டாக்டர்கள் மொத்தப் பேரையும் வீதிக்குக் கொண்டு நிறுத்தி விட்டது தூத்துக்குடிச் சம்பவம்! சிகிச்சையில், கர்ப்பிணி மனைவி இறந்து விட்டார் என்பதற்காக டாக்டரை கொலை செய்த சம்பவம், தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொடர் போராட் டங்களை நடத்தி, 'எங்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும்’ என்கிறார்கள் டாக்டர்கள். மறுபக்கம், 'நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வேண்டும்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தூத்துக் குடி மாவட்டச் செயலாளரான டாக்டர் குமரன், ''மிகவும் சிக்கலான நிலையில் எங்களிடம் கொண்டு வரப்படும் எத்தனையோ உயிர்களை நாங்கள் காப்பாற்றுகிறோம். ஒவ்வொரு டாக்டரும் நோயாளி பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிகிச்சை செய்கிறார்களே தவிர, சாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிகிச்சை அளிப்பது கிடையாது. என்னதான் சிகிச்சை கொடுத்தாலும் அதையும் தாண்டி சில உயிர்களைக் காப்பாற்ற முடிவது இல்லை. அதற்கு எல்லாம் டாக்டர்களே பொறுப்பு என்றால், யாருமே மருத்துவம் பார்க்க முடியாது'' என்றார் ஆவேசமாக.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ''டாக்டர் கொலை செய்யப்பட்டது கொடூரமான, கண்டிக்கத்தக்க சம்பவம். கொலை மிரட்டல் குறித்து அந்த டாக்டர் புகார் கொடுத்தும் போலீஸ் அவருக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. அலட்சியமாக இருந்த போலீஸார் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்களோ, மருத்துவ மனைகளோ தாக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு மருத்துவமனை மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தாக்குதல் நடத்தியவரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்யலாம். மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கலாம்.
ஆனால், நிரந்தரப் பாதுகாப்பை இந்தச் சட்டத்தால் வழங்க முடியாது. நோயாளிகளுக்கு டாக்டர்கள் வழங்கும் தரமான, பொறுப் பான சிகிச்சை மட்டுமே அவர்களுக்கு மதிப்பைக் கொடுக்கும்.
இன்று, மருத்துவம் என்பது சேவை என்ற நிலையில் இருந்து இறங்கி, வணிகம் என்றாகி விட்டது. பல தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளை,பகற்கொள்ளையை மக்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அரசு மருத்துவ மனைக்குச் சென்றால், அங்கும் தரமான சிகிச்சை இல்லை; மருந்துகள் இல்லை; டாக்டர்கள் இல்லை. இந்தக் கோபம்தான் டாக்டர்கள் மீது திரும்புகிறது.
கடந்த பி.ஜே.பி. ஆட்சியின் போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், 'அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண் டியது மத்திய அரசின் பொறுப்பு அல்ல’ என்று சொல்லி அதிர வைத்தார். சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேசிய சுகாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இப்போது வரை அது கிடப்பில் உள்ளது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை அளிப்பது அரசின் கடமை ஆகிவிடும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குத் தொடரலாம்.
ஆனால், ஒரு அரசியல் கட்சியாவது இந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியது உண்டா? குறைந்தபட்சம் கோரிக்கையாவது வைத்தது உண்டா? சுகாதாரத் துறையில் பல்வேறு ஏழை நாடுகளைவிட நாம் பின்தங்கி உள்ளோம். ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் ஆறு சதவிகிதம் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், நாம் ஒதுக்குவது 1.3 சதவிகிதம் மட்டுமே. ஆனால், சிறிய நாடான கியூபா 7.5 சதவிகிதம் நிதி ஒதுக்குகிறது.
இங்கிலாந்தில் ஒரு தனி நபரின் மருத்துவத்துக்காக அரசு 94 சதவிகிதம் நிதி செலவிடுகிறது; மீதம் ஆறு சதவிகிதம் மட்டுமே நோயாளி செலவிடுகிறார். அமெரிக்காவில் 56 சதவிகிதம் அரசும் மீதியை நோயாளிகளும் செலவிடுகின்றனர். டென்மார்க், நார்வே நாடுகளில் 90 சதவிகிதம் அரசே செலவிடுகிறது. ஆனால், இந்தியாவில் மருத்துவத்துக்காக 83 சதவிகிதத்தை நோயாளி செலவிடுகிறார். 17 சதவிகி தத்தை மட்டுமே அரசு செலவிடுகிறது. அரசு மருத் துவமனைகளைத் திறந்து வைக்க வராத பிரதமர், தனியார் மருத்துவ மனை திறப்பு விழாவுக்கு வருகிறார். கிராமப்புற வறுமைக்கு முக்கியக் காரணமாக, வரதட்சணை மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவு சுட்டிக்காட்டப்படுகிறது. நமது நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவச் செலவு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்கிறார்கள். அரசே மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும்'' என்கிறார்.
