அண்மையில் ஒரு புதுமையான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகமாகி இருக்கிறது! திருமண இன்சூரன்ஸ் திட்டம்தான் அது! திருமணம் என்பது ஆணும், பெண்ணும் இணையும் இரு குடும்ப நிகழ்வு என்பதெல்லாம் போய், லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துச் செய்யும் ஆடம்பரமான சமூகத் திருவிழா என்றாகிவிட்டது. அழைப்பிதழ் தொடங்கி, தாம்பூலம் வரை சமூகத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரது ஸ்டேட்டஸை வெளிப்படுத்தும் விஷயம் என்று ஆகிவிட்டது.தனியார் துறையைச் சேர்ந்த பஜாஜ் அலியான்ஸ், ஐசிஐசிஐ, லாம்பார்ட் போன்ற சில காப்பீட்டு நிறுவனங்களும், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இந்தியா, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியன்ட்டல் இன்சூரன்ஸ்... ஆகிய பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளும் இந்தத் திருமணக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட தேதியில் நடத்த நிச்சயிக்கப்பட்டிருக்கும் திருமணம் நடக்காமல் போனாலோ, அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கிடைக்கும்.திருமண ஏற்பாடுகளைச் செய்பவர்கள், அந்தத் திருமணத்தை இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை அவர்கள் தேவைக்கு ஏற்ப இன்சூர் செய்துகொள்ள முடியும். இதற்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள ப்ரீமியம் நாலாயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை. இன்றைக்கு ஒரு திருமணத்துக்கு ஆகிற லட்சக்கணக்கான செலவைப் பார்க்கிறபோது, திருமண இன்சூரன்ஸ் பாலிசிக்கான ப்ரீமிய கட்டணம் வெறும் ஜுஜூபி.
தீவிபத்து, இயற்கைச் சீற்றம் போன்றவை தொடங்கி திருமணத்துக்கு ஒருவார காலத்துக்குள் மணமகன், மணமகள் அல்லது இவர்களின் ரத்த உறவுகள் மரணம் வரையிலான காரணங்களால் திருமணம் ரத்தானாலோ, ஒத்தி வைக்கப்பட்டாலோ நஷ்டஈடு வழங்கப்படும்.திருமண மண்டபத்தின் உள்ளே இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் தீ விபத்து காரணமாகப் பாதிக்கப்பட்டாலோ, திருமணத்தின்போது செலவுக்காக வைத்திருக்கும் பணம், நகைகள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலோ நஷ்டஈடு வழங்கப்படும். அதேசமயம் சட்டத்துக்குப் புறம்பான முறையில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நிமிடத்தில் புகார் காரணமாக போலீஸ் உள்ளே புகுந்து திருமணம் தடைபட்டுப் போனால் அதற்கு நஷ்டஈடு கிடைக்காது. திருமண விருந்தின் போது, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து, அந்த உணவைச் சாப்பிட்டு பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட, நஷ்டஈடு கிடைக்க இந்த பாலிசியில் வழி உண்டு.
No comments:
Post a Comment