Friday, January 13, 2012

மகனுக்காக வழிவிடுகிறாரா ஸ்டாலின்? 40 வயதின் மர்மம்?

திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது, அந்தக் கட்சியில் 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களே தங்களை அதிக அளவில் இணைத்துக்கொண்டனர். கொள்கைப் பிடிப்போடு கட்சிக்குள் வந்த இந்த இளைஞர்களால்தான் குறுகிய காலத்தில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.


நாளடைவில் அரசியலில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்க, அது தி.மு.க.விலும் பிரதிபலித்தது. 60 வயதில் ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இன்னும் நீடிப்பதும், சமீபத்தில் இளைஞரணியில் சேரும் வயதை தடாலடியாகக் குறைத்து அவர் அறிவித்திருப்பதும்கூட இதற்கான உதாரணங்கள்தான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்! ‘தி.மு.க.விற்கு ஒரு பலமான துணை அமைப்பு வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டபோதே தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து தொடர்ந்து 32 ஆண்டுகளாக, ஸ்டாலின்தான் கட்சியின் அமைப்பாளராக இருக்கிறார். 60 வயதான ஒருவர் இளைஞரணி பதவியில் நீடிக்கலாமா என அவ்வப்போது சர்ச்சைகள் கட்சிக்குள்ளேயே ஏற்படுவதும் வழக்கம். ஸ்டாலின் தி.மு.க. பொருளாளர் ஆக்கப்பட்டபோது, இளைஞர் அணி பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 2007-ம் ஆண்டு தயாநிதி மாறனுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டது. உடனே அதே ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் பெரிய அளவில் இளைஞர் அணி மாநாட்டை நடத்தி பலத்தைக் காட்டினார் ஸ்டாலின்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வி குறித்து ஆராய்ந்தபோது, இளைஞர்களின் வாக்கு தி.மு.க.விற்குக் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க.வில் இளைஞரணியை சரிசெய்வதன் மூலம் அடுத்த நான்காண்டுகளில் கட்சியைப் பலப்படுத்தி, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என ஸ்டாலின் நினைக்கிறார். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு நடத்திய ஸ்டாலின், நிர்வாகிகளுக்கு வயது வரம்பு கொண்டுவரப்படும் என அறிவித்திருக்கிறார். மாவட்ட அளவில் நிர்வாகிகளின் வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும் எனவும், நகர பேரூராட்சி அமைப்புகளில் நிர்வாகிகளின் வயது 32-க்குள் இருக்க வேண்டும் எனவும் வயது வரம்பை நிர்ணயித்துள்ளார். கட்சியைப் பலப்படுத்தும் நோக்கம் தாண்டி, இதற்குப் பின்னணியில் வேறு அரசியல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஆறு மாத சிறைவாசத்திற்குப் பிறகு கனிமொழி வெளியே வந்ததும், கட்சியில் அவருக்கு பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக கருணாநிதியிடம் பேசிய ராசாத்தி அம்மாள், கனிமொழிக்கு இளைஞர் அணி பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. இது நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இளைஞர் அணி நிர்வாகிகளின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது தி.மு.க. தரப்பு.

இது தொடர்பாக பேசிய தி.மு.க. நிர்வாகி ஒருவர், ‘‘கடந்த வாரம் நடந்த கனிமொழியின் பிறந்த நாள் விழாவில் ஜெயதுரை எம்.பி.யும், ராசாத்தி அம்மாளும் கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்று பேசினார்கள். கலைஞர் மனதிலும் இந்த எண்ணம் இருக்கிறது. இது நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே உடனடியாக இளைஞர் அணி நிர்வாகிகள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் தன் மகனுக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் திடீரென இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
இதுதொடர்பாக, பேசிய இளைஞர் அணி நிர்வாகி ஒருவர், மாநில இளைஞர் அணி அமைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அது தொடர்பாக இப்போதே தி.மு.க. உயர் மட்டத்தில் பேச்சு நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் பொறுப்புக்கு வரும்போது அதை எதிர்ப்பவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். தாத்தா மற்றும் அப்பாவின் அரசியல் நடவடிக்கைகளை அருகிலிருந்து பார்த்தவர், சினிமா தயாரிக்கும் நிர்வாகத் திறன் அவருக்கு இருக்கிறது.’’ என்று விளக்கினார் அந்த நிர்வாகி.

ஆக, தி.மு.க. அடுத்த தலைமுறையை நோக்கி பயணிக்க முடிவு செய்துவிட்டது தெரிகிறது.

No comments:

Post a Comment