Saturday, January 14, 2012

வைரமுத்துவின் இளமை ரகசியம்

வார்த்தையில் மட்டும் அல்ல... வாழ்க்கையிலும் இளமை மாறாதவராகவே ஈர்க்கிறார் வைரமுத்து. கட்டுடல் ஆணைப்பற்றிப் பாடல் எழுதச் சொன்னால், தன்னைக் கண்ணாடியில் பார்த்தபடியே கவிஞர் தாராளமாகக் கவிதை புனையலாம். 58 வயதிலும் மார்ச் ஃபாஸ்ட் நடை, பெரும் வெடிச் சிரிப்பு, எதிலும் எப்போதும் நேர்த்தி, அணிகிற ஆடை துவங்கி உச்சரிக்கிற தமிழ் வரை அத்தனை சுத்தம். தமிழ்ப் பாட்டுலகின் மார்க்கண்டேயனாக வலம் வருகிறார் கவிப்பேரரசு.

கீழ்வானம் சிவக்கும் அதிகாலைப் பொழுதில், பெசன்ட் நகர் கடற்கரையில் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியில் இருந்த இந்த இயற்கை நேசனை சந்தித்தோம். அவரோடு நடைபோட்டபடி அளவளாவியதில் இருந்து...
''கால் நூற்றாண்டுக்கு முன்பு பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறீர்களே..?''
''செரிக்காத உணவும், எரிக்காத சக்தியும்தான் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். வெறும் வயிற்றில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் அதிவேகமாக நடைப் பயிற்சி செய்வது என் தினசரி வழக்கம். வியர்வை சொட்டும் நடைப் பயிற்சி முடிந்த பிறகு, என் வீட்டை ஒட்டி உள்ள பூங்காவுக்குள் சென்று, அங்கு இருக்கும் வள்ளுவர் சிலை முன்பாக நின்று நான் சுவாசிக்கும் காற்று நுரையீரலின் தரை தொடும்படி மூச்சுப் பயிற்சி செய்கிறேன். என் உடலும் உள்ளமும் இளமையாக இருக்க இதுவே காரணம்!''
''தனிமையை அதிகம் விரும்புகிறீர்களே... தனிமைக்கும் சிந்தனைக்கும் அப்படி என்ன தொடர்பு?''
''நான் நடைப் பயிற்சி செய்யும்போதுகூட நண்பர்களோடு செல்ல விரும்பாதவன்; அந்த அளவுக்குத் தனிமை விரும்பி. சென்னை மக்களில் 90 சதவிகிதப் பேருக்கு மன அழுத்தத்தால் தயாரிக்கப்பட்ட வாழ்க்கைதான் உள்ளது. வீட்டில் இரைச்சல், வெளியில் இரைச்சல், வாழ்வைக் குறைக்கும் வாகன இரைச்சல், ஊரைக் கிழிக்கும் ஊர்வல இரைச்சல், கண் - காது திருடும் கலாசார இரைச்சல்... இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் பூக்களோடு எப்படிக் கை குலுக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன்... விவாதிக்க விரும்புபவன் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும்; படைக்க விரும்புபவன்... தனிமையில்தான் இருக்க வேண்டும்!''
''கவிப்பேரரசு ரசித்து ருசிப்பது... சோளச் சோறு, கம்பங்களி, கேழ்வரகுக்கூழ் என கிராமத்துச் சமையலா... அல்லது இறக்குமதியாகி வரும் நகரத்து நவீன உணவு வகைகளா?''
''உணவு விஷயத்தில், நான் எப்பொழுதுமே வடுகபட்டி வாரிசு. என் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் சாமை, குதிரை வாலி, வரகு சமைத்து தயிர் கலந்து சாப்பிடுவது என்றால், எனக்கு உயிர். தொட்டுக்கொள்ள புளி சேர்த்து செய்த பாகற்காய் கூட்டு, வல்லாரைக் கீரை, கொள்ளு ரசம் இதுதான் என் தோட்டத்தில், என் தினசரி காலை உணவு. சென்னையில், அவித்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுவேன். வெளியூர் பயணம் செல்லும்போது, எந்த நாட்டுக்குச் செல்கிறேனோ... அந்த நாட்டு உணவையே சாப்பிடும் பழக்கமும் உண்டு. லண்டனில், ஆவி பறக்க இட்லி கேட்பதும், ஜப்பானில் ரசம் கேட்பதும் சரியல்ல. காரணம், அந்தந்த நாட்டின் உணவுகளே அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு சரியாக நம் உடலைத் தயார்படுத்தும். இந்தக் காய்கறிகள்தான், இந்தப் பழங்கள்தான் சாப்பிட வேண்டும் என்கிற வரைமுறை எதுவும் என்னிடம் கிடையாது. நாவல் பழம் கிடைக்கும்போது அதைச் சாப்பிடுவேன். கொய்யா விளையும்போது, அதைச் சாப்பிடுவேன். அந்தந்தப் பருவங்களில், இயற்கை எதை விளைவிக்கிறதோ, அதை அப்படியே கடைப்பிடித்தாலே... நம் ஆரோக்கியம் நம் கட்டுக்குள் இருக்கும்.''
''கிராமத்து வாரிசான நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? நகரத்துவாசிகளான அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?''
''பல் துலக்கும் இலக்கணமே பல பேருக்குத் தெரிவது இல்லை. மேல் பற்களை மேலிருந்து கீழாகத் துலக்க வேண்டும். கீழ்ப் பற்களைக் கீழிருந்து மேலாகத் துலக்க வேண்டும். மிக முக்கியமானது... உட்பற்களைத் துலக்குவது. இதைப் பல பேர் மறந்துவிடுகிறார்கள். பாதங்களையும் பற்களையும் தூய்மையாக வைத்து இருந்தாலே, பல நோய்கள் நம்மை எட்டிப்பார்க்காது. இவை இரண்டையும் தூய்மை செய்யாமல், நான் படுக்கைக்குச் செல்வது இல்லை. என்னிடம் இருந்து என் மகன்கள் கற்றுக்கொண்ட முதல் ஆரோக்கியச் செய்தி இதுதான். எந்தச் சூழ்நிலையிலும் சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்; அதையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்; இது நான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. அவர்களிடம் இருந்து நான் தெரிந்துகொண்டது... தேநீரில் பால் கலக்காமல் அருந்துவது.''
''உங்கள் உடல் நலத்தில் உங்கள் மனைவியின் பங்கு?''
''என் உணவைச் சரிவிகித உணவாக்கியதில் என் மனைவியின் பங்கு அதிகம். இன்று சாப்பிட்ட உணவு அடுத்த நாளும் இடம் பிடித்து அலுப்பு தட்டாமல் பார்த்துக்கொள்வார். கண்ட, கண்ட மசாலாக்களைக் கலந்து சமைக்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. என் உடல் நலத்தில், நான் உறுதியாய் இருக்க... அவரே முதல் காரணம்.''
''இத்தனை நெறிமுறைகள் இருந்தும் சர்க்கரைக் குறைபாடு எப்படி எட்டிப் பார்த்தது?''
''பரபரப்பான என் வாழ்க்கை, மன அழுத்தங்களால் பின்னப்பட்டுவிட்டது. ஒரே நாளில் ஆறு தயாரிப்பாளர்கள், ஆறு இசையமைப்பாளர்களுக்குப் பதில் சொல்லும் வாழ்க்கையை 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இந்தத் தொழில் அழுத்தம் சர்க்கரையை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறது. இதனால், இன்னும் என் வாழ்க்கை ஒழுங்குமுறைக்கு வந்துவிட்டது. ஆகவே... சர்க்கரைக்கும் நன்றி!''
''இன்னமும் கணீரென்ற குரல்... எப்படி சாத்தியம்?''
