Wednesday, January 18, 2012

இனி, ரேஷன் கடைகள் இல்லையா?

டந்த வருடக் கடைசியில் நடை பெற்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் லோக்பாலுக்கு அடுத்து பெரும் விவாதத்தைக் கிளப்பி இருப்பது 'உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா’!

பன்னாட்டுப் பெருமுதலாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைச் சுரண்டிவரும் இன்றைய சூழலில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோரில் 80 சதவிகிதம் பேர் தினமும் பட்டினியுடன் படுக்கச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம், விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடாவருடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படியான நிலையில், 'நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்பதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியாக ஒரு சட்டமாகவே கொண்டுவர நினைக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் உங்களுக்கு உணவு கிடைக்கவில்லை



என்றால், 'என் அடிப்படை உரிமையான உணவுப் பாது காப்பு பற்றி என் அரசு கவலைப்படவில்லை’ என்று நீங்கள் நீதிமன்றத்தை நாட முடியும். சட்டம் கொண்டுவரப்படுவது நல்ல எண்ணம்தான். ஆனால், இந்தச் சட்ட மசோதாவில் எக்கச்சக்க சிக்கல்கள். அதில் முக்கியமானவற்றைப் பற்றி இங்கே விவாதிக்கிறார் வழக்கறிஞர் வி.சுரேஷ். 'உணவுப் பாதுகாப்பு’ தொடர்பாக தேசிய ஆலோசனைக் குழுவில் உச்ச நீதிமன்றத் தால் தமிழகத்துக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் இவர்.


சிக்கல் 1: இப்போது ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப் படுகின்றன. இந்தச் சட்டமோ அதை நிறுத்தச் சொல்கிறது. 'வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களிலேயே குறிப்பிட்ட சிலருக்கு (டார்கெடட் கவரேஜ்) மட்டும் உணவு வழங்கினால் போதும்’ என்கிறது. எனில், மீதம் உள்ள மக்கள் எங்கே போவார்கள்?


சிக்கல் 2: இந்தப் பிரச்னை மிகவும் குழப்பமானது. அது 'பயனாளர்களை அடையாளம் காண்பது!’ இந்தச் சட்டம் குறிப்பிடுகிற பயனாளிகள் யார் என்பதை இன்னமும் அரசு வரையறுக்கவில்லை. மத்தியக் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தற்போதுதான் சமூக, பொருளாதார, சாதிய அடிப்படையிலான

மக்கள் கணக்கெடுப்பை நடத்திவருகிறது. அந்தக் கணக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகே, எவ்வளவு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள், மேல் இருக்கிறார்கள் என்பது தெரியும். மேலும், இந்தக் கணக்கெடுப்பில் 'யார் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்’ என்று மக்களை உள்ளடக்குவதற்கு மாறாக, 'யார் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள் இல்லை’ என்று மக்களை வெளியேற்றும் முறை பின்பற்றப்படுகிறது. ஆக, இந்த முறை முடிந்த அளவு ஏழை மக்களின் எண்ணிக்கை யைக் குறைத்துக் காட்டவே பயன்படும்.

சிக்கல் 3: இந்தச் சட்டத்தின் படி, 26 ரூபாய் செலவழிக்கும் திறன் படைத்தவர்கள் உள்ள கிராமப்புறங்களில் 75 சதவிகித மக்களுக்கும்... (இதில் மிகமிகக் குறைந்த வருமானம்கொண்ட 48 சதவிகித மக்களுக்கு 'முன்னுரிமைக் குடும்பம்’ என்று பெயர்), 32 செலவழிக்கும் திறன் படைத்தவர்கள் உள்ள நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்க ளுக்கும் மட்டுமே உணவு மானியம் வழங்க இருக்கிறது அரசு. முன்னுரிமைக் குடும்பங்களுக்கு அரிசி வழங்க மாநில அரசு முதலில் ஒரு முறை அரிசி கொள்முதல் செய்யும். மீதி உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்க இன்னொரு முறை அரிசி கொள்முதல் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் மாநில அரசுக்கு இரட்டிப்புச் செலவு. இதனால் பொதுச் சந்தையில் அரிசியின் விலை இரு மடங்காக உயரும் அபாயம் இருக்கிறது.

சிக்கல் 4: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவுப் பொருள் வழங்குவதற்கு மாறாக, அந்த உணவுப் பொருளுக்கான பணத்தை வழங்க இருக்கிறது அரசு. ஆனால், பொது விநியோக முறையின் கீழ் குறைந்த விலையில் வாங்கப்படும் பொருள், வெளிச் சந்தையில் அதிக விலை உடையதாக இருக்கும். அரசு வழங்கும் பணம் பொது விநியோக முறையின் கீழ் விற்கப் படும் பொருட்களின் விலைக்குச் சமமானதாகத்தான் இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா என்பதுபற்றி எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை.

சிக்கல் 5: 'ஃபோர்ஸ் மெஜ்யூர்’ என்று சொல்லப்படும் பிரிவு 51 இந்தச் சட்டத்தில் இருக்கிறது. அந்தப் பிரிவின்படி, 'யுத்தம், வெள்ளம், பஞ்சம், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதனால் இவருக்கு இத்தனை கிலோ அரிசி வழங்க வேண்டும் என்கிற திட்டம் பாதிக் கப்பட்டால், மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த வகையிலும் இழப்பீடு தர முடியாது’ என்கிறது. சுமார் 60 சதவிகித விவசாயம் மழையை நம்பி இருக்கும் இந்த நாட்டில், ஒருவேளை மழை பொய்த்தால், இந்திய அரசு சும்மா அமர்ந்து வேடிக்கைதான் பார்க்கும் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறது இந்தப் பிரிவு!'' என்று முடித்தார்.
'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்!’ என்ற பாரதியின் கனவு நனவாவது எப்போது?

- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment