தி.மு.க.வில் ஸ்டாலினா? அழகிரியா? என்ற மோதல்தான் மெயின்-டிஷ்ஷாக பரிமாறப் பட்டுக்கொண்டிருக்க, புதிதாக ஒரு சைட்-டிஷ்ஷையும் பரிமாறிப் பார்க்கலாமா என்று ராசாத்தி அம்மாள் யோசிக்கத் தொடங்கியிருப்பதாக, தி.மு.க. வட்டாரங்களில் ஒரு கதை உலாவத் தொடங்கியுள்ளது. இந்தக் கதை உண்மைதான் என்கிறார்கள் தி.மு.க.வின் உள்விஷயம் அறிந்தவர்கள்.
ராசாத்தி அம்மாள் பரிமாற நினைக்கும் சைட்-டிஷ் என்ன? “அவங்க இருவரையும்விட, நம்ம கனி(மொழி) எந்த விதத்தில குறைஞ்சு போயிட்டா?”
ஏற்கனவே மு.க. குடும்ப குழப்பங்களால் நொந்துபோயுள்ள தி.மு.க. உடன்பிறப்புகள், இந்த புதிய டெவலப்மென்டை திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட்சியின் தென்மாவட்டத்து சீனியர் ஒருவர், “தற்போதுள்ள இருமுனை இழுபறியே கட்சியை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டியானால்? தி.மு.க.காரன் நம்பாத ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாது” என்றார்.
என்ன நடக்கிறது என்பதை அறிய அவரது வாயைக் கிளறினோம்.
“தி.மு.க.வின் மிகப் பெரிய பிரச்சினை இன்றைய தேதியில் என்ன? இந்தக் கேள்விக்கு தி.மு.க.விலுள்ள யாருக்குமே சரியான பதில் தெரியவில்லை என்பதுதான் மகத்தான சோகமே! மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிவிட்டோம். அதைச் சரிசெய்ய தலைமைக்கு நேரமில்லை. காரணம் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள நீயா.. நானா.. போட்டி” என்றார் அவர் வருத்தத்துடன்.
“ஸ்டாலின், அழகிரியிடையே இருப்பது நீண்ட கால போட்டி. அதுவே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதைத் தெரிந்துகொண்டும், மற்றொரு போட்டியாளரை (கனிமொழி) உள்ளே கொண்டுவருவாரா ராசாத்தி அம்மாள்?” என்று எமது சந்தேகத்தைக் கேட்டோம்.
“சாதாரண சமயங்களில் கொண்டுவந்திருக்க மாட்டார். கலைஞரின் இரு குடும்பத்துக்கும் இடையிலான ஒப்பந்தமே, ‘மெயின் வாரிசு’ போட்டியில் கனிமொழியைக் கொண்டுவருவதில்லை என்பதுதான். சில வருடங்களுக்கு முன்பே இருதரப்பும் ஏற்றுக்கொண்ட முடிவு இது.
ஆனால் இப்போது அதையெல்லாம் பார்க்க முடியாது. ராசாத்தி அம்மாளின் பிரச்சினை, வாழ்வா சாவா என்ற அளவில் உச்சக்கட்டத்தில் நிற்கிறது. கனிமொழியை எப்படியாவது வெளியே கொண்டுவராவிட்டால் ராசாத்தி அம்மாளின் நிலைமை கவலைக்கிடமாகப் போய்விடும்.
கட்சியை பணயம் வைத்தாவது கனிமொழியை மீட்க வேண்டிய நிலை அவருடையது. இதனால் அவர் எதற்கும் ரெடியாகி விட்டார்” என்று விளக்கினார் அந்த தென்மாவட்ட சீனியர்.
ஸ்டாலினின் கைக்கு கட்சி போவது ராசாத்தி அம்மாளுக்கு சாதகமில்லாத விஷயம் என்று அவர் சொல்வது உண்மைதான். காரணம், கனிமொழியை வெளியே கொண்டுவருவதற்கு கட்சியை பணயம் வைக்க ஸ்டாலின் தயாராக இருக்க மாட்டார் என்பது ராசாத்தி அம்மாளுக்குத் தெரியும்.
இன்றைய நிலையில், கட்சியின் அதியுச்ச அளவிலான அரசியல் பிரஷர் இல்லாவிட்டால், கனிமொழியால் வெளியே வரவே முடியாது.
ஸ்டாலின் கட்சித் தலைவரானால், கனிமொழியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பதாலேயே அழகிரியுடன் இணைந்து ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்தினார் ராசாத்தி அம்மாள். அதன் காரணமாகவே, கோவை பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலினின் நாற்காலி ஆசை, நிராசையாகிப் போனது.
கனிமொழி கைதான நாளில் இருந்தே டெல்லியில் தங்கிவிட்ட ராசாத்தி அம்மாளும் பொதுக்குழு கூட்டத்துக்காக கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் தனக்கும் சீட் போட வைத்து விட்டார். அந்தளவுக்கு ஆன்-த-ஸ்பாட்டில் இருந்தபடியே ஸ்டாலினுக்கு நாற்காலி கிடையாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
பொதுக் குழுவில் கருணாநிதி, “தலைமைப் பதவியில் மாற்றமில்லை” என்று அறிவித்தபோது. மேடையில் இருந்த ஸ்டாலின் முகம் கடுகடுத்துக் காணப்பட்டது. இந்த அறிவிப்பின்போது எல்லோரும் ஸ்டாலினையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது முகபாவம் தெரிந்தது.
ஆனால், பலரும் ராசாத்தி அம்மாளைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அந்தக் கணத்தில் அரிய காட்சியொன்றைக் கண்டிருக்கலாம்.
ராசாத்தி அம்மாள் முகம் மலர சிரித்துக் கொண்டிருந்தார்!
அதேநேரத்தில், அழகிரிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கவும் ராசாத்தி அம்மாள் விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. ஊசலாடுவது மகளின் எதிர்காலம் என்பதால், யாரை நம்பவும் அவர் தயாராக இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விவகாரம்தான், கனிமொழியை உள்ளே தள்ளியிருக்கிறது. கலைஞர் டி.வி.யில் வெறும் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியை கைது செய்து அடைத்துள்ள சி.பி.ஐ., அதே நிறுவனத்தில 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளைத் தொடவில்லை.
தி.மு.க. என்ற கட்சித் தலைவரின் மனைவி என்ற அந்தஸ்தே தயாளு அம்மாளைக் காப்பாற்றியது என்று ராசாத்தி அம்மாள் நினைக்கிறார் என்கிறார்கள் சி.ஐ.டி. காலனியுடன் நெருக்கமானவர்கள்.
அப்படியொரு அந்தஸ்து தனது மகளுக்கும் கிடைக்க வேண்டுமானால், கனிமொழி தி.மு.க.வின் தலைவியாக வேண்டும் என்ற திசையில் போகிறதாம் ராசாத்தி அம்மாளின் சிந்தனை. அதற்காகவே தலைமைப் போட்டியில் கனிமொழியையும் இறக்க நினைக்கிறாராம் அவர்.
ராசாத்தி அம்மாள் ஆதரவாளர்களான சில மாவட்டச் செயலாளர்கள் கடந்த வாரத்தில் அவரால் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகச் சந்தித்து சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களாம் இவர்கள்!
கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்புவதற்கு, கட்சியின் தலைவராகும் வழியைவிட, வேறு ஒரு சுலபமான வழியும் இருப்பது ராசாத்தி அம்மாளுக்கு தெரியுமா? அநேகமாக தெரிந்திருக்கும்!!
No comments:
Post a Comment