ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, வரும் ஜூலை 7ம் தேதி டெல்லியில் சி.பி.ஐ. முன்பாக தயாநிதி மாறன், அப்பல்லோ குரூப் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியும் அவரது மகள் சுனிதா ரெட்டியும் ஆஜராக உத்தரவிடப்பட்டிருப்பதாக, டெல்லி சி.பி.ஐ. வட்டாரம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி., கனிமொழி ஆகியோர் உள்பட 11 பேர் திகார் சிறையில் இருந்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விட்டதால், அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வகையில் இந்த கைது சம்பவங்கள் நடந்தன. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் ஒருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. குறிப்பாக, கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வரை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், ஸ்பெக்டரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அனேகமாக இம்மாத மூன்றாவது வாரத்திற்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மூன்றாவது குற்றப்பத்திரிகையில், இடம் பெறும் தகவல்களும், பெயர்களும் நாட்டில் மேலும் பல அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, ஸ்டெர்லிங் சிவசங்கரன் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் எப்படியும் இடம் பிடிப்பார் டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதற்கு முன்பாக, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் என்று கடும் நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ.யிலிருந்து விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. வரும் ஜூலை 7ம் தேதியில் அவர் அனேகமாக ஆஜராகலாம் என்று தெரிகிறது. அவருடன், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவரது மகள் சுனிதா ரெட்டி ஆகியோரும் ஆஜராகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அவர்களுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த சுனிதா ரெட்டியும் அவரது கணவர் துவாரகநாத் ரெட்டியும் 26 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஏர்செல் பங்குகளை 74 சதவிகிதம் வாங்கிய மலேசிய மேக்சிஸ் கம்பெனி, 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலுத்தி வாங்கி இருக்கிறது. ஆனால், அப்பல்லோ குழுமம் மட்டும், 34 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்து, எப்படி 26 சதவிகித பங்குகள் வாங்கியிருக்க முடியும் என்பதுதான் சி.பி.ஐ.யின் சந்தேகம். ஏர்செல் பங்குகளை மொத்தமாக வைத்திருந்த சிவசங்கரனிடம் இருந்து மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்க நெருக்கடி கொடுத்தது மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல், வைத்திருக்க முடியாது என்பதால் 26 சதவிகித பங்குகளை அப்பல்லோ குழுமம் வாங்கிருக்கலாம். அதற்காக, 34 கோடி ரூபாய்க்கு எப்படி வாங்க முடியும் என்று பிரதாப் ரெட்டியிடமும், அவரது மகளும் அப்பல்லோ குழும இணை நிர்வாக இயக்குனராக இருக்கும் சுனிதா ரெட்டியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, வரும் 7ம் தேதி அல்லது வெகு விரைவில் பிரதாப் ரெட்டியும் சுனிதா ரெட்டியும் டெல்லியில் சி.பி.ஐ. முன்பாக ஆஜராகலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் நெருக்கடி குறித்து, தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த அந்த சந்திப்பின் போது, பிரதமர் சொன்ன வார்த்தைகள் தயாநிதியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. “ஸ்பெக்டரம் ஊழலில் சி.பி.ஐ. இதுவரை நடத்திய அத்தனை விசாரணைகளும் எனக்கு தெரியும். குறிப்பாக, உங்கள் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதையும் எனக்கு அறிக்கையாக அனுப்பிவிட்டார்கள். ஆ.ராசா, கனிமொழி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை போன்றே, உங்கள் விவகாரத்திலும் நடக்கும். எனவே, நீங்களாக பதவி விலகிக் கொள்வது நல்லது” என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்லி அனுப்பிவிட்டதாக, தி.மு.க. வட்டாரத்தில் சீனியர்கள் தெரிவித்தனர். சி.பி.ஐ. முன்பாக விசாரணைக்கு, தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்றால், அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான விடை ஓரிரு நாட்களில் தெரியும்! |
Tuesday, July 5, 2011
சி.பி.ஐ. முன்பாக தயாநிதி மாறன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment