Friday, July 8, 2011

வீரபாண்டி ஆறுமுகத்தின் ரூ.450 கோடி மெகா ஊழல்!

கடந்த வாரம் வேளாண்துறையின் கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஜெயலலிதா. ‘இந்த நாட்டின் முதுகெலும்பே விவசாயிகளும், விவசாயமும்தான். எனவே, வேளாண்துறையை வளர்க்க, விவசாயிகளுக்கு உண்மையாகவே நன்மை செய்திட என்ன செய்யலாம்?’ என்று விவாதித்தார். அதேபோன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஸ்ரீரங்கம் சென்ற முதல்வர், அங்கும் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து ரூ.190 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவையான விவசாயத்தை வளர்க்கும் விதமாக தோட்டக்கலை பல்கலைக்கழகத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எல்லாம் விவசாயம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளில் இருக்க, நடந்து முடிந்த தி.மு.க ஆட்சியில் வேளாண் துறையில் மெகா ஊழல்கள் நடந்திருப்பது கண்டு தமிழகத்தின் தோட்டக்கலை துறை அதிர்ந்து போயிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக வேண்டி இந்த தோட்டக்கலைத் துறையில் ஆர்வம் காட்டியது மத்திய அரசு. ஒரு வருடத்திற்கு அறுபது கோடி ரூபாயை மானியமாகவே தமிழகத்திற்குக் கொடுத்து வருகிறது. இது தவிர, ஐம்பது சதவீத மானிய விலையில் வேறு அறுபது கோடியை கொடுத்து வருகிறது. ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என்று வைத்திருக்கும் விவசாயிகள் அந்தந்த மாவட்ட நிலைக்கு ஏற்ப வாழை, மா, முந்திரி, நெல்லி, மல்லிகை என்று தங்கள் வசதிக்கேற்றதைப் பயிர்செய்து கொள்ளலாம். அதற்கான விதை, பூச்சி மருந்து உரம், தேவையான கருவிகள் என்று தேவையான அனைத்தையும் மத்திய அரசு பணத்தில் இலவசமாகவே கொடுக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் கோப்புகள் அப்படி கொடுத்ததாக மட்டுமே கணக்கு காட்டியுள்ளது. உண்மையில் அப்படி ஏதும் அதிசயம் நடந்தேறவில்லை. விவசாயிகளின் வாழ்வும் செழிக்கவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இப்படி ரூ.450 கோடிகளை ‘ஊழலாகவே’ பயிர் செய்திருக்கிறார் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இனி எப்படியெல்லாம் அந்த ஊழல் விவசாயம் நடந்தேறியது என்பதைப் பார்க்கலாம்.

அந்தந்த பகுதிகளில் உள்ள பயன்பெறும் விவசாயிகளின் பெயர் பட்டியல் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விதை கொடுப்பதில் தொடங்கி, அது விளைச்சலாகும் வரையிலான எல்லாவிதப் பொருட்களையும் மாநில அரசின் தோட்டக்கலைத் துறையே கொடுக்க வேண்டும். இதில நீரில் கரையும் உரத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு அறுபது கோடி கொடுக்கப்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களை நீரில் கலந்து சொட்டு நீர்ப் பாசன முறையில் விவசாயிகளுக்கு தரவேண்டும். அதற்கான கருவிகள்கூட இலவசமே. தோட்டக்கலைத் துறை கொடுத்திருக்க வேண்டும். விவசாயிகள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் நடக்கவே இல்லை. எந்தவித அங்கீகாரமும் இல்லாத லெட்டர் பேட் கம்பெனிகளுக்குதான் அதற்கான டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்பதை தோண்டினாலே அமைச்சரின் நிஜமுகம் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பது வேறு செய்தி. அந்த லெட்டர்பேட் கம்பெனிகள் ‘எல்லாமும் கொடுக்கப்பட்டு’ வந்ததாக சொல்கிறார்கள். சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் போதிய(!) ஒத்துழைப்புத் தரவில்லை என்றால் வேறு வழியைக் கையாள்வார்கள். அதாவது மார்க்கெட்டில் உள்ள டி.ஏ.பி, மற்றும் பொட்டாஷ் உரங்களை வாங்கி, அதை நீரில் கலந்து, உண்மையாகவே அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். அதைதான் விவசாயிகள் சொட்டுநீர் மூலம் தெளித்து வருவார்கள்.

பொட்டாசியம் நைட்ரேட், மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஆகிய மருந்துகள் ஒரு கிலோ நூறு ரூபாய். ஆனால், இந்த கலப்பட உரங்களின் மதிப்பு ஒரு கிலோ 7.50 மட்டுமே. பெரும்பாலான விவசாயிகள் போலி நபர்களாக, வெறும் பெயர் பதிவில் மட்டுமே இருப்பார்கள். இருக்கும் ஒரு சிலருக்கும் உண்மையான உரம் மருந்துகளை கொடுப்பதில்லை. சூப்பர் தோட்டக்கலை புரட்சி! பல கோடிகள் கோவிந்தா...

இதில் வேடிக்கை என்னவென்றால் தோட்டக்கலை துறையில் இருந்து உரம் போன்றவைகளை டெண்டர் மூலம் பெறும் இந்த லெட்டர் பேட் கம்பெனிகள்தான் வேளாண்துறைக்கு மருந்துகளை சப்ளை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு பதினைந்து கோடி ரூபாய் அளவிற்கு இந்த நபர்களிடம் இருந்துதான் வேளாண் துறைக்கு பூச்சி மருந்து உரங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்(!?) என்ற வேதனையும் ஒன்று.

அடுத்து வேப்பம் புண்ணாக்கு சப்ளை. இது ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி சப்ளை. தோட்டக்கலை பயிர்களுக்கு பூச்சிகள் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகவும் சிறந்த சத்து உரமாகவும் உபயோகிக்கப்படுவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20,000 டன் கொள்முதல் செய்து தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறார்களாம். வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசின் புள்ளி விபரப்படி இவ்வளவு புண்ணாக்கு உற்பத்தி கிடையாது என்று சொல்கிறது. ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு மட்டும் எங்கிருந்தோ கிடைத்திருக்கிறது!

ரம்பத்தூள்களை வாங்கி, மக்கிப்போன வேறு புண்ணாக்கு தூள்களை வாங்கி அதில் வேப்பம் எண்ணெய்யை ஸ்பிரே மூலம் தெளித்து ‘வேப்பம் புண்ணாக்கு’ என்று கொடுத்து வந்தார்கள். இது ஏதோ கட்டுக்கதை அல்ல. கடந்த காலங்களில் ஜெயா டி.வி யில் செய்தியாக காட்டப்பட்டதுதான். அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பயிர் விவசாயிகளுக்கு வந்த ‘வேப்பம் புண்ணாக்கு’ பாக்கெட்டுகளை பார்த்து அதிர்ந்து போய் ஊடகத்தை அழைத்துக் காட்டினார்கள். அப்போது எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஜெயா டி.வி மட்டுமே ஒளிபரப்பியது.

அடுத்ததும் அக்கப்போர் ஊழல்தான். தோட்டக்கலை விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட மண் புழு உரம்! ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி, இதற்கு மட்டுமே. இந்த உரத்தை மண் புழுவின் எச்சத்திலிருந்து தயாரிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு 5,000 டன் முதல் 15,000 டன் மண்புழு உரம் வாங்கி விவசாயிகளுக்கு கொடுத்ததாக கணக்குக் காட்டியிருக்கிறது லெட்டர்பேட் கம்பெனிகள். இந்தியா முழுக்க உள்ள மண்புழு உரம் உற்பத்தியே அவ்வளவு இல்லை என்கிறது மத்திய அரசின் புள்ளி விபரம். அப்படியிருக்க தி.மு.க அரசுக்கு மட்டும் எங்கிருந்து எப்படி கிடைத்தது? வேறு என்ன.? வெறும் மாட்டுச்சாணத்தையே மணலில் கலந்து ‘இதுதான்பா அது’ என்று கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமும் கடந்த கால ஜெயா டி.வி.தான். நடப்பதிலேயே மட்டமான, கேவலமான ஊழல் இதுதான் என்று மக்கள் பேசும் அளவிற்கு ஜெயா டி.வி அதிர வைத்தது.

அதேபோன்று தோட்டக்கலை விவசாயிகளுக்கு மா, வாழை, நெல்லி, போன்ற விதைகள், செடிகள், மரக்கன்றுகள் வழங்கிய விவகாரம். இதற்கு மட்டுமே ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய். விதைகளை நட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டிய பாலிதீன் பை, கீழே அதற்கான பிளாஸ்டிக் விரிப்பு, அதிகம் வெயில் படாமல் வளர்வதற்கான நெட், ஷீட்டுகளுக்கு என்று ஆண்டிற்கு ரூபாய் ஒரு கோடி. ஆவணங்களின்படி பார்த்தால் டெண்டர் எடுத்த கம்பெனிகள், ‘எங்கேயோ வாங்கியிருக்கிறார்கள். கொடுத்தும் இருக்கிறார்கள்.’ ஆனால், எந்த விவசாயிகளுக்கு என்பதுதான் கேள்விக்குறி. சுத்தமாக அடித்து சுருட்டியிருக்கிறார்கள்.

