Saturday, July 9, 2011

இடஒதுக்கீடு விவகாரம்: முதல்வரிடம் அறிக்கை அளித்தது நீதிபதி குழு


இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்.
சென்னை, ஜூலை 8: இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அறிக்கை தயாரித்து அதனை முதல்வர் ஜெயலலிதாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகப் பிரிவினருக்கு 69 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கென சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

"50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில் அத்தகைய முடிவு எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களை அரசு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்க வேண்டுமென்றும், அந்த விவரங்களின் அடிப்படையில் ஆணையம் இடஒதுக்கீட்டின் அளவினை ஓராண்டுக்குள் தீர்மானிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

குழு அமைப்பு: உச்ச நீதிமன்றம் கோரிய விவரங்களைச் சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் குழுவினை அப்போதைய திமுக அரசு அமைத்தது.

இந்தக் குழுவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏழுமலை, முருகானந்தம், முனைவர்கள் வி.எம்.முத்துக்குமார், ஆர்.தாண்டவன், எஸ்.பி.தியாகராஜன், பேராசிரியர் டி.சுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, ஓராண்டுக்குள் அதாவது 2011-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதிக்குள்ளாக அறிக்கையை தயார் செய்த நீதிபதி குழு அதனை முதல்வர் ஜெயலலிதாவிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர்.

தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்து இந்த அறிக்கையை வழங்கியது நீதிபதி குழு.

நீதிபதி குழு அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்த பிறகு அதனை தமிழக அரசு, அதை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும்.

No comments:

Post a Comment