Monday, January 23, 2012

சீனா- இந்தியா: ஜெயிக்கப் போவது யாரு?


வருகிற வியாழக்கிழமை நம் நாட்டின் 63-வது குடியரசு தினம். இன்றைக்கு அதிவேக பொருளாதார வளர்ச்சி காணும் உலகின் ஐந்து முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அடுத்த சில பத்தாண்டுகளில் அமெரிக்காவையே நாம் முந்திவிடுவோம் என்றாலும், நம் பக்கத்து நாடான சீனாவை நம்மால் முந்திக் கொண்டு போக முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி.

த்தனைக்கும் 1990 வரை இந்தியாவும் சீனாவும் சம பலத்தில் இருந்த நாடுகள்தான். ஆனால், இப்போது சீனா 6 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரம். ஆனால், நம் இந்திய பொருளாதாரமோ வெறும் சுமார் 2 டிரில்லியன் டாலர் மட்டுமே. எப்படி உருவானது இத்தனை பெரிய இடைவெளி? சீனாவின் பலமும், பலவீனமும் என்ன? இந்தியாவின் பலமும் பலவீனமும் என்ன? சீனாவை முந்த வேண்டுமெனில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?''இந்தியா 1991-ம் ஆண்டுதான் புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகம் செய்தது. ஆனால், சீனாவோ 1978-ம் ஆண்டே அதை செய்துவிட்டது. எனவே, இந்த 13 வருட இடைவெளி இருந்து கொண்டுதான் இருக்கும். இது மாற நீண்ட காலம் ஆகும்''

பார்வை மாற வேண்டும்!

''முதல் தேவை, அணுகுமுறை மாற்றம். மேற்கத்திய உலகத்துக்கு என்ன நன்மையோ, அதுவே நமக்கும் நன்மை என நாம் நினைக்கிறோம். இது தவறு. உதாரணமாக, உலகமயமாக்கலிலிருந்து தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டது சீனா. நாமோ, உலகமயமாக்கலை தெய்வமாக நினைத்து, அதனிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறோம்.

வெளிநாட்டு சட்டங்களை மதிக்கிற அளவுக்கு நம் நாட்டுச் சட்டங்களை நாம் மதிப்பதில்லை. சில வெளிநாட்டு நிறுவனங்களுக்காக நம் நாட்டுச் சட்டங்களை மாற்றத் தயாராக இருக்கிறோம். சீனாவில் அப்படி இல்லை.
எந்த நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சீன சட்டப்படிதான் நடக்க வேண்டும். ஒழுங்கான விதிமுறைகள் இல்லாமல் வளர்ச்சி இருக்காது என்பதை சீன அரசாங்கம் புரிந்து வைத்திருக்கிற மாதிரி நம் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழியறிவு!

சீனர்கள் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் நாட்டில் இன்னமும் ஆங்கிலத்தைத் தாண்டி அடுத்த மொழியை கற்றுக் கொள்ள நாம் நினைக்கவில்லை. குறிப்பாக, சீன மற்றும் ஜப்பானிய மொழிகளை கற்க வேண்டும். அப்போதுதான் கிழக்காசிய நாடுகளுடனும் போட்டி போட முடியும்.

வங்கி!

இந்த விஷயத்தில் நம் கை கொஞ்சம் ஓங்கியே இருக்கிறது. அனைத்துவிதமான முறையான தொழில்களுக்கும் இங்கு கடன் கிடைக்கும். வட்டி விகிதத்திலும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வு களும் இல்லை.ஆனால், சீனாவில் அப்படியல்ல. தனியார் நிறுவனங்களுக்கு அதிக வட்டியும், அரசு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் தருவதாக சொல்கிறார்கள். என்றாலும், அந்நாட்டு வங்கிகளின் நிகர வாராக் கடன் 35% சதவிகிதம். ஆனால், இந்திய வங்கிகளின் நிகர வாராக்கடன் மிகக் குறைவு. தவிர, சீனா ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கிறது. உலகளவில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சீனாவால் அதை சமாளிக்க முடியாது. உதாரணமாக, 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, நம் பங்குச் சந்தையைவிட சீனச் சந்தை இரண்டு மடங்கு சரிந்தது.

தொழில்!

சீனாவில் தொழிற்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தொழில் முனைவோர்களுக்கு அங்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால், இங்கு அப்படி இல்லை. இந்தியாவின் வளர்ச்சியில் சிறு மற்றும் குறுநிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் எஸ்.எம்.இ.க்கள் இருக்கின்றன. ஆனால், தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இக்கால இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. ஏதாவது ஒரு வேலையில் போய் செட்டில் ஆகவே எல்லோரும் நினைக் கிறார்கள். இந்த சோம்பேறித்தனம் மாற வேண்டும்.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர்!

இதில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. நமக்கு 25 வருடங்களுக்குப் பிறகுதான் சீனாவில் ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால், சீனாவில் தற்போது மணிக்கு சராசரியாக 200 கி.மீட்டருக்கு மேல் ஓடும் ரயில்கள் அதிகம். ஷாங்காய் நகரத்துக்கும் பெய்ஜிங் நகரத்துக்கும் இடையேயான 1,300 கி.மீ. தூரத்தைக் கடக்க 5 மணி நேரம் போதும். ஆனால், இதே அளவு இடைவெளி கொண்ட சென்னையில் இருந்து மும்பை செல்ல 24 மணி நேரம் ஆகிறது.நாலு வருடத்திற்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியையே ஓஹோவென சீனா நடத்தியது. ஆனால், ஒரு காமன்வெல்த் போட்டியை நடத்தவே நாம் தடுமாறிவிட்டோம். எத்தனை பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் என்றாலும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்படத் தொடங்கிவிடுகிறது. நம் நாட்டில் எத்தனை சிறிய திட்டமானாலும் குறித்த தேதியில் நிறைவேறியதாகச் சரித்திரம் இல்லை. இதனால் செலவு பல மடங்கு உயர்ந்துவிடுகிறது. மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறை களிலும் நமக்கும் சீனாவுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது.பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் சீனாவை நாம் சமாளிக்க வேண்டும். பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடன் சீனா நட்பாக இருப்பது நமக்கு பிரச்னைதான். இந்நாடுகளுடன் நாமும் நட்புடன் நடக்க வேண்டும். இந்நாடுகளுக்கு அதிக பிஸினஸ் தருவதன் மூலம் அவர்களை நம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.உதாரணமாக, இலங்கையில் அம்பாந்தோட்டை என்னுமிடத்தில் சீன அரசின் உதவியுடன் ஒரு புதிய துறைமுகத்தை கட்டி வருகிறது இலங்கை அரசாங்கம். தூத்துகுடியில் இருந்து இந்த துறைமுகத்திற்கு அதிக பொருட்களை கொண்டு சென்று, அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் இலங்கை நம்மை பகைத்துக் கொள்ள விரும்பாது.

இறுதியாக, இந்தியாவின் வளர்ச்சிக்கு நம்பிக்கையற்ற, குழப்பமான அணுகுமுறையால் உருவாகும் பயமும், தடுமாற்றமும் பெரிய தடையாக இருக்கும் என்றால், சீனாவுக்கு அதன் அதீத இறுமாப்பு ஒரு தடையாக இருக்கும்.நாம் பயத்தை விட்டொழிக்கப் போகிறோமா அல்லது சீனா இறுமாப்பை விட்டொழிக்கப் போகிறதா என்பதைப் பொறுத்தே சரித்திரத்தில் ஜெயிக்கப் போவது யார் என்று தெரியும்'!

எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது காலம்தான். பார்ப்போம், இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்கிறதென்று!
விகடன்

No comments:

Post a Comment