Thursday, January 19, 2012

சென்னையில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக குளிராக இருப்பது ஏன்?: ரமணன் விளக்கம்

சென்னையில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக குளிராக இருப்பது ஏன்? என்று வானிலை ஆராய்ச்சி மைய மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் விளக்கம் அளித்தார்.

தமிழர்கள் ஒரு ஆண்டை கார்காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில் காலம் என்று 6 பருவங்களாக பிரித்தனர்.

கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களில் உள்ளது. கூதிர் காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகும். அதாவது இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.



முன் பனிக்காலம் மார்கழி, தை ஆகிய இரு மாதங்களாகும். பின் பனிக்காலம் என்பது மாசி, பங்குனி மாதங்களாகும். இளவேனில் காலம் என்பது சித்திரை, வைகாசி மாதங்களாகும்.



முதுவேனில் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்களாகும்.



தற்போது நடப்பது முன் பனிக்காலம். முன் பனிக்காலத்தில் இரவில் பனிபெய்வதால் மாலை 6 மணிக்கு மேல் குளிர் சற்று அதிகமாக இருக்கும். நள்ளிரவில் குளிர் அதிகமாக இருக்கும். காலையில் 7 மணிக்கு சூரியன் உதித்ததும் பனி போய் விடும். அதனால் குளிரும் போய்விடும்.



ஆனால் கடந்த 15-ந் தேதி முதல் அதாவது பொங்கல் பண்டிகை முதல் தொடர்ந்து இரவிலும், காலையிலும் குளிர் அதிகமாக உள்ளது.



மாலை 5 மணிக்கே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கடும் குளிர் அடிக்கிறது. நேற்று காலை 9 மணி வரை குளிர் நீடித்தது. 7 மணி முதல் வெயிலும் அடித்தது. குளிரும் அடித்தது. சூரியன் உதித்தும் குளிர்போகவில்லை.



கடும் குளிர் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது காற்றின் வேகம் அதிகரிப்பதால் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களை மேலும் குளிர் தாக்கியது.



இந்த அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணனிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 6-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் வடகிழக்கு பருவக்காற்று நிற்கவில்லை. அந்த காற்று ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை வீசும்.



தற்போது குளிர்காலம் நடக்கிறது. இந்த குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை இருக்கும். இருப்பினும் சென்னையில் கடந்த 3 நாட்களாக குளிர் அதிகமாக உள்ளது. அதுவும் நேற்று குளிர் மிக அதிகமாக பதிவாகி உள்ளது.



அதாவது கடந்த 14-ந் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 65.84 டிகிரி ஆகும். 15-ந் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 65.3 டிகிரி பதிவானது. ஆனால் 16-ந் தேதி இரவு அதாவது நேற்று அதிகாலை கடுங்குளிர் காரணமாக 63.14 டிகிரி பதிவானது. அதுபோல மீனம்பாக்கத்தில் நேற்று அதிகாலை 62.42 டிகிரி மட்டுமே பதிவானது. (இது 22 வருட கால வரலாற்றில் இதுதான் குறைந்த அளவு டிகிரி ஆகும்)



வானம் தெளிவாக இருந்தால் குறைந்தபட்ச வெப்பம்தான் நிலவும். கடந்த 3 நாட்களாக வானம் மிகவும் தெளிவாக இருப்பதால் குளிர் அதிகமாக உள்ளது. இந்த குளிர் இன்னும் சில நாட்கள் நீடிக்கும். பின்னர் அது குறையலாம்.



இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment