Saturday, January 21, 2012

கலைஞரும்,அன்பழகனும் இளைஞர்கள்தானே. தா.பாண்டியன் பளிச் பேட்டி

ரொம்பவும் நழுவாமல், ‘நச்’சென்று பேட்டி கொடுக்கும் தலைவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். அடுத்த மாதம் 17, 18, 19&ம் தேதிகளில் ராஜபாளையத்தில் நடைபெற இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடுக்கான ஆயத்தப் பணிகளில் ‘பிஸி’யாக இருந்த அவரிடம், கிடைத்த சந்தர்ப்பத்தில் பேசினோம்!



கடலூர், புதுவையில் ‘தானே’ புயலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதே?

‘‘முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் எங்கள் இயக்கக் குழுவினரும் அங்கு சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து ஓர் அறிக்கை கொடுத்தார்கள். இதை ‘தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்தோம். ஆனால், மத்திய அரசு வெறும் 500 கோடி ரூபாயை மட்டுமே அறிவித்தி ருக்கிறது. கொள்ளையடிப்பது மட்டும் லட்சம் கோடியாம்... மக்கள் செத்தால் 500 கோடிதானாம்... என்ன நியாயம்? ஒரு மாநில அரசு எந்தளவுக்கு விரைவாக செயல்பட முடியுமோ, அந்தளவுக்கு விரைவாக செயல்படுகிறது தமிழக அரசு. மத்திய அரசுதான் பாரபட்சம் காட்டுகிறது.’’

பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

‘‘தமிழ் மக்களின் எதிரிகள் என்பதைத் தவிர, வேறு காரணமில்லை. இதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு 1,500 கோடி ரூபாயை ஓடிச்சென்று கொடுத்த மத்திய அரசு, ‘தானே’ புயல் பாதித்த புதுவையையும், கடலூரையும் வஞ்சித்துவிட்டதே? புரிகிறதா... தனக்குப் பிடிக்காத மாநிலங்களைப் பழிவாங்க மத்திய அரசு, நிதியை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.’’

முதல்வர் ஜெயலலிதாவும் இதே புகாரை சொல்லியிருக்கிறாரே?

‘‘முதல்வரின் கருத்து மட்டுமல்ல, ஏழு கோடித் தமிழர்களின் கருத்தும் அதுதான்!’’

கூடங்குளம் பிரச்னையில் கம்யூனிஸ்ட்டுகள் தெளிவாக ஒரு முடிவை அறிவிக்கவில்லையே?

‘‘மக்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த அணுமின் நிலையம் தமிழகத்திற்குத் தேவை எனக் கேட்டு வாங்கியது மாநில அரசுதான்; நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்ததும் அதேதான். இந்நிலையில், 14 ஆயிரம் கோடி செலவில் பணிகளைச் செய்து முடித்திருப்பது மத்திய அரசு. எனவே, இரண்டு அரசுகளும் இதில் முடிவு செய்துகொள்ளட்டும். மற்ற பிரச்னைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் சொன்னதை மட்டும் உடனே கேட்டார்களா என்ன?’’

முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?

‘‘உச்ச நீதிமன்றம் நிச்சயம் தீர்வைச் சொல்லும். தமிழகத்தைப் பொறுத்தவரை இதில் எந்த புதிய கோரிக்கையையும் நாம் முன்வைக்கவில்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்த உரிமையைத்தான் கேட்கிறோம். முல்லைப் பெரியாறு வெறும் அணை அல்ல. அது ஒரு புனிதச் சின்னம். ‘அதை இடிப்பேன்’ என யார் முயன்றாலும், அதைத் தடுத்தே தீருவோம்!’’

கேரளாவுக்கு ஒரு நிலை, தமிழகத்துக்கு ஒரு நிலை என்றுதானே பொதுவுடைமை இயக்கங்கள் செயல்படுகின்றன?

‘‘அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் உள்ள தர்மசங்கடம் அது. அப்படி இருக்கக் கூடாது. அதை நான் நியாயப்படுத்த மாட்டேன்.’’

‘தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று அரசியல் தேவை’ என்கிற குரல் தொடர்ந்து எழுப்பப்படுகிறதே?

‘‘இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மற்றபடி தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டுமா என்பதையெல்லாம் எங்களின் மாநில மாநாட்டில் விவாதிப்போம்.’’

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில், ‘பொது வேட்பாளரை’ நிறுத்தும் எண்ணம் உண்டா இல்லையா?

‘‘இந்த ஒரே ஒரு தொகுதியால் ஆட்சி மாற்றம் நடக்கப்போவதில்லை. எனவே, அங்கு நாங்கள் பலப்பரீட்சை நடத்தப்போவதில்லை.’’

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. உங்களைக் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் உண்டா?

‘‘எங்களை விருந்துக்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்றெல்லாம் ஒருபோதும் எதிர்பார்ப்பவர்கள் அல்ல நாங்கள். ‘மக்களுக்கு ஓர் அரசு நல்லது செய்கிறதா? இல் லையா?’ என்பதுதான் எங்களுக்கு முக்கியம்.’’

போகட்டும்... அ.தி.மு.க. அரசு தொடர்பான உங்களது மதிப்பீட்டையாவது சொல்லுங்கள்?

‘‘பொதுவான பல பிரச்னைகளில் நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களை விடுதிகளில் சேர்க்க உத்தரவிட்டது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தெளிவானநிலைஎடுத்தது, பென்னிகுக்குக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்திருப்பது... ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதேசமயம் பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றைச்செய்யாமல், மாற்று வழிகளுக்கு முயற்சித்திருக்கலாம். பல நல்ல காரியங்களுக்கு இடையே, அது ஒரு கறுப்புக் கோடு!’’

தி.மு.க.வில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணியை ஸ்டாலின் முடுக்கி விட்டிருக்கிறாரே?

‘‘என்னதான் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அங்கு இறுதி முடிவு எடுக்கிற ‘இளைஞர்கள்’ கலைஞரும், அன்பழகனும்தானே! எப்படியும் பொதுக்குழு கூடி, ‘இறுதி முடிவை கலைஞர் எடுப்பார்’ என்றுதான் அறிவிக்கும். அங்கு நிரந்தர தலைவரும் அவர்தான். எங்கள் இயக்கத்தில் ஏற்கெனவே அதிக பொறுப்புகளில் இளை ஞர்கள் இருக்கிறார்கள்.’’

No comments:

Post a Comment