மாடுகளை அடக்குவது மட்டுமா... அரசியல்வாதிகளை அடக்குவதும் ஜல்லிக்கட்டுதான் என்பதைக் காட்டிவிட்டது இந்த மதுரைச் சம்பவம்!
பொங்கல் திருநாளையட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் அந்தந்த கிராமக் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அ.தி.மு.க-வின் கட்சி விழா போன்றுதான் நடந்தது. காரணம், அ.தி.மு.க. பிரமுகரும், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவரின் கணவருமான பாலாஜி தலைமையில் அமைக்கப்பட்ட விழாக் கமிட்டியில் முழுக்க முழுக்க அ.தி.மு.க. பிரமுகர்களே இடம்பெற்று இருந்தார்கள். வழி நெடுகிலும் அ.தி.மு.க. ஃப்ளெக்ஸ் போர்டுகள், மைதானத்துக்குள் ஜெயலலிதா படம், கூட்டத்தைக் கட்டுப்படுத்த பனியன் அணிந்த 300 பேர் என்று அ.தி.மு.க. விழாவாகவே நடந்தது விளையாட்டுப் போட்டி.
இதற்கெல்லாம் மேலாக, மாடுபிடி வீரர்களுக்கு ஜெயலலிதாவின் படம், அ.தி.மு.க. கட்சிக் கொடி இடம் பெற்ற டி-ஷர்ட்டுகளை கருப்பையா எம்.எல்.ஏ. முன்கூட்டியே கொடுத்ததும், அதனை கலெக்டர் மாற்றியதும்தான் வில்லங்கமாகி விட்டது.
ஜல்லிக்கட்டு நடந்த 17-ம் தேதி காலை 9.15 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியபோது, வீரர்கள்
அணிந்திருந்த டி-ஷர்ட்டைக் கண்டதும் டென்ஷனான கருப்பையா, 'ஏய்.. என்னய்யா.. உங்களுக்கெல்லாம் அம்மா படம் போட்ட டி-ஷர்ட் கொடுத்திருந்தேன். ஏன்யா இதைப் போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க. யாருய்யா டி-ஷர்ட்டை மாத்துனது?' என்று ஓப்பன் மைக்கில் சத்தம் போட்டார். உடனே மேடையில் இருந்த அதிகாரி ஒருவர், 'அதில் கட்சி சின்னம் இருந்ததால் மாற்றி இருக்கிறோம்'' என்று விளக்கம் அளிக்க, 'முதல் அமைச்சர் படத்தைப் போடக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருய்யா?' என்று எம்.எல்.ஏ. மீண்டும் ஓப்பன் மைக்கில் எகிறவே, ஏரியா டென்ஷன் ஆனது. 'அம்மா படம் போட்ட டி-ஷர்ட் வரும் வரை ஜல்லிக்கட்டைத் தொடங்கக் கூடாது’ என்று அறிவித்தவர், போய் புதிய டி-ஷர்ட்டுகளை எடுத்து வரும்படி தொண்டர் அணியினருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவரே டி-ஷர்ட்டை வாங்கிவரப் புறப்பட்டார். உடனே மைக் பிடித்த கமிட்டி உறுப்பினரும், அ.தி.மு.க. நகரப் பொருளாளருமான ராகவன், 'எம்.எல்.ஏ. வரும் வரை யாரும் மாட்டை அவிழ்க்கக் கூடாது...' என்று சொல்ல, கலெக்டர் சகாயம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 'அப்படின்னா நீங்களே போட்டியை நடத்திக்கோங்க சார். நாங்க (விழாக் கமிட்டி) வெளியேறிக்கிறோம்’ என்றார் ராகவன். 'அந்த டி-ஷர்ட்டை
போட்டுத்தான் ஆகணும்னா, நான் போயிடுறேன். நீங்களே நிகழ்ச்சியை நடத்திக்கோங்க’ என்று கலெக்டரும் ஓப்பன் மைக்கிலேயே அறிவிக்க... எம்.எல்.ஏ. தரப்பு அமைதி ஆனது. சிறிது நேரப் பரபரப்புக்குப் பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கி தடையின்றி நடந்தது.
கருப்பையா எம்.எல்.ஏ-விடம், நடந்ததைக் கேட்டோம். 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கடந்த ஆண்டு அழகிரி பிறந்த நாள் விழா போல நடத்தினார் புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளரான மூர்த்தி. நாங்கள் அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர்கள். நம் கலெக்டருக்கும் அம்மாவிடம் நல்ல பெயர் இருக்கிறது. அதனால்தான் பிரச்னையை விட்டுவிட்டோம். டி-ஷர்ட் மாற்றப்பட்ட விஷயத்தை முன்கூட்டியே சொல்லி இருந்தால், பிரச்னை செய்திருக்கவே மாட்டோம்'' என்றார் பவ்யமாக.
இதுபற்றி கலெக்டர் சகாயத்திடம் கேட்டபோது, 'டி-ஷர்ட்டில் முதல்-அமைச்சரின் படத்தை மட்டும் போட்டிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் அதில், கட்சியின் சின்னமும் இருந்தது. டி-ஷர்ட்டை மாற்றிய விஷயம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மூலம் முறையாக விழாக் கமிட்டியினருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. பிறகு எப்படி அது மீண்டும் பிரச்னையானது என்பது புரியவில்லை' என்றார் கலெக்டர் சகாயம்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் சிலர், 'விழாவை தாங்களே நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விழாக் கமிட்டியினர் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்தனர். அந்த விவகாரம் வெளியே வந்துவிடக் கூடாது என்பதால்தான் கலெக்டரிடம் மோதினார்கள். ஸ்பான்ஸர்களிடம் வாங்கிய தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்களையும் அமுக்கி விட்டார்கள். இதுபற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டால், ஊழல்கள் நிறையவே வெளியே வரும்' என்றார்.
அடப்பாவமே... இதிலுமா ஊழல்?
No comments:
Post a Comment