Saturday, January 7, 2012

இந்த வெற்றி மார்ட்டினுக்கு காணிக்கை!

''குத்துப் பாட்டு, சண்டைனு வழக்கமான கமர்ஷியல் சினிமா பண்றதுல எனக்கு இஷ்டம் இல்லை. நாம பழைய விஷயங்களையே பிடிச்சுத் தொங்கிட்டு இருந்தா, சினிமா நம்மைக் கடந்துபோயிரும்!''- சாந்தமாக, அழுத்த மாகப் பேசுகிறார் சாந்தகுமார். மௌனமாக வெளிவந்து பேச வைத்த 'மௌன குரு’ பட இயக்குநர்.

''சாந்தகுமார் யார்?''
''ஆமா! நானும் மதுரைக்காரன்தான். ஸ்கூல் படிக்கும்போதே வழக்கமான சினிமாவா இல்லாமல் வெளிவந்த 'நாயகன்’, 'உதயம்’ படங்கள்தான் பார்த்தேன். அப்பவே சினிமாதான் வாழ்க்கைனு முடிவெடுத்துட்டேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் டிகிரி, பிரசாத் ஸ்டுடியோ 'வெக்டார் இன்ஸ்டிட்யூட்’ல 3டி அனிமேஷன் கோர்ஸுக்குப் பிறகு, சுசிகணேசனிடம் 'விரும்புகிறேன்’ படத்தில் வேலை பார்த்தேன். அடுத்து, தரணிகூட 'தில்’, 'தூள்’, 'கில்லி’ முடிச்சுட்டு, தனியா படம் பண்ண வந்துட்டேன்!''
'' 'மௌன குரு’ படத்தில் கேரக்டரைசேஷன்தான் நச்! எப்படி அவங்ககிட்ட இவ்ளோ பெர்ஃபெக்ட்டா வேலை வாங்கினீங்க?''
''ஜான் விஜய்யை எனக்குப் பெர்சனலாவே தெரியும். அந்த அழுத்தமான குரலும் சின்னக் கிறுக்குத்தனமும்தான் அவரோட ப்ளஸ். சோகம், சந்தோஷம் எதுவா இருந்தாலும் அப்படியே காட்டும் உமா ரியாஸின் பிரைட் எக்ஸ்பிரஷனை டி.வி-யில் பார்த்துப் பிடிச்சேன். முருகதாஸை 'கில்லி’ படத்துல இருந்தே தெரியும். கூத்துப்பட்டறையின் சிறந்த மாணவர்கள் பட்டியலில் அவனுக்கும் ஓர் இடம் இருக்கு. நடிகை அபிநயா மாதிரி ஒரு பொண்ணை வளர்த்த தகப்பன்கிட்ட இருந்து எனக்குத் தேவையான நடிப்பை வாங்கிடலாம்னு தோணுச்சு. அதனால, அபிநயாவின் அப்பா ஆனந்த் வர்மாவை பிரின்சிபால் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தேன். ஹீரோயின் தேடிட்டு இருக்கும்போது எடிட்டர் ராஜா முகமது டேபிள்ல 'சரசர சாரக் காத்து’ பாட்டைப் பார்த்தேன். இனியா எங்க முகாமில் சேர்ந்தாங்க!''
''அருள்நிதி எப்படி மௌன குருவா மாறினார்?''
'' 'வம்சம்’ பட ஆடியோ ரிலீஸ் போஸ்டர்ல அருள்நிதியைப் பார்த்தேன். 'மௌன குரு’ கேரக்டருக்கு சரியா செட் ஆவார்னு தோணுச்சு. கதையைக் கேட்டுட்டு அவங்களே சொந்த பேனர்ல தயாரிக்கிறோம்னு சொன்னப்ப என் விரதம் முடிவுக்கு வந்தது!''
''யாரெல்லாம் கூப்பிட்டுப் பாராட்டினாங்க?''
''ராதா மோகன், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி, சுசீந்திரன், அருண்வைத்யானு நிறைய இயக்குநர்கள் பாராட்டினாங்க. சில நடிகர்கள் போன் பண்ணி 'நாம கண்டிப்பா ஒரு படம் பண்றோம்’னு சொல்றாங்க.
சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சிக்கல்கள், அதை அவிழ்க்கும் தந்திரங்கள்னு மனசுல நிறைய லைன்ஸ் இருக்கு. கண்டிப்பா என் அடுத்த படம் 'மௌன குரு’வுல இருந்து விலகி, வேற ஒரு கலர்ல இருக்கும்!''
''மாஸ் ஹீரோக்களுக்குப் படம் பண்ணுவீங்களா?''
'' 'மௌன குரு’வும் கமர்ஷியல்தான். ஆனால் பாட்டு, ஃபைட், காமெடி டிராக்னு எல்லாத்தையும் கோக்குற வழக்கமான மசாலாவை என்னால் அரைக்க முடியாது. புதுமுகமா, மாஸ் ஹீரோவா என்பதைக் கதைதான் முடிவு பண்ணும். ரஜினி சார் வரைக்கும் படம் பண்ண ஆசைதான். 'இப்படி ஒரு மசாலா பண்ணிக் கொடுங்க’னு சொன்னால் என்னால் பண்ண முடியாது. 'இப்படி ஒரு


இன்ட்ரஸ்ட்டிங்கான படம். அதுல பங்குபெற விருப்பம் இருந்தால் வாங்க’னு கூப்பிடுறேன். அவ்வளவுதான்!''

''உங்க ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க?''
''எனக்குப் பெரிய நட்பு வட்டம்லாம் கிடையாது. தனிமை விரும்பி. என் ஒரே நண்பன் மார்ட்டின். கல்லூரியில் 10 வருஷ சீனியர். மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்குள் வராமலேயே சினிமா பாக்கிறது, வாசிக்கிறது, டிஸ்கஷன் போறதுனு காலத்தைக் கழிச்சவர். தேவதூதன் மாதிரி ஒரு தயாரிப்பாளர் தேடி வந்து வாய்ப்புக் கொடுப்பார்னு நினைச்சே காலத்தைக் கடத்திட்டார். யார்கிட்டயும் வாய்ப்புக் கேட்டு அவர் போனதே இல்லை. ஒரு சின்ன வெற்றியைக்கூடப் பார்க்காம 42 வயசுல அவர் என் மடியில் உயிரைவிட்டார். 'மௌன குரு’ வெற்றி பெற்றதா நீங்க சொன்னால், அந்த வெற்றியை அவருக்குக் காணிக்கை ஆக்குறேன்!''

No comments:

Post a Comment