பாஸ்... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’
இப்படியொரு ரிங் டோன் வைத்திருந்தார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்!. தேர்தலுக்கு முன்பு வரையில் அவர் பெயரைக் கேட்டாலே தி.மு.க.வினர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அத்தனை பேருக்கும் நடுங்கத்தான் செய்தார்கள்.
தமிழகத்தின் நிழல் முதல்வர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வளர்ப்பு மகன் என்று இவரைச் சொன்னாலும், முதல்வருக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந் தார் ஜாபர் சேட். அது எப்படி சாத்தியமானது என்பது மல்லிகை நடிகைக்குத் தெரியுமாம். அத்தனை அதிகாரங்களும் பொருந்திய முதல்வர் கருணாநிதியே கூட, எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், “ஜாபர் கிட்ட சொல்லுய்யா’’ என்று சொல்லும் அளவுக்கு முழுக்க முழுக்க கருணாநிதியின் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண்களாகவும் காதுகளாகவும் திகழ்ந்தார். கருணாநிதியோடு 40 ஆண்டுக் கால நட்பு கொண்ட அமைச்சர்களே ஜாபரைக் கண்டால் மிரட்சியாகத்தான் பார்ப்பார்கள்.
தேர்தல் அறிவிப்பு வெளி வந்ததும், ஜாபர் சேட் மீதான புகார்கள் தேர்தல் ஆணையத்தின் முன் குவியத் தொடங்கின. ஜாபர் சேட்டை நேரில் வரவழைத்த ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி, மேற்கு வங்கத்திற்கு பார்வையாளராகச் செல்லும்படி உத்தரவிட்டது. அதனை ஏற்க மறுத்த ஜாபர் சேட், விடுப்பில் சென்றார். எப்படியும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்று நம்பிய ஜாபர் சேட், தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதும், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உளவுத் துறையின் தலைவராக இருந்த போது ஜாபர் செய்த காரியங்கள் அவரை இன்று சிக்கலில்இழுத்து விடப்போகின்றன. நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் ஜாபருக்கான தொடர்பு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை முடுக்கி விட்டு ள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “ஜாபர் சேட்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு பல்வேறு தகவல்கள் வந்து கொண்டுதான் இருந்தன. காலம் கனியட்டும் என்று காத்திருந்தோம்’’ என்றார். உளவுத்துறை வட்டாரங்கள் ஜாபரைப் பற்றி தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதும், லஞ்சமாக ஏராளமான பணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்தை தமிழகத்திற்குக் கொண்டு வந்தபோது அந்தப் பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதற்கு ஜாபர் உதவி புரிந்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ஜாபருக்கு மட்டும் பங்குத் தொகையாக ரூ. 300 கோடி கை மாறி உள்ளதாம். இந்தப் பணத்தை முதலீடு செய்வதில், ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், தமிழ் மையத்தின் ஜெகத் கஸ்பர் மற்றும் பத்திரிகையாளர் காமராஜ் ஆகியோர் ஒரு டீமாக செயல்பட்டுள்ளனர்..
இந்தப் பணத்தின் முதலீட்டில் ஒரு பகுதியாக சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ், தன் மனைவி பர்வீன் ஜாபர் பெயரில், திருவான்மியூரில் ஒரு வீட்டுமனையை கரு ணாநிதியிடம் இருந்து பெற்றார். அந்த வீட்டுமனையில், இவரும், கருணாநிதியின் செயலாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்பவரும் சேர்ந்து ‘டிம்பர்ட்டன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் 12 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகின்றனர். இது தவிரவும், சென்னை தியாகராய நகரில் சில அடுக்குமாடி கட் டடங்கள் ஜாபர் சேட்டுக்காக கட்டப்பட்டு வருகின்றன என்கிறார்கள்.
ஜாபர் சேட்டும், இவரது பினாமியாக இருக்கும், அண்ணா நகர் ஜீவன் பீமா நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரும், அமர் என்பவரும் சேர்ந்து ‘லேண்ட் மார்க் கன்ஸ் ட்ரக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஜெய்சங்கர் பெயரில் ஜாபருக்குச் சொந்தமாக பி.எம்.டபிள்யூ மற்றும் ஜெடா என்ற 2 சொகுசு கார்கள் இருக்கின்றன.
பினாமி பெயரில் ஜாபர், அவருக்குக் கிடைத்த ஸ்பெக்ட்ரம் பணத்தை துபாயில் முதலீடு செய்திருக்கிறார். இந்த முதலீட்டுக்காக, பலமுறை துபாய் சென்று திரும்பியி ருக்கிறார். ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் ஒருவர், வெளிநாடு செல்வதென்றால் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியையும் மீறி, உளவுப் பணி தொடர்பாக ரகசிய அலுவலாகச் சென்று வந்தது போல, துபாய் சென்று வந்துள்ளார்.
அதே போல ஜாபர், சங்கர், ஜீவல் இருவரும் லண்டன் சென்றபோது இலங்கை தூதரக அதிகாரி அம்சாவை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான போர் நடந் தபோது, தமிழகத்தில் இருந்து புலிகளுக்கு ரத்தம் கொண்டு செல்லாமல் பார்த்ததற்காகவும், புலி ஆதரவாளர்கள் போனை ஓட்டுக் கேட்டு, தகவல் சொன்னதற்கும் அங்கு அவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்பட்டதாம்.
