Tuesday, January 3, 2012

16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!

ஒரு காலத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு கிடைக்க வேண்டும் என்றால் நகரங்களில் மாதக்கணக்கில், கிராமங்களில் ஆண்டுக்கணக்கில் தவம் கிடக்க வேண்டிய நிலை இருந்தது.


தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்ற பெயரில், தனியார் நிறுவனங்கள் படையெடுப்பை அனுமதித்த மத்திய அரசு, இன்னொரு பக்கம் பிஎஸ்என்எல்லின் மோசமான சேவையை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கவே இல்லை.

இதன் விளைவு, பிஎஸ்என்எல் இணைப்புகளை துண்டித்துக் கொண்டு தனியாரிடம் இணைப்பு பெற்று வருகின்றனர் மக்கள்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 16.49 லட்சம் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் போன் இணைப்புகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பிஎஸ்என்எல் மோசமான சேவை மட்டும் காரணமல்ல. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒரு கையடக்க கருவிக்கே வந்துவிட்டதும் ஒரு காரணம். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததற்கு பின்னர் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த லேண்ட்லைன் இணைப்புகளை திரும்ப ஒப்படைப்பதும் அதிகரித்தது.

இப்போது திடீரென விழித்துக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், கட்டணம் குறைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்தாலும், அவையெல்லாம் காலம்கடந்த ஞானோதயமாகிவிட்டது.

பிஎஸ்என்எல்லுக்கு அடிப்படைக் கட்டணம் வசூலிப்பது முற்றாக நிறுத்தப்பட்டால்தான், லேண்ட்லைன் இணைப்புகளை துண்டிக்காமல் இருப்பார்கள் மக்கள் என்ற கருத்தை தொலைத் தொடர்பு அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இதுபோன்ற காரணங்களால், நாட்டில் பரவலாக தரைவழி இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பது கடந்த நான்கு ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் இணைப்புகள் அதிகளவில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் தமிழகத்தில் 2லட்சத்து 40,441 தரைவழி இணைப்புகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் 2.40 லட்சம் இணைப்புகளும், மத்திய பிரதேசத்தில் 2.04 லட்சம் இணைப்புகளும், கர்நாடகாவில் 1.47 லட்சம் இணைப்புகளும், கேரளாவில் 1.39 லட்சம் இணைப்புகளும்,

ஆந்திராவில் 1.61 லட்சம் இணைப்புகளும், ராஜஸ்தானில் 1.21 லட்சம் இணைப்புகளும், பஞ்சாபில் 1.15 லட்சம் இணை ப்புகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 - 09ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 லட்சம் இணைப்புகளும், 2009&10ல் 4.48 லட்சம் இணைப்புகளும், 2010 -11ல் 4.12 லட்சம் இணைப்புகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இப்படி 4 ஆண்டுகளில் 16.49 லட்சம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment