Wednesday, July 6, 2011

ஜெயலலிதா போனை ஒட்டுக்கேட்டவருக்கு சிவப்புக் கம்பளம்

தி.மு.க. ஆதரவு அதிகாரிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு பலர் உப்புச்சப்பில்லாத துறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதேசமயம், ஜெயலலிதா போனையே ஒட்டுக் கேட்ட அதிகாரிக்கு அவர் இஷ்டப்பட்ட துறையை ஒதுக்கி, ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வுக்கு ஆதரவான அதிகாரிகள் எல்லாம் இன்று போக்குவரத்துத் துறை, ஆவின், கரூர் காகித ஆலை விஜிலென்ஸ் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது கிட்டத்தட்ட சிறைவாசம் போன்றது.

ஆனால், நிஜத்தில் ஜெயலலிதாவுக்கு நேரிடையாக துரோகத்தைச் செய்தவர் இன்று சென்னையிலேயே, அதுவும் அவர் கேட்ட இடத்திலேயே பணிமாற்றம் கிடைத்தி ருக்கிறது. அப்படி என்றால்... அதற்கு ரத்தினக்கம்பளம் விரித்ததாகத்தானே அர்த்தம்.

அத்தகைய வரவேற்பைப் பெற்றிருப்பவர்தான் குமரேசன். 1996-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தவர். சட்டம்-ஒழுங்கு பிரிவில் தேர்வாகி இருந்தாலும், மாநில உளவுத்துறையின் டெலிபோன் ‘டேப்பிங்’ பிரிவில் பணியமர்த்தப்பட்டார். ஆரம்பம் முதல் டேப்பிங் பிரிவில் திறமையாக இருந்ததால், தி.மு.க. ஆட்சி 2006-ம் ஆண்டு வந்த போதும், அதே பிரிவில் பணியைத் தொடர்கிறார்.

மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக ஜாபர் சேட் 2007-ம் ஆண்டு மத்தியில் பதவிக்கு வருகிறார். அன்றிலிருந்து, குமரேசனின் பணிகள் துரிதமாகின்றன. ஜாபரின் ராஜ விசுவாசியாக மாறுகிறார் குமரேசன்.

IMG

குமரேசன்



தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோரின் ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்ட டெலிபோன் நிறுவனத்துக்கும் தெரியப்படுத்திய பின்னரே, ‘டேப்பிங்’ செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டது. இதற்கு மூலக்காரணம், ஜாபர் சேட்.

அரசியல்ரீதியான தகவல்களை விட, தனிப்பட்ட ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அலாதி பிரியம். அதன் காரணமாகவே, பல அரசியல் தலைவர்களின் குடும்ப ரகசியங்களை பல வகைகளில் ஒட்டுக்கேட்டுச் சொல்லி, கருணாநிதியிடம் ஜாபர் நல்ல(!) பெயரைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

‘வெட்டி வா’ என்று ஜாபர் சேட் உத்தரவிட்டால், ‘கட்டி வருகிற’ தளபதியாக குமரேசன் விளங்கினார்.வெறும் டெலிபோன் ‘டேப்பிங்’ மட்டும் செய்வது அல்ல குமரேசனின் பணி. எதை ‘எடிட்’ செய்ய வேண்டும். எதைச் சேர்த்தால், இன்னும் சுவாரஸ்யம் கிடைக்கும் என்று ஒட்டு, வெட்டு பணிகளிலும் வல்லுனராக இருந்தார் குமரேசன்.

குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, அவரது வீட்டிலிருந்து யாரிடம் பேசினாலும், அன்று இரவே முதல்வருக்கு வெட்டு, ஒட்டு வேலைகளைச் சேர்த்து போட்டுக் காட்டப்படும். ஜெயலலிதாவின் வீட்டுத் தொலைபேசி எண்கள் அத்தனையும் ‘டேப்பிங்’ பிரிவில் இருந்தன.

ரகசிய எண் என்று நினைத்து ஜெயலலிதா வைத்துக்கொண்டிருந்த செல்போனும் ‘டேப்பிங்’ வளையத்துக்கு வந்தது. இதை அவரே பலமுறை வெளிப்படையாகச் சொல்லி, தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார்.

ஜெயலலிதாவின் பல பேச்சுக்களை டேப் செய்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா போனை டேப் செய்து, அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது, எதிர்க்கட்சிகள் ஒன்று சேரக்கூடாது. குறிப்பாக, அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க. சேரவே கூடாது என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஜாப ருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் ஒரு கட்டம்தான், குமரேசன் செய்த அசத்தல் பணி. ‘துக்ளக்’ ஆசிரியர் சோ, வாரம் இருமுறையாவது ஜெயலலிதாவிடம் டெலிபோனில் பேசுவார். அந்த பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் பற்றி சில பேச்சுக்கள் வருகின்றன. விஜயகாந்தைப் பற்றி, ஜெயலலிதா என்ன ‘கமெண்ட்’ செய்தார் என்பது யாருக்கும் தெரியாது... சோவைத் தவிர.

ஆனால், அந்த டேப்பில் பதிவான வார்த்தைகளோடு, சில வார்த்தைகள் கோக்கப்பட்டு, ஜெயலலிதாவே விஜயகாந்தைப் பற்றி அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தியது போல செய்தார் குமரேசன். பின்னர் அதை, அப்படியே விஜயகாந்த் வசம் சேர்க்க வேண்டுமே?

அதற்கு, முன்னாள் அமைச்சர் மதுசூதனனின் அக்காள் மகன் ஜெயபிரகாஷிடம் ஜாபர் அந்த கேசட்டைக் கொடுத்தார். ஜெயபிரகாஷ், அந்த கேசட்டை விஜயகாந்திடம் சேர்க்கிறாரா என்பதைக் கண்காணிக்க, அவருக்குத் தெரியாமல், குமரேசனையே ஜாபர் ரகசியமாக அனுப்பி வைத்தார்.

அதுமட்டுமில்லை, ஜெயலலிதாவைப் பற்றி விஜயகாந்த் டெலிபோனில் தவறாகப் பேசியது போல ‘செட்டப்’ செய்து, அதையும் போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தார் ஜாபர். அந்த ஒட்டு வேலையையும் துல்லியமாகச் செய்து முடித்தவர் இந்த குமரேசன்தான்.
7_3
அன்று, இந்த ‘டேப்பிங்’கில் வந்த வார்த்தைகளை நம்பி விஜயகாந்தோ, ஜெயலலிதாவோ ‘ரியாக்ட்’ செய்திருந்தால், அன்றே கூட்டணி முறிந்து போயிருக்கும்.

இதோடு விடவில்லை உளவுத்துறை. சென்னையில் இருக்கும் அத்தனை கிறிஸ்துவப் பாதிரியார்களையும் அழைத்துக் கொண்டு, ஜெயலலிதாவைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் ஜெயகுமார். இதை ‘டேப்பிங்’ மூலம் தெரிந்து கொண்டதும், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாதிரியார்களை மிரட்டி, முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதுமட்டுமா? அ.தி.மு.க. தயாரித்த தேர்தல் அறிக்கையில் இருக்கும் தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் ‘மொபைல்’ போனில் இருந்து தெரிந்துகொண்டதால்தான், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

இப்படி... குமரேசன் செய்த பணிகள் ஏராளம். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று தி.மு.க. தலைவர்கள் செயல்பட்டதுபோல, ஜாபரும் குமரேசனும் பாடுபட்டார்கள்.

தற்போது குமரேசன், சென்னையில் மாநில குற்ற ஆவணக் காப்பக அதிகாரியாக இருக்கிறார். இது டம்மியான பதவிதான். ஆனால், சாந்தோம் அலுவலகத்துக்கு மந்தைவெளி போலீஸ் குடியிருப்பு வீட்டிலிருந்து நடந்து செல்லக்கூடிய பதவியைத் தாருங்கள் என்று சொல்லி கேட்டு வாங்கும் அளவுக்கு குமரேசன் பலமிக்கவராக இருக்கிறார் என்பதுதான் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆச்சரியப்படும் செய்தி.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

No comments:

Post a Comment