Saturday, January 7, 2012

பறிபோகும் மிடாஸ்?

''கிரேக்க இதிகாசங்களின் புகழ் பெற்ற மன்னன் பெயர் மிடாஸ். அவன் தொட்டது எல்லாம் துலங்கும் என்பார்கள். அவன் எதைத் தொட்டாலும் தங்கமாக மாறும். தனது மகளைத் தொடுவான். அவளும் தங்கமாக மாறிவிடுவாள்...'' என்று கழுகார் சொன்னதை இடைமறிக்காமல் கேட்டோம், வரலாற்றுப் பாடம் எடுப்பதன் பின்னணியில் நிகழ்காலப் பாடம் ஏதாவது இருக்கும் என்று தெரியாதா?

கழுகார் விஷயத்துக்கு வந்தார். ''அப்படிப் புதைய லாகக் கொட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நினைப்பில்தான் 'கோல்டன் மிடாஸ்’ என்று அந்த மதுபான ஆலைக்குப் பெயரையும் வைத்தார்கள்!'' கழுகார் நிகழ்காலத்துக்கு வந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

''முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் படப்பை பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான ஆலைதான் மிடாஸ். அதன் நிர்வாகப் பொறுப்பு வெளிப் படையாகவே சசிகலா வட்டாரத்துக்குச் சொந்த மானதாக

அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் தயாராகும் மதுபானங்களைத்தான் மதுக்கடைகளில் விற்க வேண்டும் என்பது ஊர் அறிந்த ரகசியம். அதுவரை தனியார் வசம் இருந்த கடைகளின் சில்லறை விற்பனையையும் அரசாங்கமே எடுத்தது. 'டாஸ்மாக்’ கடைகளாக அவை பச்சை வண்ணத்தில் மின்ன ஆரம்பித்தன. தமிழகத்தில் புதிதாக மதுபான ஆலைக்கு அனுமதி தருவதில் இருந்த ஏராளமான விதிமுறைகளைத் தளர்த்தி, மிடாஸுக்குப் பாதை திறந்தார்கள். 'மிடாஸ் சரக்குகள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன’ என்கிற அளவுக்கு புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வளமும் நலமுமாக அந்த நிறுவனம் வளர்ந்து செழித்தது. ஜெயலலிதா போய் கருணாநிதி வந்தார். 'அரசாங்கமே சாராயம் விற்பதா?’ என்று கேட்டவர், தனது ஆட்சியிலும் அதையே தொடர்ந்தார். அதைவிட ஆச்சர்யமாக, மிடாஸ் கம்பெனியில் இருந்து 'ஓரவஞ்சனை’ இல்லாமல் கருணாநிதியும் சரக்குகள் வாங்கினார். எனவே, மிடாஸ் நிறுவனத்தின் வருமானத்துக்கு எந்தத் தடங்கலும் இல்லை. ஆட்சி மாறினாலும் வரத்து குறையவில்லை. ஆனால், அதற்கு இப்போது சிக்கல் வரப்போவதாகச் சொல்கிறார்கள்.''



''ஆபரேஷன் சசிகலா ப்ராஜெக்ட்டின் அடுத்த ஆக்ஷன் இதுதானா?''
''சசிகலா குடும்பத்துக்குப் பணம் வரும் பாதையை அடைக்கச் சிலர் திட்டம் இடுகிறார்கள். சொத்துக்கள், இடம், பணம் என நிறைய வைத்து இருந்தாலும் தொடர்ந்து பணம் கொட்டும் இடமாக இருப்பது இந்த மிடாஸ் ஆலைதானாம். அதை முடக்கிவிட்டால், அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளை முழுமையாக முடக்கி விடலாம் என்பது திட்டமாம்!:''

''அது சாத்தியமா?''
''சாத்தியமா, இல்லையா என்பதற்கான பேச்சுக் கள் தான் இப்போது அதிகாரிகள் மட்டத்தில் மெள்ளத் துளிர்த்து இருக்கிறது. 'மிடாஸ் ஆலையை அரசாங்கமே எடுத்துக்கொண்டால் என்ன?’ என்ற ஒற்றைக் கேள்வியில்தான் இந்த விவாதம் தொடங்கியது. 'தமிழ்நாட்டில் இருக்கும் மதுபான ஆலைகள் அனைத்துமே தனியாருக்குச் சொந்த மானவை. அரசாங்கம் இதுவரை அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இப்போது மிடாஸை எடுத்தால் அதற்கென ஒரு கார்ப்பரேஷனை உருவாக்கித்தான் நடத்த வேண்டும். அல்லது தனி அதிகாரியை நியமித்தும் நடத்தலாம்’ என்கிறார்கள். அல்லது மிடாஸ் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நிறுவனத்திடம் விற்க வைக்கவும் முயற்சிப்பார்கள் என்கிறார்கள். மொத்தத்தில் சசிகலா உறவு வட்டாரத்தில் அது இயங்கக் கூடாது என்பது திட்டமாம். இது சசிகலாவின் சொந்தங்களுக்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 'ஏற்கெனவே பல இடங்களில் ரெய்டு என்ற பெயரால் அத்துமீறி நடந்துகொண்டார்கள். இப்போது நம்முடைய வாழ்க்கையையே அழிக்கப் பார்க்கிறார்கள்’ என்று புலம்பல்கள் கேட்க ஆரம்பித்து உள்ளன.''

