“கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொண்டர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ என்று பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவித்தும், மன்னார்குடி திவாகரனுடன் ஓ.எஸ்.மணியன் நெருக்கம் காட்டுகிறார்.
புத்தாண்டு தினத்தில்கூட பல பிரமுகர்கள் மன்னார்குடிக்குச் சென்று திவாகரனிடம் ஆசி பெற்றுள்ளனர் என்று நாகை மாவட்ட அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர். இதனால் நாகை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஓ.எஸ். மணியன் நீக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஜெயபால் நியமிக்கப்படடு அதன் ஒருகட்டமாக ஓ.எஸ். மணியன் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களில் தொடர்ந்து ஒவ்வொரு தலையாக விழ ஆரம்பித்திருக்கிறது. திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த பி.ஜி.ராஜேந்திரனின் பதவி பறிக்கப்பட்டு, அது தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆர்.முருகையா பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘ராஜேந்திரன் நடராஜன் ஆதரவாளர். சமீபத்தில் அவரை வைத்து பூலித்தேவன் விழாவை சிறப்பாக நடத்தியவர் அவர்தான். அவருடன் தொடர்பில் இருந்து வந்ததால் நீக்கப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள்.
அதேபோல், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருந்த பழ.கருப்பையாவின் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. அவரது மாற்றத்துக்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ‘காவல்கோட்டம்’ என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதெமி விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பாராட்ட சென்னை சோவியத் தூதரக அலுவலகத்தின் அரங்கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பழ.கருப்பையா, ‘மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவர்கள் அனைத்தையும் கற்றவர்கள்’ எனப் பேசினார். ‘கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் இவரே இப்படிப் பேசுவதா?’ என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கு புகார் போக, அதற்காகத்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது என்கிறார்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள். ஆனால், வேறு சிலரோ, ‘அதுவல்ல காரணம்... பழ.கருப்பையாவை சபாநாயகராக அமர்த்த வேண்டும் என்று அம்மா யோசித்தார். அதனால்தான், அவரது பதவியை நீக்கினார்’ என்கிறார்கள்.
இதெல்லாம் முடிந்த விஷயங்கள் என்றால், இனி வரப்போகும் சமாசாரங்கள் இடியாகவே விழும் என்கிறது கட்சியின் வட்டாரம்.
அடுத்து குறிவைக்கப்பட்டிருப்பது பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அ.தி.மு.க. கொங்கு மண்டல நிர்வாகியாகச் செயல்பட்டவர் ராவணன். சசிகலா குடும்பத்தின் நெருங்கிய உறவினர். இவர் இப்போது நீக்கப்பட்டுவிட்டார். 2006-ல் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமியை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பை ராமலிங்கத்துக்கு வாங்கித் தந்தவர் ராவணன்தான். ராவணனின் மகனை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படிக்க வைத்து முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டாராம் ராமலிங்கம். ராஜ்ய சபா எம்.பி. பதவி அவருக்குக் கிடைத்ததும் சசிகலா மற்றும் ராவணன் மூலமாகத்தானாம்.
இதெல்லாம் ராவணன் - ராமலிங்கம் தொடர்பை உறுதி செய்தாலும், லேட்டஸ்டாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுவதுதான் ராமலிங்கத்துக்கு வேட்டு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சி நிதியாக ஈரோடு மாநகர் மாவட்டத்தின் சார்பில் ரூபாய் 27 லட்சம் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. உண்மையில், அப்போது ராமலிங்கம் வசூலித்தது கட்சிக்குக் கொடுத்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாம். அதில் கணிசமான தொகை ராவணனின் பாக்கெட்டுக்குப் போனதாம்.
அடுத்த புகார்... பொதுப்பணித் துறை அமைச்சரானதும் முதல் வேலையாக தி.மு.க. ஆட்சியில் வேலை செய்த காண்ட்ராக்டர்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் வேலை தொடர வேண்டுமென்றால், பில் தொகை பாஸ் ஆக வேண்டும் என்றால், காண்ட்ராக்ட் தொகையில் இரண்டு சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும்’ என ஆர்டர் போட்டாராம். மலையாகக் குவிந்த அந்தத் தொகையில் ஒரு பகுதி ராவணனுக்குப் போனதாம்.
ஆகவே, அமைச்சர் ராமலிங்கத்துக்கு தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்றே ஈரோடு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் கறாராகச் சொல்கிறார்கள்.
