கடந்த ஐந்து வருடங்களாக குறுநில மன்னன்போல ஆட்சிசெய்த மதுரையில்தான் அழகிரி, ‘திக்திக்’ என்று தவிப்புடன் இருக்கிறாரென்றால், அருகிலுள்ள சித்தூரில் இருந்து அவருக்கு வரும் தகவல்கள் ‘பக் பக்’!
“இவங்க நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டாங்களா?” என்று அழகிரி தனது நெருங்கிய சகாவிடம் புலம்பும் அளவுக்குப் போயிருக்கிறது சித்தூர் பக்பக்! விவகாரம் என்னவென்றால், சித்தூரில் போய் டோரா போட்டிருக்கின்றது ஒரு அதிகாரிகள் டீம்!
சில வருடங்களுக்குமுன் நடைபெற்ற தா.கிருஷ்ணன் கொலை விவகாரம் ஞாபகமிருக்கிறதா? அஞ்சா நெஞ்சன் அழகிரியும், அவருடைய சில அடிப்பொடிகளுமே கொலைக்குக் காரணம் என்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அழகிரி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் மேல் முறையீடு, இதுவரை செய்யப்படவில்லை!
காரணம், மேல் முறையீடு செய்ய வேண்டிய நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. அழகிரியும் மதுரையில் குறுநில மன்னராகி விட்டார். அதற்குப் பிறகு மேல் முறையீடாவது? கீழ் முறையீடாவது?
இங்கு சித்தூர் எங்கே வருகிறது என்றால், தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் விசாரணை நடந்த இடம் சித்தூர் நீதிமன்றம்தான்!
இந்த வழக்கை இப்போது தூசி தட்டி வெளியே எடுக்கிறது தமிழக அரசு. தமிழக சட்டத்துறை அதிகாரிகளைச் சமீபத்தில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, “தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் மேல் முறையீடு ஏன் செய்யப்படவில்லை?” என்று கேட்டிருக்கிறார்.
இதையடுத்து 24 மணி நேரத்துக்கு உள்ளேயே சட்டத்துறை அதிகாரிகள் இது பற்றிய பைல் ஒன்றைத் தயாரித்துள்ளனர். குறிப்பிட்ட வழக்கில் ஓட்டைகள் ஏற்படுமாறு எப்படி, அன்றைய தமிழக அரசால் காரியங்கள் செய்யப்பட்டன? இந்த வழக்குக்கு மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என எப்படி முடிவெடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இருந்தன அந்த பைலில்!
இதை எப்படிச் செய்தால் கேஸை மூடலாம் என்று அன்றைய தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்ததே ஒரு முன்னாள் சட்டத்துறை உயரதிகாரிதான்! அவர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். பூனேயில் தன் மகளுடன் வசிக்கிறார்.
தற்போது, சட்டத்துறை அதிகாரிகள் தயாரித்துள்ள பைலிலுள்ள இறுதிக் குறிப்பு - Lack of material evidence, a way to Discharge!
அதாவது, பல முக்கிய தடயங்கள் மாற்றப்பட்டோ அழிக்கப்பட்டோ விட்டதாலேயே, கேஸை மேல் முறையீடு செய்ய முடியாதபடி செய்துள்ளார்கள் என்பது அதிகாரிகளின் கூற்று. ஆனால், இதற்கும் ஒரு மாற்று மருந்து இருப்பதாக அதிகாரிகள் முதல்வருக்குக் கூறியிருக்கிறார்கள்.
அது என்ன? வழக்கு சித்தூரில் நடைபெற்றபோது தாக்கல் செய்யப்பட்ட பல ஆவணங்கள் சித்தூர் நீதிமன்ற ரிக்கார்ட் ரூமில் இன்னமும் இருக்க வேண்டும். அவை நமது கைகளுக்கு வந்தால், கேஸை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்பதே அதிகாரிகள் குறிப்பிடும் மாற்று மருந்து.
அதை உடனடியாகச் செய்யுமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்து விட்டார்.
இதையடுத்தே சித்தூரில் அரசு அதிகாரிகள் போய் இறங்கி உள்ளார்கள். இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் சகல ஆவணங்களையும் கொடுக்கும்படி கேட்டு, மனுத் தாக்கல் செய்யும் வேலைகளை அவர்கள் தொடங்கி விட்டனர்!
இந்த ஆவணங்கள் தமிழக அரசின் கைகளுக்கு வந்தவுடன், அழகிரியின் பெயர் மீண்டும் பரபரப்பாக அடிபடப் போகின்றது. அடுத்துவரும் சில வாரங்களுக்குள் இதை நீங்கள் பார்க்கலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
மீண்டும் ஒருமுறை காவல்துறை வாகனத்தில் சவாரி செய்ய, அஞ்சா நெஞ்சனுக்கு கொடுத்து வைத்திருக்கிறது போலிருக்கே!
No comments:
Post a Comment