Wednesday, July 6, 2011

அரசு கேபிளுக்காக சக்சேனா கைதா ? ஜுனியர் விகடன் சந்தேகம்.

.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்!

கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது.

'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் சக்சேனாவை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது போலீஸ்.

சக்சேனா மீது புகார் கொடுத்தவர், சேலம் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பொருளாளரும், கந்தன் ஃபிலிம்ஸ் உரிமையாளருமான செல்வராஜ். என்ன நடந்தது?

செல்வராஜ் தரப்பில் பேசினோம். ''விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு ஃபைனான்ஸ் செஞ்சோம். அவங்க அந்தப் படத்தை மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு வித்துட்டாங்க. படத்தின் சேலம் மாவட்ட உரிமத்தை இனியவேல் குரூப்புக்கு 1.25 கோடிக்குக் கொடுத்தாங்க. ஆனா, அவங்களால் சொன்ன நேரத்துக்கு பணத்தை செட்டில் பண்ண முடியலை. பட ரிலீஸுக்கு முன்பு சேலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்கள் செல்வராஜை அழைத்துப் பேசி, 'உங்களுக்குத் தயாரிப்பாளர் தரப்பில் தர வேண்டிய 1.25 கோடிக்குப் பதிலாக, சேலம் மாவட்ட உரிமத்தை எடுத்துக்கோங்க. படத்தோட வசூலில் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துட்டு, மீதியை எங்களுக்குக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

ஆனா, படம் எதிர்பார்த்த மாதிரி போகலை. மொத்த வசூலே 43 லட்ச ரூபாய்க்குள்தான். செல்வராஜுக்கு தர வேண்டிய மீதி 82 லட்சத்தைக் கேட்டு, பல தடவை அவர்களது அலுவலகத்துக்கு நடந்தார். ஆரம்பத்தில் அமைதியாப் பேசிட்டு இருந்த சக்சேனா ஒரு கட்டத்தில், 'பணம் எல்லாம் தர முடியாது. உன்னால் என்ன முடியுமோ, அதை நீ பார்த்துக்கோ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார். நாங்களும் பல தரப்புகளில் இருந்து பேசிப் பார்த்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலை. அதோட, எங்களுக்கும் மிரட்டல் விடுத்துட்டே இருந்தாரு. வேறு வழி தெரியாமத்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் செஞ்சோம்...'' என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே இதே சக்சேனா மீது, செக்கர்ஸ் ஹோட்டலைத் தாக்கியதாக ஒரு புகார் உள்ளது. விஜய் நடித்த 'காவலன்’ பட விவகாரம் தொடர்பாகவும் சக்சேனா மீது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சக்சேனாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க, சைதாப்​பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது போலீஸ் தரப்பு. அதே தினத்தில், சக்சேனாவும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '5-ம் தேதி சக்சேனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

போலீஸ் கஸ்டடி கிடைக்கும்பட்சத்தில், சக்சேனா மீது உள்ள வேறு சில வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறதாம் காவல் துறைத் தரப்பு.

சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் பேசினோம். ''சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!'' என்று சொன்னார்.

சக்சேனா தரப்பில் சைதை நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரண்டே பக்க காகிதத்தில் அவசர அவசரமாக இந்த வழக்கை தயாரித்து உள்ளது தமிழக போலீஸ். இதைச் சொல்லி நாங்கள் ஜாமீன் கேட்டோம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து புதிய வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறோம். மற்றபடி இது ஜாமீன் தரக்கூடிய சாதாரண வழக்குதான். போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கு அல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் சொல்வோம்!'' என்று கூறினார்.

சக்சேனா கைது செய்யப்பட்ட அதே தினத்தன்று, அரசு கேபிள் டி.வி. அமைப்புக்கான தலைமை அதிகாரிகளை நியமித்து அரசின் அறிவிப்பும் வெளியானது. ஒரு புறம் அரசு கேபிள் டி.வி-யை துவங்குவதற்கான அதிரடி வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில், குறைந்தபட்சம் சில நாட்களாவது கேபிள் ஆபரேட்டர்களிடம் யாரும் பேசி மனதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சக்சேனாவை சிறையில் அடைத்தார்களோ என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

நன்றி ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment