சுப்பிரமணியன் சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக் கும் ஓர் ஒற்றுமை உண்டு. சுவாமி ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர். சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர். ஆக, ஆசிரியருக்கும் மாணவருக்கும் போர் ஆரம்பம்!.
'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெலிகாம் உரிமங்களைக் கொடுத்தது, நாட்டின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தது ஆகிய விவகாரங்களில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ... அதே அளவு பங்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் உண்டு’ என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.
அதனால், சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும்... டெல்லி சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில், சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கக் கோரியும் மனு செய்து ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். சுவாமியின் பொதுநலன் வழக்கின் வாதங்கள் முற்றிலும் முடிவடைந்து, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பு எப்போதும் வரலாம். இதற்கிடையே, சுவாமி ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்த தனிநபர் மனுவில், 'மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஆ.ராசாவோடு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்’ என்று மனு செய்ய, இந்தப் புகாரையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார். சுவாமி கேட்கும் ஆவணங்களை வழங்கவும் சி.பி.ஐ-க்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார். மேலும் பல ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருந்தார். இந்த ஆவணங்களோடு சாட்சிகளின் பட்டியலையும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒப்படைத்தார். இதை ஏற்றுக்கொள்ள நீதிமன்றத்தில் சில முறைகள் உண்டு. ஒரு தனிநபர் அளிக்கும் ஆவணங்களும் சாட்சியங்களும் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை சம்பந்தப்பட்ட துறைகளும் அமைப்புகளும் உறுதி செய்து சான்றொப்பங்களோடு கொடுக்க வேண்டும். அதன்படி சுவாமி ஆவணங்களை வாங்கி, சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி ஒப்படைத்து இருக்கிறார்.
2007 நவம்பர் மாதம் முதல் 2008 பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை பல முறை நிதித் துறை அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வது குறித்து நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். 2008 ஜனவரி 9-ல் நிதி அமைச்சக அதிகாரிகள் எழுதிய 13 பக்கக் குறிப்புகள், 2008 பிப்ரவரி 11-ம் தேதி நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப்பிரிவு அனுப்பிய குறிப்புகள் போன்றவை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை உஷார்படுத்தின. ஆனால், இவற்றை மீறி ஆ.ராசாவின் முடிவுகளுக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன்மூலம் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரமும் தனது கடமைகளில் இருந்து தவறினார். ஆ.ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து, தெரிந்தே தவறு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் சுவாமி.
இதற்கு சுவாமி கொடுத்துள்ள மற்ற ஆதாரங்கள், 2008 ஜனவரி முதல் அக்டோபர் 2008 வரை ராசாவும் சிதம்பரமும் ஐந்து முறை சந்தித்துப் பேசிய நடவடிக்கைக் குறிப்புகள். 'இந்த மினிட்ஸ் மூலம், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் டெலிகாம் உரிமங்களை குறைந்த விலைக்கு கொடுக்க சிதம்பரம் ஒப்புக்கொண்டது தெரிய வருகிறது’ என்கிறார் சுவாமி.
இவை தவிர, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 15.01.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதம், சுவாமியின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலக அதிகாரி டாக்டர் பி.ஜி.எஸ். ராவ் எழுதிய பதில் கடிதங்கள், தொலைத்தொடர்புத் துறை அதிகாரியான மதன் சௌராஷ்யா மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சட்ட ஆலோசகர் சன்டோக் சிங் ஆகியோர் எழுதிய குறிப்புகளும் சிதம்பரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
எடிஸாலட் நிறுவனத்துக்கு தனது பங்குகளை பல மடங்குக்கு விற்றது ஸ்வான். இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற யுனிடெக் டெலிகாம் நிறுவனமும், டெலினார் என்கிற நார்வே நாட்டு கம்பெனிக்கு பங்குகளை விற்றது. இந்த முதலீட்டுக்கும் பங்கு விற்பனைகளுக்கும் நிதித்துறை அனுமதியளிக்க, இது சிதம்பரத்தின் கவனத்துக்குச் சென்று விவகாரமாகியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது தந்தை உஸ்மான் இப்ராஹிம் பல்வா, இவர்களது பார்ட்னர்களான வினோத் கோயங்கா ஆகியோருக்கு தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொழில் தொடர்பு இருப்பது குறித்து, மத்திய ரகசியப் புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதனால், 'தேசத்தின் பாதுகாப்பில் சிதம்பரமும் அலட்சியமாக இருந்து ராசாவோடு சேர்ந்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார்’ என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் சுவாமி.
வருகிற 21-ம் தேதி அன்று சுவாமியை வாதாடுமாறு நீதிபதி சைனி கேட்டுக்கொண்டுள்ளார். சுவாமியின் வாதங்களைக் கேட்ட பின்னர், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாகக் கருத முடியுமா இல்லையா என்று நீதிபதி கூறுவார். இந்த முடிவுக்கு முன், சி.பி.ஐ. தரப்பின் வாதத்தையும் கேட்கலாம்.
என்ன நடக்கும்... விரைவில் தெரியும்!
No comments:
Post a Comment