அடுத்து அதிகமாக அடிபடும் பெயர் அமைச்சர் சின்னையா. திவாகரனின் வலது, இடது என சென்னையில் விளங்கியதே அமைச்சர் சின்னையா மற்றும் தாம்பரம் நகரமன்றத் தலைவரான கரிகாலன்தான். அடுத்த குறி அவர்களுக்குத்தான் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
‘‘அமைச்சர் சின்னையாவுக்கு அப்போதைய தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மிகவும் நெருக்கமானவர். இது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதேபோல தாம்பரம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்திலிங்கமும் நெருக்கமானவர்தான். சின்னையா எம்.எல்.ஏ. சீட் கேட்டு விண்ணப்பித்தபோதே, வைத்திலிங்கமும் அவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று அம்மாவிடம் கொடுக்கப்பட்டது. இதனால் சின்னையாவிற்கு சீட் கிடைக்காது என்றே நம்பியிருந்தோம். ஆனால், அதையும் மீறி திவாகரனின் ஆசியாலும் ராவணன் மற்றும் ‘மிடாஸ்’ மோகனின் நெருக்கத்தாலும் சீட் கிடைத்துவிட்டது. அதுமட்டுமின்றி அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தனர். தொடர்ந்து அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியும், அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததும் அவரின் துறையும் கூடுதலாகத் தரப்பட்டதால் அவரின் வளர்ச்சி எங்கோ போய்விட்டது. ‘ராவணனும், மோகனும்தான் இந்த வளர்ச்சிகளுக்குக் காரணம்’ என்று சின்னையாவே பலமுறை சொல்லியிருக்கிறார்.
‘மிடாஸ்’ மோகனின் மகன் திருமணத் தின் போது அலங்கார வளைவுகளிலிருந்து சாப்பாடு சப்ளை செய்வதிலிருந்து அனைத்திலும் முன்னால் இருந்து செய்தது சின்னையாவும், கரிகாலனும்தான். இந்த விவகாரங்களை அம்மாவிற்கு ஏற்கெனவே அனுப்பிவைத்தோம். அதன் அடிப்படையில்தான் அம்மா அவரிடமிருந்து முக்கியத் துறைகள் இரண்டையும் எடுத்துவிட்டு, கால்நடைத் துறையைக் கொடுத்துள்ளார். இப்போது அதுவும் நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான்’’ என்றவர்கள் தொடர்ந்து,
‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. நீக்கப்பட்டதைக் கண்டித்து ம.தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று அம்மாவின் உருவபொம்மையையும் படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் தாம்பரம் நகர ம.தி.மு.க. செயலாளர் குபேரா ஜெய்சங்கர். அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் சேர்மனுக்கு ம.தி.மு.க.வில் சீட் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் வாபஸ் வாங்கிய அவர், அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.அ.தி.மு.க.வுக்கு வந்து ஒருமாதம்கூட ஆகாத குபேரா ஜெய்சங்கர், தனது நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவரின் பெயரை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மேலாக பிரதானப்படுத்தி வருகிறார்’’ என்றார்கள்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கரிகாலன் 2002-ல்தான் தாம்பரம் பகுதிக்கே வந்தார். திடீரென அவருக்கு கட்சியில், மாவட்டத்தில் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டதில் அனைவருக்கும் அதிருப்தி. ‘மிடாஸ்’ மோகனின் ஆட்களுடன் சேர்ந்து டிரான்ஸ்போர்ட் பிஸினஸ் செய்துவருகிறார். அந்த டிரான்ஸ்போர்ட் மூலம்தான் டாஸ்மாக் சரக்கை தமிழ்நாடு முழுக்க சப்ளை செய்யும் காண்ட்ராக்டை எடுத்து நடத்தி வருகிறார்கள். இப்போது நிலைமைகள் மாறவும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்’’ என்றார்கள்.
அமைச்சர் சின்னையா தரப்பிலோ, “அம்மாவும் சசிகலாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அமைச்சர் சசிகலா தரப்போடு நெருக்கமாக இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆணைக்குப் பிறகு அவர்களோடு எந்த நெருக்கமும் இப்போது வைத்துக் கொள்ளவில்லை’’ என்கிறார்கள்.
இப்படி பல அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது பல்வேறு புகார்களை கட்சிக்காரர்கள் தட்டிவிட்டுக்கொண்டிருக்க, மேலிடத்திலிருந்து அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பார் களோ என பதறிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும். ஏற்கெனவே தனது முதல் மன்னிப்பை பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கிவிட்டார் அம்மா. இந்நிலையில், இரண்டாவது மன்னிப்பை தனித்தனியாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கும் மூர்த்தி, டாக்டர் வெங்கடேஷின் ஆதரவாளராம். தனது மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளராக இருந்த ஜெயபால் என்பவரை கட்சியில் இருந்து நீக்கினார். இது தொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தது. டாக்டர் வெங்கடேஷ் சொல்லி நீக்கியதாக ஒப்புக்கொண்டாராம் மூர்த்தி. இதுபோல அமைச்சர்கள் வேலுமணி, டாக்டர் விஜய் உள்பட 7 அமைச்சர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களாம்.
மேலிடத்திலும், ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவரையும் மன்னித்து அப்படியே தொடர முடிவு செய்திருப்பதாகவும், அநேகமாக தை மாதம் பிறக்கும் போது வழியும் தெளிவாகிவிடும் என்றும் சொல்கிறார்கள்!
No comments:
Post a Comment