Thursday, July 28, 2011

மழையில் தொடங்கிய கட்சி...

கொட்டும் மழையில் தி.மு.க-வை ஆரம்பித்த அண்ணா, ''இந்த மழை பெய்வதற்கும் எனக் கும் எப்படி சம்பந்தம் இல்லையோ... அதுபோல் திராவிடர் கழகத்தைவிட்டுப் பிரிவதற்கும் நான் காரணம் அல்ல!'' என்று நயமாகச் சொன்னார்.

இன்று தமிழ் மக்களின் கொந்தளிப் பால் ஆளும் நாற்காலியில் இருந்து இறக்கிவிடப்பட்ட தி.மு.க., அதற் கான காரணத்தை கோவையில் கூடி கண்டறியுமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், 'தி.மு.க-வின் தோல் விக்கு ஒரு சில பத்திரிகைகள்தான் காரணம்!’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார் கருணாநிதி. 'ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் காரணம்’ என்று ஸ்டாலின் தனது இளைஞர் அணிக் கூட்டத்தில் சொல்கிறார். 'குடும்ப அரசியல்தான் காரணம்’ என்கிறார்கள் கட்சிக் காரர்கள். சபாஷ்... சக்கரம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது.

ஆம், வாரிசு வருகையை எதிர்த்து ஆரம்பித்த கட்சிதான் தி.மு.க.

திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியார், தனக்கு வாரிசாக மணியம்மையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்தபோது, எதிர்த்துத் தனிக் கடை ஆரம்பித்தார்கள். ''ஹைதராபாத் நிஜாமுக்கும் ஆதீன கர்த்தர்களுக்கும் ஏற்பட வேண்டிய வாரிசுக் கவலை பெரியாருக்கு ஏன்?'' என்று கேள்வி கேட்டு உருவான கட்சி.

60 ஆண்டுகள் கழித்து சொல்கிறார்கள், 'குடும்பத்தால்தான் தோற்றோம்’ என்று. ''இனிமேல் அண்ணா, கலைஞர் படத்தைத் தவிர எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யார் படத்தையும் போட வேண்டாம்!'' என்று பகிரங்கமாக அறிவிக்கிறார் மு.க.அழகிரி. இந்த விஷயத்தை கருணாநிதி, ஸ்டாலின், அழகிரியைத் தவிர வேறு யாராலும் பேச முடியாது என்பதுதான் உண்மை. தனிமையில் சில வார்த்தைகள் சொன்னதற்கே, துரைமுருகன் ஐந்து நாட்கள் தலைமறைவாக வேண்டி இருந்தது. பொதுவில் சொன்னால் என்னாகும் என்பதை அறியாதவன் அல்ல தி.மு.க. தொண்டன்!

ஏராளமான திட்டங்கள், கணக்கற்ற இலவசங்கள் அள்ளிக் கொடுத்தும், இம்முறை தோல்வி ஏற்பட்ட தற்குக் காரணம் கழகத் தொண்டனுக்குத் தெரிகி றது, 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கம்தான்’ என்று. ஆனால், அதைச் சொல்ல முடியவில்லை. எல்லா விவகாரங்களுக்கும் பக்கம் பக்கமாக அறிக்கை விடும் கருணாநிதியால், அந்தக் காரணத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. 'மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள்’ என்று ஹீனஸ்வரத்தில் இழுவை போடவே முடிந்தது.

''அண்ணா நினைவகத்தில் 'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்று எழுதப் பட்டுள்ளது. என்னுடைய நினைவகத்தில் 'ஓய்வறி யாத் தொண்டன் இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்!'' என்று, தான் ஏற்கெனவே தான் சொல்லி இருந்ததைக் கூட மறந்து கருணாநிதி இப்படிச் சொன்னார் என்றால், உண்மையை ஒப்புக்கொள்ள முடியாத நிலைமையே இன்னமும் தொடர்கிறது என்று அர்த்தம்!

கிடைத்துவிட்ட தோல்வியை திரும்பத் தர முடியாது. ஆனால், மறுபடி தோல்வி அடையாமல் இருக்க வழிவகை காண முடியும்.

அதற்குக் கருணாநிதி கண்டுபிடித்துள்ள வழிகளில் ஒன்று 'மாவட்டச் செயலாளர்களை மாற்றி... நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர்களை உருவாக் குவது’ என்பது. சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், தூத்துக்குடியில் என்.பெரியசாமி, திருச்சியில் நேரு, விழுப்புரத்தில் பொன்முடி, திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, விருதுநகரில் சாத்தூர் ராமச்சந்திரன்... என்று தமிழகத்தை மாவட்டவாரியாகப் பிரித்து பங்குபோட்டுக்கொண்ட இவர்களால்தான், கட்சி அந்தந்த வட்டாரங்களில் வளராமல்போனது என்று கருணாநிதி நினைப்பதில் நியாயம் இருக்கிறது.

நாயக்கர் பாளையப்பட்டுகள் 42, மறவர் பாளையப்பட்டுகள் 32 என்று பிரித்து குறுநில மன்னர்களாக ஆண்டதைப் போல.. இவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள யாரையும் வளரவிடாமல்... தகுதியான இன்னொருவர் வென்றால்... தலைவர், அவருக்கு மந்திரி பதவி கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் தட்டிவைக்க நினைத்ததால்தான், பல்வேறு மாவட்டங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்களே வளராமல்போனார்கள். அதை மீறி வந்தவர்கள் மீது 'தீண்டாமை’ கடைப்பிடிக்கப்பட்டது. நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை அடைய வேண்டுமானால், அது மாவட்டச் செயலாளர்களின் கூஜாக்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. மாவட்ட செயலாளர்களே மந்திரிகளாகவும் இருந்தார்கள். கல்லூரிகள், தொழிற்சாலைகள் நடத்தினார்கள். இத்தனை வேலைகளோடு அவர்களால் எப்படிக் கட்சியை நடத்த முடியும்? எனவே, அவர்கள் தங்கள் கைத்தடிகளைவைத்தே மாவட்ட நிர்வாகத்தைப் பார்த்தார்கள்.

விழுப்புரம் தி.மு.க-வை பொன்முடி இடத்தில் நின்று அவரது பி.ஏ. ரவி பார்த்தார். திண்டுக்கல் தி.மு.க-வை ஐ.பெரியசாமி இடத்தில் நின்று நாகராஜன் பார்த்ததாகவும், திருவள்ளூர் தி.மு.க-வை இ.ஏ.பி.சிவாஜி இடத்தில் இருந்து பரந்தாமன் பார்த்ததாகவும் கட்சிக்காரர்கள் சொல்வதை கருணாநிதி அறிவாரா? அல்லது அவரது இடத்தில் இருந்து கவனித்த ஸ்டாலின்தான் அறிவாரா?

தலைமைக் கழகம் அறிவித்து நடத்தும் பொதுக் கூட்ட மேடைக்குக்கூட வராத மா.செ-க்கள் உண்டு. கருணாநிதி சென்னையில் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு வராத மா.செ., இருக்கிறார்கள். ஒரு மா.செ., சீட்டு ஆட்டக் கிளப்பில் இருந்துதான் கடந்த ஐந்து ஆண்டு காலமும் கட்சி நடத்தினார். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இது தெரியவந்தது என்றால், தோல்விக்கான காரணத்தை ஆராயப் பொதுக் குழு தேவையா என்ன?

இப்படிப்பட்ட மா.செ-க்களை வைத்துத்தான் கருணாநிதி சொன்னார், 'மாவட்டச் செயலாளர்கள் யாரைச் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் ஸீட்!’ என்று. தோல்விக்கான அடிப்படைக் காரணம் அறிவாலயத்தில் இருந்தே ஆரம்பமானது. மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகள்பற்றி அனுப்பப்படும் புகார்கள் கருணாநிதியின் மேஜைக்கே போவது இல்லை. இப்படிப்பட்ட கடிதங்களை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுபோகாமல் தடுக்கும் 'பெரும் தலைவர்’ யார் என்பதை முதலில் கண்டு பிடியுங்கள்!

ஒரு மாவட்டச் செயலாளர், அவரே மந்திரி, அவரே உயர் மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் என்று ஒரே ஆளுக்குப் பதவிகளைக் குவிக்க... ஒன்று அவர் அபரிமிதமான திறமைசாலியாக இருக்க வேண்டும், அல்லது கட்சியில் வேறு தகுதியான நபர்கள் இல்லை என்ற நிலை இருக்க வேண்டும்.

'ஒருவருக்கு ஒரு பதவி’ என்பது அதிகார மமதையை எப்போதும் கொடுக்காது. ஈ.வெ.கி.சம்பத், வேலூர் பொதுக் குழுவில் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அன்று கருணாநிதி எதிர்த்தார். ஆனால், எம்.ஜி.ஆர். விலகலுக்குப் பிறகு அவரே அதை ஏற்றார். எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு இருந்தது, ரசிகர் பட்டாளம் இருந்தது, அதனால் அவரால் வளர முடிந்தது என்பது எல்லாம் உண்மைதான். அந்த எம்.ஜி.ஆருக்கு, 'நம்மாலும் ஜெயிக்க முடியும்!’ என்ற உற்சாகத்தைக் கொடுத்தது திண்டுக்கல் இடைத்தேர்தல். கருணாநிதி சொன்ன தி.மு.க. வேட்பாளரை, அன்றைய மதுரை மாவட்டச் செயலாளர் எதிர்த்து வேறு வேட்பாளரைப் பரிந்துரை செய்தார். தி.மு.க-வின் தோல்விக்கான முக்கியக் காரணமாக அது மாறிப்போனது. ஒரு சிறு தவறு கருணாநிதியின் 13 ஆண்டு கால வனவாசத்துக்கு அடித்தளம் இட்டது. இன்று பல மா.செ-க்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், திண்டுக்கல் தோல்விக்குப் பிறகு கருணாநிதி, 'ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். கருணாநிதி இப்போதும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மைத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு.ஆனால் அதை கருணாநிதியால் செய்ய முடியுமா?

துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூவரைப்பற்றியும் கருணாநிதியிடம் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் அவருக்குப் பக்கத்திலேயே எப்போதும் இருக்கி றார்கள். கே.என்.நேரு, வெள்ளக்கோவில் சாமிநாதன், சாத்தூர் ராமச்சந்திரன், கருப்ப சாமிப் பாண்டியன், ஜெ.அன்பழகன் போன் றவர்களைப்பற்றி ஸ்டாலினிடம் சொல்ல முடியாது. தளபதி, மூர்த்தி, ஐ.பெரியசாமிபற்றி அழகிரியிடம் சொல்ல முடியாது. வீரபாண்டி ஆறுமுகத்தைப்பற்றி யாரிடமும் சொல்ல முடியாது. தனிக்காட்டு ராஜா. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கான தடுப்புச் சுவரை கோபாலபுரத்து செங்கல்லை எடுத்தே கட்டினால், திருச்சியிலும் தியாகத்துருவத் திலும் இருக்கும் தொண்டன் குரல் எப்படி எடுபடும்?

எனவே, கோவையில் தொண்டன் பேசுவதைவிட... கருணாநிதிதான் மனம் விட்டுப் பேச வேண்டும்!


நன்றி ஜுனியர் விகடன்

No comments:

Post a Comment