''அதிகாரிகள் தரப்பு ரியாக்ஷன் என்னவாம்?’
''மிடாஸ் சாராய ஆலையை முடக்கச் சொல்லி முதலில் அதிகாரிகளிடம் கறார் காட்டப்பட்டதாம். ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மிடாஸ் சரக்குகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்படுவதால், அதற்கான காலஅவகாசம் அதிகமாகும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களோடு ஆலோசித்த மேலிடம்,

'மிடாஸ் நிறுவனத்தை அரசு நிறுவனமாக ஏற்று நடத்தும் நடைமுறைகளைச் செய்யலாம்’ என்று சொன்னதாம். 'இதனால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுமே?’ எனச் சிலர் தயக்கமாகச் சொல்ல, 'அந்த உறவுகளுக்குப் பணம் காய்க்கும் மரமாக இருக்கும் மிடாஸ் நிறுவனத்தைப் பறித்தால்தான், அவர்கள் வேறு எந்தக் குதர்க்க வேலைகளிலும் ஈடுபடாமல் இருப்பார்கள்!’ எனப் பதில் சொல்லப்பட்டதாம். எனவே, அடுத்த கட்ட அதிரடிகள் இன்னும் சில நாட்களில் இருக்கலாம் என்கிறார்கள். கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மோகன் -தான் அதன் அத்தனை நிர்வாகங்களையும் பார்த்தார். கடந்த ஒரு வாரமாக அவரும் அந்தக் கம்பெனிப் பக்கமாக எட்டிப்பார்க்கவில்லையாம். நிர்வாக ரீதியான விஷயங்களை கார்த்திகேயன் என்பவர் பார்க்கிறாராம்.!''
''பார்ப்போம்!''

''மன்னார்குடி உறவு வட்டாரங்களிலேயே மிகுந்த நடுக்கத்தில் கிடப்பவர் கோவை ராவணன்தான். ஜாதக சம்பிரதாயங்களில் ரொம்பவே ஆர்வமாக இருந்த ராவணன், சில வாரங்களுக்கு முன்பு ஒரு சாமியாரை சந்தித்து இருக்கிறார். 'நாடாளும் யோகம் உமக்கு’ என வாக்குச் சொன்ன சாமியார் ஒரு மோதிரத்தையும் அவருக்கு அணிவித்து, 'பெரிய பதவியில் அமர்ந்த பின்னர் என்னை வந்து பார்த்து நன்றி சொல்’ என்றாராம். மோதிரத்தை மாட்டிக்கொண்டு வந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே அம்மாவின் அதிரடிகள் பாய... ராவணன் நொந்து போனாராம். 'இதனாலதான் எல்லா சிக்கலும்’ எனச் சொல்லி, சாமியார் அணிவித்த மோதிரத்தைக் கழற்றி வீசிய ராவணன் இப்போது நாட் ரீச் ஏரியாவில்!''

''இவர்கள் செய்த தவறுகளுக்கு அந்தச் சாமியார் என்ன செய்வார் பாவம்?''
''உறவு வட்டாரத்தில் ராவணனை 'ராணா’ எனச் சுருக்கி மரியாதையாக அழைப்பார்களாம். 'ராணான்னா அது ரஜினி இல்லண்ணே... நீங்க தாண்ணே’ என உசுப்பேற்றியே ராவணனை ஆனந்தத்தில் மிதக்க வைத்தனர் அவருடைய அடிவருடிகள். 'அண்ணன் ஆரம்பத்தில் முற்போக்குக் கொள்கை கொண்டவராகத்தான் இருந்தார். ஆனால், கார்டன் பக்கம் வந்ததும்தான் அவருக்கும் ஜோசியம், ஜாதகம்கிற வியாதி எல்லாம் தொத்திக்கிச்சு. அண்ணன் அமைதியா இருந்தாலும் அவருடைய உதவியாளரான மோகன் போட்ட ஆட்டத்துக்கு அளவே இல்லை. அண்ணன் பேரைச் சொல்லி பல அமைச்சர்களுக்கும் போன் போட்டு, 'வா... போ’ன்னு அவர் பண்ணிய அட்டகாசங்கள் அதிரடி ரகம். ஆனா, இப்பவும் அண்ணன் அந்த மோகனின் தவறுகளை உணராமல், அந்தச் சாமியாரையே திட்டிக்கிட்டு இருக்கார்!’ என்கிறார்கள் கோவை புள்ளிகள் சிலர். இதற்கிடையில், 'இப்பவும் சொல்றேன்... அவர் பேருக்கு நாடாளும் யோகம் இருக்கு’ என அந்த சாமியார் அள்ளிவிட, கோபத்தில் நையப்புடைத்திருக்கிறது உறவுத் தரப்பு.''