அடுத்து உயர் உரம் என்கிற பயோ ஃபெர்டிலைசர்ஸ் சப்ளை செய்த விதம். தோட்டக்கலை பயிருக்குப் பயன்படுத்தும் உரம். இந்த உரத்தை தமிழக வேளாண்துறையே எட்டு மையங்களில் தயாரிக்கிறது. தவிர ஓராண்டுக்கு முன்புதான் மேலும் ஒன்பது யூனிட்டுகளை நிறுவியது. ஆனால், உற்பத்தியை தொடங்கவில்லை என்பது வேறு விஷயம். ஏற்கெனவே எட்டு உற்பத்தி மையங்களிலேயே இந்த பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாராகிறது. தோட்டக்கலைத் துறைக்கான உரத்தை இங்கிருந்தே வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க முடியும். அப்படி ஏதும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சருக்கு லாபம் வேண்டுமல்லவா? அதனால், அந்த லெட்டர்பேட் கம்பெனிகளுக்கே உரிமை கொடுக்கப்பட்டது! அவர்கள் தனியார் கம்பெனியில் வாங்கி இந்த உரத்தை கொடுத்தார்களாம். எந்த தனியார் கம்பெனி என்று பார்த்தால் மேலும் அதிர்ச்சி. அந்த தனியார் கம்பெனிகளுக்கு பயோ ஃபெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் கருவிகளே கிடையாது என்பதுதான். அப்படியானால் அந்த மாதிரி உரம கொடுக்கப்படவில்லையா என்று கேட்டால்.. அட கொடுத்தால்தானே விவசாயிகளுக்கு தெரியும் என்ற வேதனை குரல்தான் மிஞ்சுகிறது. இதில் மட்டுமே ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருக்கிறது.

இதுபோக செம்மொழி பூங்கா ஏற்காடு, மாதவரம், தென்காசி, ஊட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களுக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு பூங்கா வேலைகளை செய்யும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. பூங்கா வேலைகளை தொடங்குவதற்கு முன்பாகவே டெண்டர் விலையில் 40 சதவீதத் தொகையை முன் பணமாகவே கொடுத்து முடித்துள்ளதிலும் ‘வில்லங்கக்’ கதை. இந்த பெங்களூரு கம்பெனியும் சட்டத்திற்கு முரணாக வேறு கம்பெனிக்கு சப்-காண்டிராக்ட் கொடுத்தருக்கிறது. சென்னை செம்மொழி பூங்காவிற்கு சென்னையிலேயே உள்ள ஒரு காண்டிராக்டருக்கு மிக அதிக விலையில் பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என்ற விவரம் கோப்புகளில் உள்ளது.

இப்படி தோட்டக்கலை துறையில் நடந்தேறியது எல்லாமும் அப்பட்டமான ஊழல். அதுவும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எப்படி திடீர் கம்பெனிகள் பெயரில் அலைக்கற்றை ஒதுக்கி கொடுத்து, போகாத ஊருக்கு பணம் சென்று, சேராத நபர்களிடம் சேர்ந்ததோ அதே பாணியில் இந்த துறையிலும் நடந்தேறியிருக்கிறது. முன் அனுபவம் உள்ள டெண்டர்தாரர்களுக்குதான் டெண்டர் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் காற்றில் பறந்திருக்கிறது. அனுபவமே இல்லாத, தகுதியே இல்லாத கம்பெனிகளை எல்லாம் விளையாட விட்டிருக்கிறது முன்னாள் தி.மு.க அரசு.

ஆக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.350 கோடிகளில் இருந்து ரூ.400 கோடிகள் வரையிலும் அப்பட்டமான ஊழல், தோட்டக்கலைத் துறையில் மட்டுமே நடந்தேறியிருக்கிறது. பயனாளிகள் என்ற விவசாயிகளின் பெயர் பட்டியலை பார்த்து விசாரணை நடத்தினாலே சந்தி சிரிக்க தொடங்கிவிடும். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அதிகாரிகள் இப்படியான ஊழலுக்கு உடைந்தையாக துணை நின்றார்களோ, அதே அதிகாரிகள்தான் இப்போதும் தோட்டக்கலைத் துறையில் இருக்கிறார்கள்.

ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பேன் என்று உறுதி செய்துவிட்டு ‘மக்கள் நலம்பெற வேண்டும்’ என்ற முனைப்போடு செயல்படும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே பொதுநலன் விரும்புவோரின் கருத்தாக உள்ளது. மேற்கண்ட ஊழல்கள் அனைத்திற்கும் கோப்புகளே ஆதாரமாக உள்ளது. சப்ளை செய்த கம்பெனிகள் எங்கே? அவர்கள் யார்? அவர்களுக்குப் பின்னணி யார்? என்ற தேடல்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டு விலாசத்திற்கே கொண்டு போய்விடும். அடுக்கடுக்கான ஆதாரங்கள் முதல்வரின் பார்வைக்குப் போக இருக்கிறது. அதிரப்போகும் உண்மைகளை மக்கள் அறியப் போகிறார்கள் என்பதே அடுத்த எதிர்பார்ப்பு.

இருப்பதிலேயே பாவப்பட்டவன் விவசாயிதான். அந்த பாவப்பட்டவர்களின் வயிற்றிலேயே மணல் அடித்து ஊழல் செய்தவர்களை அம்மாதான் தண்டிக்க வேண்டும் என்ற குரலும் கேட்காமலில்லை!

நன்றி : சூரியக்கதிர்-ஜூலை-1-15


No comments:

Post a Comment