ராசா பெற்றுத் தந்த ஸ்பெக்ட்ரம் லஞ்சப் பணம் அத்தனையையும் நிர்வகித்தவர் ஜாபர் சேட்டே என்று அடித்துக் கூறுகிறார்கள் உளவுத் துறை வட்டாரத்தில். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றிருக்கிறார் ஜாபர். டெல்லி சென்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்கினால், அவரைப் பார்க்க வருபவர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என்பதற்காக, ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தங்கினார் என்கிறார்கள். ராசாத்தி அம்மாள் சார்பில், டாடா குழுமத்திடம் பேசி, கைமாறாக, அண்ணா சாலையில் உள்ள வோல்டாஸ் நிலத்தை பெற்றுத் தந்ததோடு அல்லாமல், அந்த நிலத்தை முதலில் டாக்டர் சண்முகநாதன் என்பவர் பெயருக்கு பதிவு செய்ததும் ஜாபர்தான்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாகத் தொடங்கியதும், அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கும், தடயங்களை அழிப்பதற்கும் ஜாபர் சேட் பிரம்மப் பிரயத்தனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் காமராஜ் மற்றும், ஜெகத் கஸ்பர் இல்லங்களை சி.பி.ஐ. ரெய்டு செய்தது முதல், ஜாபரின் தடயங்களை அழிக்கும் பணி தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
கலைஞர் டி.வி.யில் நள்ளிரவு சோதனை நடந்தது முதல், தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சி.பி.ஐ. விசாரணை செய்தது வரை, அத்தனை நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து, சி.பி.ஐ.க்குத் தவறான தகவல்களைத் தந்து விசாரணையை தவறான வழியில் போகச் செய்ய ஜாபர் செய்த ஏற்பாடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கடும் எரிச்சலோடு கவனித்து வந்திருக்கிறார்கள். சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டிருந்த சமயத்தில், சென்னையில் உள்ள இணை இயக்குநர், டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அத்தனை அதிகாரிகளின் தொலைபேசிகளையும் ஜாபர் ஒட்டுக் கேட்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, எத்தனை மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வரப்போகிறார்கள் என்பதை துல்லியமாக கருணாநிதிக்குச் சொன்ன விவரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராசாவோடு இன்றும் தொடர்பில் இருக்கிறாராம். டெல்லியில் உளவு வேலை பார்க்கும் தேவதாஸ் என்ற போலீஸ்காரர், ராசாவைப் பார்த்து போன் போட்டு ஜாபரிடம் பேச வைக்கிறாராம். பல்வாவிடமும் இப்படி ஜாபர் பேசியிருக்கிறாராம்.
2ஜி விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்த சாதிக் பாட்சா மரணத்தில், காமராஜுக்கும், ஜாபருக்குமான தொடர்புகள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சாதிக் இறந்த கடைசி வாரத்தில், காமராஜ் சாதிக்கோடு தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். சாதிக்கின் மர்மமான மரணம் குறித்து ஜாபருக்கு பல தகவல்கள் தெரியும் என்றே சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜாபரின் பங்கை மத்திய உளவுத்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறதென்றால், மாநில உளவுத்துறை தமிழகத்தில் ஜாபர் செய்த தகிடுதத்தங்களை விரிவாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக ஜாபர் இருந்தபோது, பத்திரிகையாளர் காமராஜுக்கு நெருக்கமான தொழிலதிபருக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த பூவான பிரமுகருக்கும் ஏற்பட்ட உரசல், காவல்துறை வரை போயிருக்கிறது. திருமழிசை சாலையிலும், திருத்தணியிலும் நடந்து கொண்டிருந்த கட்டுமானப் பணிகள் தொடர்பாக அந்த உரசல் ஏற்பட்டிருக்கிறது. காமராஜ், ஜாபர் சேட்டை அணுகியதும், அந்தப் பிரமுகரையும் அவர் ஆட்களையும், பல பொய் வழக்குகளைப் போட்டு, சிறையில் அடைத்திருக்கிறார் ஜாபர். அப்போது தொடங்கிய ஜாபர் சேட் காமராஜுக்கிடையிலான நட்பு, இன்று வரை தொடர்கிறது.
ஜாபருக்குப் பிடிக்காத அதிகாரிகள் மீது, அவருக்கு நெருங்கிய நண்பரும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த சுனில்குமார் மூலமாக பொய் வழக்குப் போடு வது வழக்கம். இதற்கு உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீது தொடர்ந்த பொய் வழக்கை, உதாரணமாக சுட்டிக் காட்டுகின்றனர்.
வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குப் போடுவது ஒரு பக்கம் என்றால், உண்மையான ஊழல் வழக்கில் சிக்கிய மதுரையைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழகிரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த வழக்கை மூடியது மட்டுமல்லாமல், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி இசக்கி ஆனந்தனை இடமாற்றம் செய்ததையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஜாபருக்கும், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோருக்கும் வீட்டு வசதி வாரிய மனைகளை ஒதுக்கியது தொடர்பாக செய்தி ஒளிபரப்பிய ஒரு ஆங்கில சேனலின் மீது கடும் கோபம் அடைந்த ஜாபர் சேட், அந்தச் சேனலின் நிர்வாகிகள் மீது, காமராஜை வைத்து வழக்குப் போட வைத்ததையும் குறிப்பிடுகின்றனர்.
அமிர்தத்தின் மகன் குணநிதி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலின் வாட்ச்மேனை துப்பாக்கியால் சுட்ட, 15-வது நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜாபர் சேட், குணநிதியைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதையும் மாநில உளவுத்துறை விசாரித்து வருகிறது.
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ஏராளமானோரின் தொலைபேசிகளை இரண்டு தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தி ஒட்டுக் கேட்டதும், அதற்காக உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பெரும் தொகையை ஜாபர் சேட் கொடுத்ததும் அவருக்கு பெரும் தலைவலியை உ ண்டு பண்ணும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.
ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நபரைச் சுற்றி இன்று மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும் ஒரே நேரத்தில் வளையத்தை இறுக்குவதை காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நன்றி குமுதம் ரிப்போர்டர் |
No comments:
Post a Comment