''ஏற்கெனவே மன்னார்குடி சாமியார் ஒருவர் அடி வாங்கினார். இப்போது இவரா?''
''போயஸ் கார்டனிலும் அமைச்சர்களின் பாதுகாவலர்களிலும் பல அதிரடி மாற்றங்களை ஜெ. செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சரவை மாற்றம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்பதையும் உமக்குச் சொல்லி இருந்தேன். ஆனால், மந்திரிகள்தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.''

''இருக்கத்தானே செய்யும்!''
''நீக்கப்பட்ட பாதுகாவலர்களுக்குப் பதிலாக புதியவர்கள் வந்துவிட்டார்களாம். இவர்களில் பலரும் ஆஃப் தி ரெக்கார்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தூங்கும் நேரத்தைத் தவிர்த்து இதர நேரங்களில் அவர்களுக்கு அருகிலேயே அந்த ஆட்கள் இருக்கிறார்கள். யாரைச் சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்கிற விவரங்களை எல்லாம் கார்டனுக்கு தெளிவாகச் சொல்லத்தான் இந்த ஏற்பாடாம். ஓர் அமைச்சருக்கு ஓர் உதவியாளர் என மர்மமாகத் தொடரும் இந்த ஆட்களைப் பார்த்துத்தான் அமைச்சர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள்.''

''ஜெ.ஆட்சி என்றாலே மந்திரிகளுக்கு நித்ய கண்டம் பூர்ண ஆயுசுதானே?''
''அமைச்சரவையில் இருந்து கோகுல இந்திரா, பச்சைமால், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் மூவரும் நீக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு மாற்றாக கு.ப.கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொள்ளாச்சி ஜெயராமன், அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாகவும், கடந்த புதன்கிழமை, கோட்டை வட்டாரத்தில் வதந்தி பரவியது. இந்தச் செய்தி பரவும்போது ஆலங்குடியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் இருந்தார் கு.ப.கிருஷ்ணன். அவருக்குப் பலரும் வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஒரு தொண்டர் உற்சாகத்தில், 'அம்மாவின் கருணைப் பார்வையால் அமைச்சராகி இருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்’ எனச் சொல்லி மேடையிலேயே பொன்னாடை போர்த்தினாராம். இதற்கிடையில் நயினார் நாகேந்திரனின் ஆட்கள் வெடி வெடித்துக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். 'தயவுபண்ணி இப்படிப் பண்ணாதீங்க... அமைச்சரா ஆனாலும் சரி, ஆகலைன்னாலும் சரி... தயவுபண்ணி அமைதியா இருங்க’ எனக் கதறாத குறையாகத் தன் ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார் நயினார். அந்த அளவுக்கு உள்காய்ச்சல் அதிகம்!''

''கார்டன் நிலவரம்?''
''மூதாட்டி ஒருவர் கார்டனில் வலம் வர ஆரம்பித்து உள்ளாராம். முதல்வரின் சித்தி என்று இவருக்கு அடையாளம் சொல்கிறார்கள். அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து சில அதிகாரிகள் டெபுட்டேஷனில் தமிழகம் வரப்போகிறார்கள். முக்கியத் திட்டங்களுக்கான ஆலோசகர்களாக இவர்கள் இருப்பார்களாம். தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதல்வர் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் ஆவாராம். ஒரு வாரமாக, அரசு அறிவிப்புகள் அதிகமாக வருவதைப் பார்த்தீரா? 'சசிகலா குடும்பத்தின் பிரிவால் முதல்வர் எந்த சோர்வுக்கும் ஆளாகவில்லை. சுறுசுறுப்பாக செயல்படுகிறார்’ என்பதைக் காட்டுவதற்கான மூவ்தான் இவை என்றும் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்... பறந்தார்!

No comments:

Post a Comment