பா.ம.க-வுக்கும் மருத்துவர் ராமதாஸுக்கும் இது போதாத காலமோ? சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் பிளவு என இடி மேல் இடி விழுந்து வரும் வேளையில்... 2006-ம் ஆண்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய முயன்ற வழக்கு... எங்கெங்கோ சுற்றி, சி.பி.ஐ. கரங்களுக்கு மாறி, இன்னும் சில தினங்களில் தைலாபுரத் தோட்டத்துக்குள் விசாரணைக்காக போலீஸார் நுழையலாம் என்று தகவல்!
தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகமும், பா.ம.க. சார்பில் கருணாநிதி என்பவரும் வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். அப்போது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது பா.ம.க.!
வாக்குப் பதிவு நடந்த மே எட்டாம் தேதி இரவு... சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன்திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், சி.வி.சண்முகத்தைத் தாக்க முயல.... அங்கு நின்ற காரின் கீழே படுத்துத் தன்னைக் காத்துக்கொண்டார். சி.வி.சண்முகத்துக்குப் பதிலாக அவரது உறவினரும் அ.தி.மு.க. தொண்டருமான முருகானந்தத்தை அந்தக் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவம் தொடர்பாக... பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் செய்தார் சி.வி.சண்முகம்.
இந்தக் கொலை வழக்கு பற்றி திண்டிவனம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். ''அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்த காரணத்தினாலும், மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு பா.ம.க-வின் ஆதரவு அவசியம் தேவைப்பட்டதாலும், ராமதாஸின் வற்புறுத்தலின்பேரில் அந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டு இருந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய ஆறு பேரையும் வழக்கில் இருந்து நீக்கிவிட்டு... ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நீக்கப்பட்ட ஆறு நபர்களையும் மீண்டும் வழக்கில் சேர்க்கக் கோரி, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம். இந்த மனு விசாரணையில் இருந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலும் முடிந்தது. இன்னொரு பக்கம் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்தது. அப்போது சண்முகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்தார். அதில், ''அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தைக் கொலை செய்த வழக்கிலும், என்னைக் கொலை செய்ய முயன்ற வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட ஆறு நபர்களின் பெயரைச் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீஸில் பதிவு செய்யப்பட்ட 'கேஸ் டயரி'யை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்'' எனக் கோரி இருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தவுடன் ஆத்திரமடைந்த ராமதாஸ், 'என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலைப் பழி சுமத்தும் கட்சியுடன் நான் எப்படி கூட்டணி வைத்துக்கொள்வது?’ எனக் கூறி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மறுவிசாரணை நடத்துவது தொடர்பாக திண்டிவனம் நீதிமன்றத்துக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தார். திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ் உத்தரவு இட்ட பிறகும் போலீசார் மந்தகதியில் விசாரணையைச் செய்து வந்தார்கள். மீண்டும், உயர் நீதிமன்றம் சென்ற சி.வி.சண்முகம், 'ராமதாஸ் உள்ளிட்ட ஆறு நபர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணையும் வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது'' என்று முன்கதைச் சுருக்கத்தைச் சொல்கிறார்கள்.
அதன்பிறகு, திண்டிவனம் வந்த சி.பி.ஐ. டீம், தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தினர். அதன் விளைவாக சில தினங்களுக்கு முன்பு நடராஜன், இளஞ்செழியன், கோபி, பன்னீர்செல்வம், ஆனந்த் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து, செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது ஸ்பாட்டில் இருந்த பத்திரிகையாளர்களிடமும், நேரடி சாட்சிகளிடமும் சி.பி.ஐ. டீம் கடந்த சில நாட்களாகத் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
''இப்போது கைது செய்யப்பட்டவர்கள்தான் நேரடியாக சி.வி. சண்முகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள். இவர்களை அனுப்பி வைத்தது யார் என்ற கேள்விக்கு சி.பி.ஐ. வரும்போது நடக்கப்போகும் கைதுப்படலம் தமிழகத்தை அதிரவைக்கும்'' என்கிறது போலீஸ் இப்போதே!''இந்த வழக்கின் மிக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரகு என்பவர் மர்மமான விபத்தில் இறந்து போனார். அதன் பின்னணிக்கும் இந்தச் சம்பவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது'' என்றும் சொல்கிறார்கள்.
இந்த வழக்கு சம்பந்தமாக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசியபோது, ''ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்காகவும், அப்போது என்னோடு இருந்த அ.தி.மு.க. தொண்டர் கொலை செய்யப்பட்டதற்காகவும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் அளித்திருந்தேன். ஆனால், விசாரணை சரியான முறையில் நடக்காமல், அரசியல் செல்வாக்கால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர். அதன்பிறகு, நான் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று போராடியதன் விளைவு, அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியது. கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் கூலிப் படையினர்தான். அவர்களை அனுப்பியவர்களும், கொலைக்குக் காரணமானவர்களும் யார் என்பது விரைவில் மக்களுக்குத் தெரியும்'' என்றார் சுருக்கமாக.
இதுவரை பாதுகாப்புக்காக மட்டுமே தைலாபுரம் தோட்டத்துக்குள் நுழைந்த போலீஸார், முதன் முறையாக விசாரணைக்காக அங்கு செல்ல இருப்பது ராமதாஸ் குடும்பத்துக்கும், பா.ம.க. தொண்டர்களும் பெரும் அதிர்ச்சிதான்!
No comments:
Post a Comment