Tuesday, July 19, 2011

ஜெயலலிதாவின் அதிரடியில் ஈடிஏ ஸ்டார்

லைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முந்தைய தி.மு.க. அரசின் பல திட்டங்களை ஜெயலலிதா தவிடுபொடி ஆக்கினாலும், 'புதிய தலைமை செயலகத்துக்கு விசாரணை கமிஷன், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தம்’ ஆகியவைதான் கூடுதல் அரசியல் அர்த்தத்தோடு பார்க்கப்படுகிறது. காரணம், இந்த இரண்டு திட்டங்களுக்கும் கருணாநிதிக்கு நெருக்கமான சலாவு​தீனின் இ.டி.ஏ. ஸ்டார் ஒப்பந்தம் எடுத்திருந்தது!

இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் வளர்ச்சி!

கீழக்கரையில் வைர வியாபாரம் செய்துவந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான், இலங்கை, ஹாங்காங், துபாய் என்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்​கினார். மதுரையில் அவரது சேது பிலிம்ஸ் நிறுவனம் 'இதயக் கனி,’ 'உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களைத் தயாரிக்கப் பல வகைகளில் உதவியது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தாலும், கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களோடும் சமமாகப் பழகினார் அப்துல் ரஹ்மான்.

கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் போன்றவை அப்துல் ரஹ்மானின் இ.டி.ஏ. நிறுவனம் கட்டியவைதான். இந்த நிறுவனத்தில், தனது தூரத்து உறவினரான சையத் சலாவுதீனை வேலைக்கு அமர்த்தினார்.

ஆனால், கொஞ்ச காலத்திலேயே அப்துல் ரஹ்மானுக்குப் போட்டியாக 'இ.டி.ஏ. ஸ்டார்’ என்ற புதிய நிறுவனத்தை சலாவூதீன் தொடங்கிவிட்டார். அப்துல் ரஹ்மானைப்போலவே இவரும் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

கட்டுமானம், சாலைப் பணிகள், ரியல் எஸ்டேட், மின் மற்றும் வணிகத் திட்டங்​கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், மின் இயந்திரவியல் பயன்பாடு என்று பல தொழில்களில் விரிந்துகிடக்கிறது சலாவூதீனின் சாம்ராஜ்யம்.

22 நாடுகளில் 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் அவர் கண் அசைவில் செயல்படுகின்றன. 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ரஹேஜா டவர்ஸ், கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள புதிய நூலகக் கட்டடம் என்று இ.டி.ஏ. ஸ்டார் தொடாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு சுமார் 16,000 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

தி.மு.க. தொடர்பு...

புதிய தலைமைச் செயலகம் கட்டிய 'ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’, இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் ஓர் அங்கம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,750 கோடி செலவில், 350 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஒருங்​கிணைக்கப்பட்ட நகரியத்தை அமைக்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை இ.டி.ஏ. ஸ்டார் ப்ராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், சலாவுதீ​னுடன் கருணாநிதிக்கு இருக்கும் நெருக்கம் தான். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 517 கோடியை பிரிமியமாக அரசு செலவழித்தது. முதல் ஆண்டில், பயனாளிகளுக்காக மருத்துவ​மனை களுக்குச் செலுத்தப்​பட்ட தொகை சுமார் 415 கோடி மட்டுமே. இரண்டாவது ஆண்டில், 750 கோடி பிரிமியம் செலுத்தப்பட்டது. ''மக்களின் வரிப் பணம், பன்னாட்டு கம்பெனிக்கு போய்க்கொண்டு இருந்தது. மக்களின் வரிப் பணத்தில், சுமார் 400 கோடி லாபம் ஈட்டி இருக் கிறது!'' என்று புகார் வாசிக்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம்

'முதலில் 700 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி, பிறகு 1,200 கோடி வரையில் பணத்தை செலவழித்தார்கள்!’ என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. வரைபடம் தயாரித்துக் கொடுத்த ஜெர்மன் கம்பெனி, முன்னாள் பொதுப் பணித் துறை செயலாளர் ராம சுந்தரம், அரசு அதிகாரிகள், தோட்டா தரணி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரிகளை எல்லாம் விசாரணை கமிஷன் விரைவில் விசாரிக்கப்போகிறது.

ஸ்பெக்ட்ரம்

ஆ.ராசாவின் தயவால் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று, ஸ்வான் டெலிகாம் நிறுவனம். ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அதை 9 மாதங்கள் கழித்து, துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸாலட் நிறுவனத்துக்கு 5.7 சதவிகிதப் பங்குகளை அதிக விலைக்கு விற்றது. பிறகு, எடிஸாலட் டிபி என அந்த நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. மூன்றே மாதத்தில் 380 கோடி மதிப்புள்ள பங்குகளை, எடிஸாலட் டிபி-யிடம் இருந்து வாங்குகிறது இன்னொரு நிறுவனம். அதன் பெயர் 'ஜெனிக்ஸ் எக்ஸிம் வெண்டர்ஸ்’. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், வெறும் 1 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாவுதீனின் மகனைச் சார்ந்தது. இ.டி.ஏ. ஸ்டார் 7.1.2008 அன்று, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு 1 கோடி கொடுத்தது.

இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கும் ஜெயலலிதா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்

நன்றி ஜுனியர் விகடன்

No comments:

Post a Comment