''உடல் நலக் கொள்கை இரண்டு விதப்படும். ஒன்று மரபு வழியானது; மற்றொன்று நம்முடைய வாழ்க்கைமுறை. மரபு வழியாக வந்த நல்ல உடல் நலத்தை நமது பழக்கவழக்கங்களால் கெடுத்துக்கொள்ளவும் முடியும்; மரபு வழியாக வந்த கேடுகளைப் பழக்கவழக்கங்கள் மூலம் திருத்திக்கொள்ளவும் முடியும். குரல்... என் பரம்பரைச் சொத்து. பஞ்சாயத்துப் பேசுகிறவர் என் தாத்தா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே கிட்டத்தட்ட 400 பேரை குரலாலேயே ஆட்சி செய்திருக்கிறார். அந்த ஆளுமை அவர் பேரனுக்கும் வாய்த்திருக்கிறது. புகையிலையும் மதுவும் குரலை உடைக்கும். இந்தப் பழக்கங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. அதனால், இன்னமும் பராமரிக்க முடிகிறது!''
''சென்னை வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டது?'
''இங்கே நான் இழந்ததைவிட அடைந்தது அதிகம். சென்னை எனக்கு தந்த பொருளாதாரம்தான் என் சுகாதாரத்தையும் இளமையையும் தக்கவைத்துக்கொள்ள எனக்குக் கற்றுக் கொடுத்தது. எனது பெரிய செலவே சுத்தத்துக்காக நான் செலவிடுவதுதான். முடிந்த வரை என்னை, என் வீட்டை, என் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறேன். எந்த ரசாயனக் கலவையும் சேர்க்காமல், வடிகட்டப்பட்ட தண்ணீர் கொண்டுதான் என் வீடு தினமும் துடைக்கப்படுகிறது. இயற்கையோடு இருக்க விரும்புபவன் நான். அதனால் எந்த செயற்கை வாசனைக்கும் என் வீட்டில் இடம் இல்லை. வாரம் ஒரு முறை சாம்பிராணி இடச் சொல்லுவேன். இதைவிட சிறந்த கிருமிநாசினி இருக்க முடியாது. இதுவரை நானும் எந்த வாசனைத் திரவியத்தையும் பூசிக்கொண்டது கிடையாது. தேனிக்குச் செல்லும்போது சிலுக்குவார் பட்டியில் விற்கப்படும் மல்லிகைப் பூவைப் பந்து, பந்தாக வாங்கி வந்து என் தலைமாட்டின் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அந்த மணத்தைத் தவிர வேறு எந்த செயற்கை மணத்திலும் எனக்கு மயக்கம் இல்லை.''
''எழுத்தாளர்களோடு மட்டும்தான் உரையாடுவீர்களா? மருத்துவர்களோடு கலந்து உரையாடும் பழக்கம் இருக்கிறதா?''
''ஏன் இல்லை..? என் மிகப் பெரும் பலமே மருத்துவர்களின் நட்புதான். இருதயத்துக்கு ராமச்சந்திரா தணிகாசலம்; கண்ணுக்கு பத்ரிநாத், சுரேந்திரன்; வயிற்றுக்கு ரங்கபாஷ்யம், பழனிச்சாமி; பல்லுக்கு பாலாஜி; காது, மூக்கு, தொண்டைக்கு மோகன் காமேஸ்வரன்; மூட்டுக்கு மோகன்தாஸ்; மயில்வாகனன் பொது மருத்துவத்துக்கு நடேசன்; சர்க்கரைக்கு ராமச்சந்திரன்; குடும்ப டாக்டர் அப்பல்லோ தேவராஜன். என் ஆரோக்கியத்தில் மட்டும் அல்ல... கவிதைகளில் வரும் மருத்துவம் சார்ந்த பல சந்தேகங்களுக்கும் பதில் கொடுப்பது இவர்கள்தான். அதனால்தான் 'மருத்துவ முறையை மாற்றுங்கள் டாக்டர்’ என்று என் கவிதை மூலம் ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் மருத்துவ அறிக்கைவிட முடிந்தது.''
''தேனி மாவட்டத்தில் இருந்து வந்த மூன்று பேருமே (பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து) சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே? இது என்ன 'தேனி’ மாவட்டத்தின் சிறப்பா?''
''(சிரித்துக்கொண்டே) உழைத்தால்தான் சோறு; உழைத்தால்தான் வாழ்க்கை என்று நம்புகிறவர்கள் நாங்கள். உழைப்பாளிகளின் கூட்டில் இருந்து வந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகத்தான் இருப்பார்கள்.'
அது சரி.... தேனீக்கள் எப்போதும் சுறுசுறுப்பாகத்தானே இருக்கும்!

No comments:

Post a Comment