‘வாட்டர் ப்ரூஃப் என்று போட்டிருக்கிறது. ஆனாலும் என் கைக்கடிகாரத்துக்குள் தண்ணீர் இறங்கிவிடுகிறதே‘ என்று ஆதங்கப்படுபவர்கள் உண்டு. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கைக்கடிகாரத்தின் கீழ்ப் பகுதியில் என்ன வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதைச் சரியாகப் பாருங்கள். அது ’வாட்டர் ப்ரூஃப்’ என்பதாகவும் இருக்கலாம். ’வாட்டர் ரெசிஸ்டண்ட்’ என்பதாகவும் இருக்கலாம். வாட்டர் ரெசிஸ்டண்ட் கைக்கடிகாரங்கள், தொடர்ந்து நீரில் இருந்தால் தண்ணீர் அதற்குள்ளே போக வாய்ப்பு உண்டு. சொல்லப் போனால் அடிக்கடி அதிகமாக வியர்வை சுரந்தால் கூட இந்த வகை கடிகாரங்கள் பாதிக்கப்படலாம். வாட்டர் ப்ரூஃப் என்று வகைப்படுத்தப்பட்ட கைக்கடிகாரங்களில் கூட சில சமயம் நீர் இறங்கிவிடும். இதற்கும் காரணம் உண்டு. பல கைக்கடிகாரங்களில் அவற்றின் அடியில் உள்ள பகுதியை வட்டமாகத் திருகி வெளியே எடுக்க முடியும். அப்படி இருந்தால் அது நிஜமாகவே வாட்டர் ப்ரூஃபாக இருக்கும். ஆனால் வேறு சில கைக்கடிகாரங்கள் அழுத்தி (அதாவது ப்ரஸ் செய்து) வெளியே எடுக்கும் விதத்தில் இருக்கும். இவை அதிகபட்சம் வாட்டர் ரெசிஸ்டண்டாக மட்டுமே இருக்கும்.
பேஸல் ரிங் (basal ring) என்ற அடிப்பகுதி சரியாகப் பொருத்தப்படவில்லையா? அல்லது அந்தப் பகுதியில் கீறல் ஏற்பட்டுள்ளதா? அப்படியானால் தண்ணீர் உள்ளே சென்றுவிடலாம்.மிகமிக மெலிதான (அதாவது sleek கைக்கடிகாரங்கள்) பெரும்பாலும் வாட்டர் ப்ரூஃபாக இருப்பதில்லை. உலக தரமாக்கல் நிறுவனத்தின்படி (The International Organization for Standardization) வாட்டர் ப்ரூஃப் என்ற வார்த்தை இனி கைக்கடிகாரங்களில் இடம் பெறக்கூடாது.
* தண்ணீர் உள்ளே போகாதபடி நாமும் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ளலாம். கைக்கடிகாரம் நனைந்திருக்கும்போது, அதன் க்ரௌன் பகுதியை (அதாவது கீ கொடுக்கும் பகுதியை) இயக்கக்கூடாது.
* அதிக அழுத்தத்துடன் கீ கொடுப்பது, தேவைக்கு அதிகமான அளவில் கீயைச் சுற்றுவது போன்ற காரியங்கள் மெயின் ஸ்பிரிங்கை உடைத்துவிடலாம். எனவே கவனம் தேவை.
* கைக்கடிகாரத்தில் உள்ள ‘ஜுவல்ஸ்‘ எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது தெரியுமா? ஜுவல்ஸ் என்பவை கடிகாரத்தில் உள்ள சிறுசிறு பாகங்கள் ஒன்றோடொன்று உரசாமல் இருக்க பயன்படுத்தப்படுபவை.
* வாட்டர் ரெசிஸ்டன்ட் என்றாலும் கூட அது வீட்டுப் பயன்களுக்கும் சிறிது நேரம் அணிந்தபடியே நீச்சலடிக்கவும் மட்டும்தான். கடலுக்குள் டைவ் செய்வது, தொடர்ந்து நீச்சலடிப்பது என்பதற்கெல்லாம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கைக்கடிகாரங்கள் ஏற்றதல்ல.
*ISO 2281 சான்றிதழின்படி 10 சென்டிமீட்டர் ஆழம் கொண்ட நீரில் ஒரு மணிநேரம் வரை water resistance வகை கைக்கடிகாரத்தை வைத்திருந்தால் நீர் உள்ளே புகக்கூடாது.
No comments:
Post a Comment