Wednesday, January 11, 2012

எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி

எதிர்க்கட்சிகள் ஆண்டு வரும் மாநில அரசுகளையும், அந்த மாநிலங்களையும் ஆசிர்வதிக்க மத்திய அரசு மறுக்கிறது. அவர்களுக்கு நல்லது செய்ய அது விரும்புவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.



ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மோடி உரை நிகழ்த்தினார். அவரது பேச்சுக்கு கூட்டத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேசைகளைத் தட்டி அனைவரும் மோடி பேச்சை ரசித்துக் கேட்டனர். முதலில் எழுதி வைத்த உரையை வாசித்தார் மோடி.ஆனால் மத்திய அரசைத் தாக்கிப் பேசியதற்கு கூட்டத்தினரிடம் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து உரையை விட்டு விட்டு அவராகவே பேசத் தொடங்கினார்.


மோடி தனது பேச்சில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். மாநிலங்கள் வளருவதற்கும், முன்னேறுவதற்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆதரிக்கவோ, ஆசிர்வதிக்கவோ மத்திய அரசு விரும்புவதில்லை. இன்று எனது குஜராத் மாநிலம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க எனது மாநிலத்தின் கடும் உழைப்பும், எங்களது சுய நிதியாதாரங்களுமே முழுக் காரணமும் ஆகும்.மத்திய அரசின் பங்கு இதில் ஒரு துளியும் கிடையாது.

மத்திய அரசு, பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதங்கள் எனது அரசுக்கு இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் கூறுகிறார். ஆனால் எனது அரசுக்கு அது கிடைக்கவில்லை. எங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இல்லை. ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கிறது. எங்களால் எங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடிய பலம் உள்ளதால் நாங்கள் பிழைத்து விட்டோம். எங்களுக்கு மத்திய அரசு எதுவும் தருவதில்லை. எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே செய்து கொள்ள வேண்டிய நிலை. நாங்களாகத்தான் இன்று இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம்.

வளர்ச்சித் திட்டங்களுக்காக நாங்கள் மத்திய அரசிடம் எதையும் கேட்டு நிற்பதில்லை. ஒருமுறை, குஜராத் மாநிலத்திற்கென ஒரு தனி செயற்கைக் கோளை தாருங்களேன் என்று கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதைப் படித்து விட்டு பிரதமர் குழம்பி விட்டாராம். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது குழப்பமும் நியாயம்தான். வழக்கமாக ஒரு மாநில முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி என்ன கேட்பார்? நிதி கேட்பார். ஆனால் நான் நிதி கேட்பதில்லை. குஜராத்துக்கென தனியாக சாட்டிலைட் கேட்டேன். அதுதான் அவரை குழப்பி விட்டது.

இருந்தாலும் குஜராத்துக்கென தனியாக 36 மெகாஹெர்ட்ஸ் கியூபான்ட் டிரான்ஸ்பான்டரை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொண்டு தொலைதூரக் கல்வித் திட்டத்தை மிகப் பெரிய அளவில் நாங்கள் குஜராத்தில் விரிவுபடுத்தினோம். மின் ஆளுமையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். டெலிமெடிசின் திட்டத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறோம்.

இதேபோல ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாலைவனப் பகுதிகளில் சூரிய மின்சார உற்பத்திப் பிரிவுகளை தொடங்குங்கள் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்தேன். அதற்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒன்றுமே நடக்கவில்லை, அதுதான் நடந்தது. இன்று வரை எனக்கு பிரதமரிடமிருந்து பதிலே வரவில்லை.

பொருளாதார சீர்குலைவு என்று பயப்படுகிறார்கள். பயப்படத் தேவையில்லை. இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நமது திறமை, தகுதி, வேகம் உள்ளிட்ட அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்க இந்த பொருளாதார சவால்களை நாம் துணிச்சலுடன் ஏற்று முறியடிக்க வேண்டும். அதற்கு துணிச்சல் மட்டுமே தேவை. இருந்தால் சாதிக்கலாம்.

2008ம் ஆண்டு உலகை பொருளாதார பின்னடைவு தாக்கியபோது ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டுங்கள் என்று பிரதமருக்கு நான் யோசனை தெரிவித்தேன். அவரும் அதை வரவேற்றார். மேலும் குஜராத்தில் நாங்களாகவே இதற்கு முன்னோடியாக ஒரு நடவடிக்கையை எடுத்தோம். 100 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டாளர்களை வரவழைத்து பேசினோம், விவாதித்தோம். அதன் இறுதியில் என்ன நடந்தது என்று தெரியுமா? 450 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இப்போது ராஜஸ்தானை விட நாங்கள்தான் அதிக அளவிலான சூரிய சக்தியை உற்பத்தி செய்கிறோம். ராஜஸ்தானுக்கு ஆண்டுக்கு 8500 மெகாவாட் மின்சாரம்தான் சூரிய சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் அதை விட கூடுதலாக 4000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். 2012 இறுதியில் இது 7000 மெகாவாட்டாக உயரும்.

மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை. குஜராத்தின் வளர்ச்சியும், செழுமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் மோடி.

அரை மணி நேரத்திற்குப் பேசினார் மோடி.அவரது பேச்சுக்கு கூட்டத்தினர் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது கூடியிருந்த மத்திய அரசின் பிரதிநிதிகளையும், காங்கிரஸ் முதல்வர்களையும் நெளிய வைத்து விட்டது. அதை விட உச்சமாக மோடி பேசி முடித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று சில விநாடிகள் தொடர்ந்து பலத்த கைதட்டல் கொடுத்து மோடியைக் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment