Tuesday, January 3, 2012

வில்லங்க வலையில் விழும் குடும்பப் பெண்கள்! ஷாக் தரும் கலாசாரம்

தமிழுக்கு ஒரு வார்த்தைப் பிரயோகம் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது. அது, ‘குடும்ப விபசாரம்’. தலைநகர் சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த இரு படுகொலைச் சம்பவங்களின் விசாரணைக்குப் பிறகு போலீஸ் கண்டுபிடித்த வாக்கியம் இது. கொலையான இருவரும் பெண்கள். கொள்ளை முயற்சியே கொலையில் முடிந்ததாக முதலில் போலீஸ் நம்பியது. விசாரணை எல்லை விரிய விரிய, வில்லங்கமான வேறு ஒரு விவகாரம் வெளியில் வந்தது. அது, பல குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் விபரீதமான புது கலாசாரம்.




‘‘கண்ணுக்கு மறைவான இடங்களில் நடந்துகொண்டிருந்த விபசாரத் தொழில் இப்போது வீடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்கே தெரியாதபடி நடந்துகொண்டிருந்த இந்த திரைமறைவுத் தொழிலால் நேர்ந்த கொலைகள்தான் இவை’’ என இந்த விவகாரம் குறித்து எச்சரிக்கிறார், சென்னை காவல்துறை விபசாரத் தடுப்பு உதவி ஆணையர் கிங்ஸ்லின்.


‘‘குறிப்பிட்ட சில லாட்ஜ்கள்ல புரோக்கர்கள் மூலமா விபசாரம் நடந்திட்டிருந்துச்சு. வெளிமாநில பொண்ணுகளை ஈடுபடுத்திட்டிருந்தாங்க. ஒருகட்டத்துல லாட்ஜ்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிச்சோம். இப்போ லாட்ஜ்ல தங்கணும்னு போனா, ஐடி புரூப் உள்பட எல்லா விபரங்களையும் தந்தாகணும். இப்படி லாட்ஜ் விபசாரத்தை தடுத்தோம். பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்ங்கிற பேர்ல சில இடங்கள்ல இதே வேலையைப் பண்ணிட்டிருந்தவங்களையும் பிடிச்சோம்.



ஒருபுறம் இப்படி நடவடிக்கைகளை விரட்டுனா, இன்னொருபுறம் தப்பு பண்றவங்களும் வேற ரூட்டுக்குப் போறாங்க. சென்னையில நடந்த ரெண்டு சம்பவங்களோட பின்னணியிலயும் தவறான பாதைக்குப் போன நல்ல குடும்பத்துப் பெண்கள் எத்தனை பேர் இருக்காங்களோ? அவங்களை யெல்லாம் தேடிப் பிடிச்சு அசிங்கப்படுத்தணும் ங்கிறது எங்க நோக்கமில்லை. ஆனா கொலை வழக்குன்னு ஆனபிறகு, பிடிபடுறவங்க தர்ற வாக்குமூலத்தின்படி விசாரிச்சுத்தான் ஆகணும். திருமுல்லைவாயல் யாஸ்மின் தன்னோட வீட்டுலயே, தெரிஞ்ச பொண்ணுகளை வச்சு விபசாரம் பண்ணிட்டிருந்ததை கண்டுபிடிக்க உதவியது கொலையாளி தந்த வாக்குமூலம்தான்’’ என்கிறார் கிங்ஸ்லின்.



கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில், யாஸ்மின் தனது வீட்டையே விபசார விடுதியாக்கியது அதிர்ச்சி என்றால், அங்கு வந்து போனவர்கள் அப்பாவிக் குடும்பப் பெண்கள் என்பது பேரதிர்ச்சி. பகல் நேரங்களில் ஷாப்பிங் போவது போல வந்து இப்படிப் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.



குடும்பப் பெண்கள் எப்படித் தடம் மாறினார்கள்? யாஸ்மின் கொலையைத் தொடர்ந்து, இதுபோன்ற ‘வீட்டிலேயே விபசாரத்’தைத் தேடி, சிலரைக் கைதும் செய்திருக்கிற போலீஸ் டீமிடம் பேசினோம்.



‘‘நடுத்தரக் குடும்பப் பெண்கள் எப்பவுமே மானம், மரியாதைக்குப் பயந்து வாழறவங்க. அவங்க இந்த வலையில விழறதுக்கு முதல் காரணம், ஆடம்பர மோகமும் அளவுக்கதிக ஆசையும். ரெண்டாவது, அக்கம்பக்கத்துல பிடிக்கிற ஃபிரண்ட்ஷிப். கொஞ்சம் நெருக்கமா பழகுனதுமே வீட்டு விஷயங்களை முழுக்க முழுக்க பந்தி வச்சிடுறாங்க. பழகறவங்க எப்படிப்பட்டவங்கன்னு முழுசா தெரிஞ்சுக்காமலே இப்படிச் சொல்லும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்குது.



கணவன் மட்டுமே வேலைக்குப் போற வீடுகள்ல இருக்கிற பெண்களை மூளைச்சலவை பண்ணி இந்தமாதிரி ஈடுபடுத்தறதுக்குன்னே சிலர் இருக்காங்க. ‘வெளி இடம் கிடையாது.




தெரிஞ்சவங்க வீடுதான். ஃபிரண்டு மாதிரி போயிட்டு உடனே வந்துடலாம். வர்ற வங்க ரொம்பவே அறிமுக மானவங்க தான். சின்னச்சின்ன செலவுக்கும் கணவரை எதிர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நேரம் கிடைக்கிறபோது வச்சிக்கலாம். இதெல்லாம் தப்பே இல்லை’ என்று வலைவீசும் அந்த வசியக்காரிகள், உடன்பட மறுப்பவர்களுக்கு அவ்வப்போது செலவுக்குப் பணம் கொடுத்து உதவவும் செய்கிறார்கள். அவசரத் தேவைக்கு பண நெருக்கடி ஏற்படும் வேளையில் அந்த அப்பாவிக் குடும்பப் பெண்ணும் தடம் மாறி விடுகிறார். கிடைக்கிற பணத்தில் ஒரு பகுதி, ‘ஏற்பாடு’ செய்கிற பெண்ணுக்கும் போய்விடுகிறது.



ஒருதடவை இந்த வழியில் பணம் கிடைத்து விட்டால், தொடர்ந்து அதே வழியில் பயணிக்க வைக்கிறது. பிறகென்ன, கணவர், குடும்பம், கலாசாரம் என்பதெல்லாம் தூக்கியெறியப்படுகிறது’’ என்கிற இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ, ‘‘அக்கம்பக்கத்து பெண்களோட தங்கள் மனைவிமார் எப்படிப் பழகறாங்கன்னு வீட்டுல உள்ள ஆண்கள் தெரிஞ்சு வச்சிக்கணும்’’ என்கிறார்.



இப்படிப் பெண்களை வரவழைக்கும் வீடுகளில், வாடிக்கையாளர்களை அனுப்பிவைக்க புரோக்கர்கள் உண்டு. வரும் சபல பார்ட்டிகள், முதலில் சுகத்துக்காகவே வந்து போகிறார்கள்.



அப்புறம் அந்த வீடுகளிலுள்ள பொருட்களை நோட்டமிடுகிறார்கள். ‘கணவன் வேலைக்குப் போயிருக்க, அவனுக்குத் தெரியாமல்தானே வீட்டில் இந்தத் தொழிலுக்கு இடம் தருகிறார் இந்தப் பொம்பளை. எதை எடுத்துச் சென்றாலும் புகார் கொடுக்க மாட்டார்கள்’ என்கிற தைரியம் வந்து விடுகிறது. அந்த தைரியம் கொள்ளையடிக்கத் தூண்டுகிறது. பெரம்பூரில் பிடிபட்ட ஒரு பெண், ரூ.22000 வாடகை கொடுத்து இந்த பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்த வீட்டில் இப்படிக் கொள்ளை போன பொருட்கள் ஏராளமாம். கொள்ளை முயற்சி தடுக்கப்படும்போது அது கொலையில் முடிந்து விடுகிறது.



ரெய்டில் மீட்கப்படும் பெண்கள் தங்க வைக்கப்படும் காப்பகம் ஒன்றில் பேசியபோது, ‘‘சில குடும்பப் பெண்களுக்கு ‘தப்பு பண்றோம்’னு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிடுது. ஆனாலும், உடனே அவங்களால விலகிட முடியலை. ‘முதல் முறை பண்ணுன தப்பைக் காட்டிக் கொடுத்துடுவோம்’னு மிரட்டியே தொடர்ந்து அவங்களைப் பணிய வைக்கிறாங்க. பசங்களை காலையில ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, சாயந்திரம் திரும்பக் கூப்பிடற இடைவெளிக்குள்ள இப்படி வந்து சிக்கின ஒரு பெண்கூட உண்டு’’ என்கிறார்கள்.


Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine  Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


வலைவீசும் வசியக்காரிகளிடம் உஷாராக இருக்க வேண்டும்.



தீர்வு என்ன?



‘‘பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதுதான் இதுபோன்ற அவலங்களுக்குத் தீர்வு’’ என்கிறார் மனநல ஆலோசகர் ஷாலினி.



‘‘பெரும்பாலும் பெண்களை வளைக்க ஆண்கள் அன்பு என்ற வலையைத்தான் விரிக்கிறார்கள். குடும்பச்சூழலில் இருந்துகொண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அதிகரித்து வருவதை மறுக்கமுடியாது. எல்லா இடங்களிலுமே பணத்தையும் சுகத்தையும் தாண்டி வேறொரு தேடல் இருப்பதையும் உணர வேண்டும். கணவன் தன் கடமையை நிறைவாகச் செய்யாத பட்சத்தில்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கத் தொடங்குகின்றன.



இதைத் தடுக்க, பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே காரணம். ஆனால், அரசே அதை அங்கீகரித்து விற்கிறது. பாலியல் தொழிலை ஏன் முறைப்படுத்தக் கூடாது? அப்படிச் செய்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாதியளவுக்குக் குறைந்துவிடும். பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக மாட்டார்கள். உயிரிழப்புகள், கொலைகள் குறையும்’’ என்கிறார் ஷாலினி.



வழக்கறிஞர் வானதி சீனிவாசனோ, ஷாலினியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.



‘‘மும்பையில் பாலியல் தொழிலை அங்கீகரித்திருக்கிறார்கள். அங்கு பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலியல் தொழில் என்பது ஆண்களும் சம்பந்தப்பட்டது. பிறகு எதற்கு பெண்களை மட்டும் தனியே ஒதுக்கி அதைத் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்புகிறார் வானதி.



‘‘குடும்பம் போல தங்கி பாலியல் தொழில் செய்வது ஒரு சமூக அவலம். இதற்கு நிறையப் பின்னணி உண்டு. நகரங்களில் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே இருக்கிறது. கிராமங்களில் தெருவில் புதிய நபர் வந்தால்கூட அழைத்து விசாரிப்பார்கள். நகரத்தில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதே தெரியாது.



இன்று எல்லோரும் வேலைக்குச் செல்கிறார்கள். அமர்ந்து பேசவோ, புரிந்து கொள்ளவோ யாருக்கும் நேரமில்லை. பணம் பண்ணும் தேடலில் உறவுகளை உதாசீனப்படுத்தும் நிலை. குடும்பம் தன்னை அரவணைக்காத சூழ்நிலையில்தான் பெண் தடுமாறுகிறாள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கலாசாரம் நம்முடையது. ஆனாலும், எல்லாக் காலத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்தன. இது மீடியா யுகம் என்பதால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. மற்றபடி இது கவலைப்படத் தகுந்த செய்தி. பயப்படும்படியான செய்தியில்லை. சரியாகிவிடும்’’ என்கிறார் வானதி.

No comments:

Post a Comment