மருத்துவச் சிகிச்சை அளித்து பயனளிக்காததால் டாக்டரையே கொலை செய்வதும்... அதற்காக இவர்கள் யாருக்குமே சிகிச்சை அளிக்காமல் ஸ்டிரைக் செய்வதுமான நிலைமை இந்த நாட்டின் துரதிஷ்டங்களில் ஒன்று!
-
'போலீஸும் கண்டுக்கல!'
கொலை செய்யப்பட்ட சேதுலெட்சுமி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.தூத்துக்குடி காமராஜர் நகரில் சொந்த கிளினிக்கும் நடத்தி வந்தார். கடந்த 30-ம் தேதி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ், அவரது மனைவி நித்யாவை சிகிச்சைக்காக இவரது மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சையில் நித்யா இறந்துபோனதை அடுத்தே, இப்படி ஒரு கோரச் சம்பவம்.
டாக்டர் சேதுலெட்சுமியின் கணவர் திருஞானசம்பந்தம், ''மகேஷ் எங்கள் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக வருபவர் தான். அவரது மனைவியை இங்கு கொண்டு வந்தபோதே, அவரது நிலைமை சிக்கலாகத்தான் இருந்தது. உடல் வீங்கிப்போய்... வயிற்றுக்குள் குழந்தை இறந்து போயிருந்தது. அதனால், என் மனைவி, 'ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்கணும். தாயோட உயிருக்கும் ஆபத்து வரலாம். வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுபோய்ப் பாருங்க’ன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் மகேஷ் கெஞ்சியதால், வேறு வழி இல்லாமல் ஆபரேஷன் செய்தார். அதன் பிறகு தாயின் நிமைமை ரொம்பவும் சீரியஸானது. வேறு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நேரத்தில் அந்தப் பெண் இறந்துவிட்டார். இதில் டாக்டர் மீது என்ன தவறு? மறுநாள், மகேஷ் என் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி, போலீஸில் புகார் கொடுத்தும் பாதுகாப்பு கொடுக்கவில்லை. கடைசியில், இப்படி அநியாயமாக கொலை செய்யப்பட்டு விட்டார்...'' என்றார் கண்ணீருடன்.
பணியில் அலட்சியம் காட்டியதற்காக இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக் கிறார்கள். மகேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் களும் கைது செய்யப்பட்டு விட்டாலும், தமிழகம் முழுவதும் பிரச்னை பற்றி எரிகிறது.
பரிதாப நோயாளிகள்
டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 4-ம் தேதி நடந்த டாக்டர்கள் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. மதுரை, கோவை, நெல்லை போன்ற அனைத்து தலைநகர அரசு மருத்துவமனைகளில் பிரசவவார்டு, அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு வழக்கம்போல் இயங்கின. புற நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், மருந்து வாங்க முடியாமலும் அவதிப்பட்டார்கள். ஆனால், திரண்டுவந்த நோயாளிகளை பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உடனடியாக அப்புறப்படுத்தியதால், பிரச்னை எதுவும் நடக்கவில்லை.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தேனி மாவட்டம் போடி தாலுக்கா மக்கள்தான். போடி தாலுக்காவில் குரங்கனி, கொட்டகுடி, போடிமெட்டு, அகமலை பஞ்சாயத்துகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. இவர்களுக்கு மருத்துவ வசதி சாதாரண நாட்களிலேயே எட்டாக்கனிதான். அதனால் மலைக் கிராம நோயாளிகள், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைதான் போடி மருத்துவமனையில் மாத்திரை வாங்குவது வழக்கம். எந்த விவரமும் அறியாத இவர்கள் வழக்கம்போல் மருந்து வாங்குவதற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் டாக்டர்களுடன் சேர்ந்து மருந்தாளுனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், எதுவுமே கிடைக்காமல் தவித்தார்கள். அவர்களை, 'அடுத்த வாரம் வாருங்கள்’ என்று விரட்டியடிக்க, 'ஒரு வாரம் மருந்து சாப்பிடாவிட்டால் ஏதாவது ஆயிடுமே?’ என்று பயத்தோடு விசாரித்தார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லத்தான் யாருக்கும் அக்கறை இல்லை.
No comments:
Post a Comment