'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது போலீஸ்!
வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில், சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்பதாகவே இருந்தன. முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!
வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு முன்னால் தயங்கிக்கொண்டு நின்றாராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க... உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை. வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவிதமான உணவுகளை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம். இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக் காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.
விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம் ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120 கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர் பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது.
சில கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம். எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க.
சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில் தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம் பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூடவைத்தார்கள்.
விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப் படுத்தினார்கள். உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை, அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை.
சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ? அராஜகம்!
கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை.
கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி.
மறு உத்தரவு வரும் வரை, தினமும் சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசினர்.
'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ் விசாரித்த போது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க. அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லி விட்டு வந்தாராம் அழகிரி!
நன்றி : ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment