காவல் துறையில் கருணாநிதி போலீஸ், ஜெயலலிதா போலீஸ் என்று இரண்டு பிரிவினர் உண்டு என்பது தெரியும். ஆனால், சசிகலாவுக்கும் தனியே, 'சின்னம்மா போலீஸ்’ என்று இருக்கிற விஷயம் தெரியுமா? அதனால்தான், 21 அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்கள்.
அ.தி.மு.க. அரசில் புதிதாக ஒரு மந்திரி நியமிக்கப் பட்டதும், 'நான் பழனிவேல் ஐயா சிபாரிசு' என்ற அறிமுகத்துடன் ஒருவர் வருவார். 'நான் இன்னையில் இருந்து உங்களுக்கு செக்யூரிட்டி ஆபீஸர்' என்று சல்யூட் அடிப்பார். அடுத்த நிமிடம், அமைச்சரின் செல்போனுக்கு அழைப்பு வரும். மறுமுனையில் பேசியவரிடம், 'ஓகே சார்.. இதுவரை நானாக கேட்டு வாங்கினது போலவே இவர் பெயர் விவரங்களை இப்பவே முதல்வர் ஆபீஸுக்கு சிபாரிசு பண்ணிவிடுகிறேன்' என்று தலையாட்டுவார் அமைச்சர். இப்படித்தான் ஒவ்வோர் அமைச்சரிடமும் நடராஜனின் சகோதரர் பழனிவேல் மூலம் செக்யூரிட்டி ஆபீஸர்கள் போய் ஒட்டிக்கொண்டனர். இவர்கள் முக்கால்வாசிப் பேர் மன்னார்குடி ஏரியாவைத் தங்களின் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் தங்களை, சசிகலாவின் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டனர்.
பழனிவேல் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால், அவருக்கு நன்கு தெரிந்த வேறு சிலரையும்கூட செக்யூரிட்டி ஆபீஸர்களாக சில அமைச்சர்களிடம் சேர்த்துவிட்டார். பொதுவாக, ஓர் அமைச்சருக்கு மூன்று பேர் வரை செக்யூரிட்டி ஆபீஸர்கள் இருக்கலாம். அவர்களில் ஒருவர் பழனிவேல் சேனல் மூலம் வந்தவர். மற்ற இருவர் அமைச்சரின் சாய்ஸ். ஆனால், வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் தஞ்சாவூர்காரர் என்பதாலோ என்னவோ, அவருடைய மூன்று செக்யூரிட்டி ஆபீஸர்களும் மேற்படி சேனலில் வந்தவர்கள்.
'அம்மாதான் நமக்குச் செக் வைக்க இப்படி செக்யூரிட்டி ஆபீஸர் அனுப்பி இருக்கிறாரோ?' என்று அமைச்சர்கள் அப்போது பேசிக்கொண்டனர். அதனால், பழனிவேல் அனுப்பிய செக்யூரிட்டி ஆபீஸர்களைக் கண்டாலே, அமைச் சர்கள் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை காட்டுவார்கள். இந்த செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கு இடப் பட்ட பணி - அமைச்சரின் 24 மணி நேர நடவடிக்கைகளை உடனுக்குடன் பழனிவேல் சேனலுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான். இவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து, பழனிவேலு பக்கம் இருந்து அவ்வப்போது விசாரணை நடைபெறுவதும்... அமைச்சர்களை அலற வைப்பதும் நடக்குமாம்.
சசிகலா அண்டு கோ-வை கடந்த டிசம்பர் 15-ம் தேதி கட்சியைவிட்டு நீக்கிய பிறகு, இந்தச் சேனலில் வந்தவர்களின் பின்னணியை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், இவர்கள் சேனலுடன் தொடர்பில் இருந்ததை செல்போன்கள் காட்டிக் கொடுத்து விட்டன. அதைத் தொடர்ந்துதான், அமைச்சர்களின் செக்யூரிட்டி ஆபீஸர்கள் 21 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு மாற்றப்பட்டார்கள்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விசுவ நாதன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, மாதவரம் மூர்த்தி, பழனியப்பன், பச்சைமால், சுந்தர்ராஜ், வைத்தியலிங்கம் உள்ளிட்ட 14 பேரின் பாது காவலர்களாகப் பணிபுரிந்தவர்களுக்கு முதல் கட்டமாக கல்தா தரப்பட்டதன் முழு விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது. அமைச்சர் வைத்திய லிங்கத்திடம் பணி புரிந்த மூன்று பேருமே மாற்றப்பட்டு உள்ளார்கள். பழனிவேல் சேனல் தவிர, அமைச்சர்களின் சுயவிருப்பத்தின் பேரில் செக்யூரிட்டி ஆபீஸர்களாக வந்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் அதே பணியில் தொடர்கிறார்கள்.
இந்த அதிரடி மாறுதல்கள் பற்றி டி.ஜி.பி. அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாற்றப்பட்ட அனைவரும் பழனிவேல் சேனலில் வந்தவர்கள் என்பதுதான் பிரச்னை. சசிகலா வின் பெயரைத் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தி வந்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதல் கட்டமாக 21 பேர் மாற்றப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் அப்பாவிகள். அன்றாட நிகழ்வுகளை இவர்கள் வெளியில் உள்ள சிலருக்குச் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் மர்மமான காரியங்களிலும் ஈடுபட்டு வந்திருக் கிறார்கள். அடிக்கடி, சென்னையில் இருந்து மன்னார்குடி வரை காரில் பயணித்திருக்கிறார்கள். அந்தக் காரில் என்ன இருந்தது? இவர்கள் எதற்காக முன்ஸீட்டில் உட்கார்ந்தபடி பைலட் ஆகச் சென்றார்கள் என்பதும் புரியாத புதிராக இருக் கிறது. அவர்களின் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில்தான், தற்போது அவர்களை மாற்றி இருக்கிறோம். அடுத்த கட்டமாக, அவர்களைப்பற்றி வந்துள்ள பெட்டிஷன்களைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர்களைக் கட்டாயப்படுத்திக்கூட சில செயல்களை யாராவது செய்ய வைத்து இருக்கலாம். அந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரியே நேரில் வந்து சொல்லிவிட்டால் நல்லது'' என்றார்.
அடுத்தபடியாக இப்போது, மாவட்டங்களில் உள்ள 'சின்னம்மா போலீஸ்’ மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்ட உளவுப்பிரிவு அதிகாரி, மன்னார்குடி டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களில் பணிபுரிந்த டி.எஸ்.பி-கள் வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் திவாகரனுடன் தொடர்பில் இருந்து அவரால் பதவி மாற்றம் பெற்று வந்தவர்கள் டம்மியான பதவிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதேபோல், சென்னை, கோவை, திருச்சி போன்ற ஊர்களிலும் தலையாட்டம் போட்ட போலீஸ் அதிகாரிகளை டம்மியான பதவிகளுக்கு மாற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறது டி.ஜி.பி. அலுவலக வட்டாரம்.
யார் இந்த அதிகாரிகள்?
முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியை ஸ்பெஷலாகக் கவனித்துக் கொள்வது செக்யூரிட்டி பிரிவு. முதல்வருக்கு மட்டும் கோர் செல் என்று அழைக்கப்படும் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். எஸ்.பி-யான சரவணன், இந்த கமாண்டோ படைக்குப் பொறுப்பு. மாநில மந்திரிகள் பாதுகாப்பு விவகாரத்தை எஸ்.பி-யான பாலசுப்பிரமணியன் கவனிக்கிறார். மாநில மந்திரிகளைப் போன்றே மத்திய மந்திரிகள், நீதிபதிகள், தூதரகங்கள், தமிழகம் தவிர வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து வரும் அதிமுக்கிய வி.ஐ.பி-கள், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ள வி.ஐ.பி-கள் போன்றவர்களின் பாதுகாப்புக்காக மட்டுமே சுமார் 350 பேர் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 100 பேர், தமிழக மந்திரிகளைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment