந்திருக்கிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. வீட்டு வசதி வாரியம் மீனா பெயரில் வீட்டு மனையை ஒதுக்கீடு செய்தால், முதலில் மீனா, வீட்டு வசதி வாரியத்தின் பெயரிலிருந்து அந்த மனையைத் தன் பெயருக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகுதான், மீனா வேறு யாருக்காவது விற்க முடியும். இந்த விவகாரத்தில் பாண்டியனின் மனைவி மீனா, வீட்டு வசதி வாரியத்திலிருந்து வீட்டு மனையைத் தன் பெயருக்கு மாற்றாமலேயே பத்மா என்பவருக்கு விற்றிருக்கிறார். சிம்பிளாகச் சொன்னால், அரசு நிலத்தை மீனா தனி நபருக்கு விற்றிருக்கிறார். விற்ற பிறகு, ஒரே நேரத்தில், வீட்டு வசதி வாரிய நிலத்தை மீனாவுக்கும், பிறகு மீனா பெயரில் இருந்து பத்மாவுக்கும், பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பத்திரப்பதிவுக்கும் தேவைப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தையும் மீனா சார்பாக பத்மாவே கட்டியதாகவும் எங்களுக்குத் தெரியவந்தது. இப்படிப்பட்ட ஒரு மோசடியான பரிவர்த்தனைக்கு அரசு பின்னேற்பு கொடுத்திருக்கவே கூடாது. மாறாக, பாண்டியன் மீது துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பாண்டியன் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்ததால், இதை விசாரிக்க வேண்டிய ஜாபர் சேட், கோப்பை தானே வாங்கி அதற்கு அனுமதி அளித்துள்ளார். இதே கதைதான் மற்ற இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளான கணேசன், விநோதன் விவகாரத்திலும் நடந் துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தகவலைப் பெற்று அதன் அடிப்படையில் இந்த புகாரைக் கொடுத்துள்ளோம். மிரட்டி பறிக்கப்பட்ட தனியார் நிலங்களை உரியவர்களுக்கு மீட்டுக் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்கிறது. அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசு நிலத்தை அபகரித்த இவர்களிடம் இருந்தும் நிலங்களை மீட்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதில் யார் மீதும் தனிப்பட்ட கோபமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது’’ என்று முடித்துக் கொண்டார், புகழேந்தி.

ஏற்கெனவே பல்வேறு விசாரணை வளையத் தில் சிக்கியுள்ள ஜாபர் சேட்டுக்கு, இந்தப் புதிய விசாரணை நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

டி.ஜி.பி.யை மதிக்காத ஜாபர் சேட்!

தமிழக டி.ஜி.பி.யாக ஷெயின் இருந்தபோது ஒரு உத்தரவு போட்டார். அதன்படி சென்னையில் போலீஸ் அதிகாரிகளின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களுக்கு, அரசு குடியிருப்பில் வாடகை வீடு ஒதுக்கப்படாது என்று அந்த உத்தரவில் சொல்லியிருந்தார். ஆனால் சொந்தமாக வீடு வைத்திருக்கும் ஷாபர் சேட் கடந்த ஐந்தாண்டுகள் டி.ஐ.ஜி. குடியிருப்பில் வாடகை வீட்டில் இருந்தார். இதன் மூலம் டி.ஜி.பி.யின் உத்தரவை மதிக்காமல் நடந்துள்ளார், ஜாபர் சேட்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment