Monday, July 11, 2011

அதிகாரிகளைப் பந்தாடும் விஷயத்தில் மட்டும்... அதே பழைய ஜெ!



மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது!’ - கார்ல் மார்க்ஸ் இந்தத் தத்துவத்தை கார்டனுக்காகவே எழுதி இருப்பாரோ!எளிமையான அரசு விழா, வாரம்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பு, ஈழ விவகாரத்தில் இரக்கம் என அதீத மாற்றம் தெரிந்தாலும், அதிகாரிகளைப் பந்தாடும் விஷயத்தில் மட்டும்... அதே பழைய ஜெ! அனுதினமும் மாலை 6 மணி ஆனாலே, 'இன்னிக்கு டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்ல யார் யார் பேருப்பா?’ என அதிகாரிகள் வட்டாரம் பரபரக்கிறது.

டிரான்ஸ்ஃபர் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு, மீடியாக்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த உள்துறைச் செயலாளரையே, சமீபத்தில் தூக்கியடித்தது உச்சக்கட்ட அதிரடி. இத்தனைக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த மாத்திரத்திலேயே மிகுந்த நம்பிக்கையோடு அந்தப் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் ஷீலாராணி சுங்கத். 24 நாட்களுக்குள் உள்துறைச் செயலாளரை மாற்றி இருப்பது, எந்த மாநிலச் சரித்திரத்திலும் நிகழாத ஒன்று!

அந்தப் பதவியில் புதிதாக நியமிக்கப்பட்ட ரமேஷ்ராம் மிஸ்ரா, பிற அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்குக்கூட முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். காரணம், இந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு இட மாறுதல்களுக்குப் பிறகு, மூன்றாவதாக இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டவர் அவர். 'இந்தப் பதவியும் இன்னும் எத்தனை நாளைக்கோ!’ என்கிற தயக்கத்திலேயே அதிர்ந்துகூடப் பேசாமல், அமைதியாகக் கோப்புகளுக்குள் முகத்தைப் புதைத்து இருக்கிறார் மிஸ்ரா.

தி.மு.க-வின் வீழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று, மின் தட்டுப்பாடு. இதனாலேயே, புதிய அரசு பொறுப்புக்கு வந்தவுடன் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலன் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஸ்வரண் சிங்கை உடனடியாக மின் துறைப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அதிகாரிகளுடன் அடிக்கடி மீட்டிங் நடத்திய ஸ்வரண் சிங், 'வீணாகும் மின்சாரத்தைக் குறைத்தாலே, இப்போதைய மின் தட்டுப்பாட்டில் பாதியைச் சரிசெய்ய முடியும்!’ என அதிகாரிகளை சுற்றிச் சுழலவைத்தார். ஆனால், தடாலடியாக அவரை நில நிர்வாகத் துறை கமிஷனர் பொறுப்புக்குத் தூக்கி அடித்தனர். ''துறைரீதியான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே குறைந்தது 20 நாட்கள் ஆகும். அதற்கும் அவகாசம் கொடுக்காமல் இப்படிப் பண்ணிட்டாங்களே!'' என்று புலம்பியபடியே தன் துறைக்கான இடம் தேடிக் கிளம்பினார் ஸ்வரண் சிங்.

ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து பதவி மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், புதுத் துறையில் கால் வைத்த பிறகும் சுறுசுறுப்பாகக் களம் இறங்காமல் அமைதி காக்கிறார்கள். ''நாங்கள் துறைரீதியான மேம்பாட்டுக்காக எதையாவது சொன்னால்கூட, கீழே இருக்கும் அதிகாரிகள் 'இவர் இன்னும் எத்தனை நாளைக்கோ!’ எனக் கிண்டல் அடிக்கிறார்கள். அப்படி இருக்க, எதையும் தீவிரமாகச் செய்து எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை!'' என அப்பாவியாகப் புலம்புகிறார்கள்!

காவல் துறையிலும் டிரான்ஸ்ஃபர் மேளாதான். முதல்வ ராகப் பதவி ஏற்றவுடனேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னையின் வீரியம் முதல்வர் கவனத்துக்கு வர, 'நான் கோட்டைக்குச் செல்வதற்குள் சிட்டி கமிஷனர் ராஜேந்திரன் மாற்றப்பட வேண்டும்!’ என உத்தரவு போட்டார். அடுத்த அரை மணி நேரத்துக்குள் சிறைத் துறைக்கு மாற்றப்பட்டார் சென்னை கமிஷனராக இருந்த ராஜேந்திரன். ஆனால், ஆச்சர்யம் அதோடு அடங்கவில்லை. சில நாட்களிலேயே உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக அதே ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த ராதாகிருஷ்ணனை மனித உரிமை கமிஷனுக்கு மாற்றினார் ஜெ. 'ராதாகிருஷ்ணன் அவ்வ ளவுதான்’ என சிலர் அனுதாபப் புராணம் பாட, சில வாரங்களிலேயே பவர்ஃபுல் சிவில் சப்ளை சி.ஐ.டி. பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் ராதாகிருஷ்ணன்.

மதுரையில் அழகிரிக்கு அஞ்சாமல் அதிரடி காட்டிய ஆஸ்ரா கர்க், திடீரென சென்னை அண்ணா நகருக்கு மாற்றப்பட்டார். 'நல்லாத்தானே பணியாற்றினேன்!’ எனச் சலித்தபடியே குடும்பத்தை அழைத்துக்கொண்டு அவர் சென்னைக்கு வர, அதற்குள் மீண்டும் அவரை மதுரைக்கே மாற்றி உத்தரவு வெளியானது. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர், பாதி வழியிலேயே குடும்பத்தோடு ஊருக்குத் திரும்பியது தனிக் கதை.

பள்ளி, கல்லூரிகளில் அட்மிஷன் நடக்கிற நேரம் இது. இந்த அரசின் டிரான்ஸ்ஃபர் கூத்துகளால் எங்கே அட்மிஷன் போடுவது எனப் புரியாமல் அதிகாரிகள் அல்லாடித் தவிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மகளுக்கு இடம் வாங்கினார் ஓர் அதிகாரி. அவர் தற்போது தென் மண்டல ஏரியாவுக்கு மாற்றப்பட்டார். மகளைப் பிரிய முடியாமல் அந்த அதிகாரி கண்ணீரும் கம்பலையுமாக அல்லாடுவது அத்தனை சோகம்!150-க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் இந்த ஒரு மாத காலத்துக்குள் தூக்கி அடிக்கப்பட்டனர். அவர்களிலேயே இரண்டா வது முறை, மூன்றாவது முறை என அல்லாட்டங்களுக்கும் பஞ்சம் இல்லை. இன்னும் 220 அதிகாரிகளின் டிரான்ஸ்ஃபர் பட்டியல் தயாராகி வருகிறது. இதனால், எந்த நேரத்தில் யாருக்கு மாற்றல் உத்தரவு வருமோ எனப் பதறிக்கிடக்கிறார்கள் பல அதிகாரிகள். பல்வேறு துறைகளில் புதிய அரசின் பொறுப்பேற்குப் பிறகு, அடிப்படைப் பணிகளே ஆரம்பமாகவில்லை. அதற்குக் காரணம் சம்பந்தமே இல்லாத பந்தாடல்கள்தான்.

அமைச்சரவையிலும் அம்மாவின் அதிரடி வழக்கம்போல் தொடங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த 43 நாட்களிலேயே ஆறு அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்துவிட்டார் ஜெயலலிதா. திருச்சி மரியம்பிச்சை மரணத்துக்குப் பிறகு, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் முஸ்லிம் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைச்சராக்கப்பட்டார். தொழில் துறை மற்றும் கரன்சி கொட்டும் கனிம வளத்தைக் கையில் வைத்திருந்த சண்முகவேலு, திடீரென ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை என்கிற புதிய துறைக்கு அமைச்சராக இருந்த வேலுமணிக்கு, தொழில் துறை என்கிற கனமான பொறுப்பு. கானா பாடல் புகழ் கருப்பசாமி கால் நடைத் துறையில் இருந்து மாற்றப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். கால்நடைத் துறை சிவபதிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஊரகத் தொழில் துறையைக் கையில் வைத்திருந்த எம்.சி.சம்பத்துக்கு, திட்ட அமலாக்கத் துறை!

'ஒவ்வொரு அமைச்சர்கள் மீதும் ஒவ்வொரு குற்றச்சாட்டு வந்துள்ளது. இதில் மிகப் பெரிய கரன்சி டீலிங்குகளும் உண்டு. சிம்பிளான புகார்களும் உண்டு. ஒரு அமைச்சர் மீது புகார் வந்தால், அதை உண்மை என்று முதல்வர் நம்பினால், அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வேறு துறைக்கு மாற்றுவதால் என்ன பிரயோஜனம் ஏற்படப்போகிறது?'' என்று கேட்கும் கோட்டை வட்டாரம்...

ஆளும் கட்சியை விமர்சிக்க 100 நாட்கள் அவகாசம் எதிர்க் கட்சிகளுக்குத் தேவை என்பார்கள். அதுபோல எந்தவொரு அமைச்சரும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் தேவை. அதன்படி மூன்று மாதங்கள் அவர்களைச் செயல்படவிட்டு, அதன்பிறகு நடவடிக்கை எடுப்பதுதான் சரியாகவும் முறையாகவும் இருக்கும்'' என்றும் சொல்கிறார்கள்.''அடுத்தபடியாக இன்னும் நான்கு அமைச்சர்கள் மாற்றப்பட இருக்கிறார்கள். இப்படியே போனால், எந்தத் துறையும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பது நிஜமாகிவிடும்!'' என அலறுகிறார்கள் அமைச்சர்களின் உதவியாளர்கள்.

மாற்றம் செய்யும் குணத்தில் மாற்றம் வருமா?
விகடன்

No comments:

Post a Comment