Saturday, January 7, 2012

ஆக்ஷன் சசி போதுமா?

சிகலா அண்ட் கோ-வை நீக்கிவிட்டதாலேயே ஜெயலலிதா புனிதம் அடைந்துவிட முடியாது.அந்த எல்லையை அடைய எத்தனையோ படிகளை அவர் தாண்டியாக வேண்டும்!

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் ஜெயலலிதா பேசியபேச்சு, இதற்கான பிராயச்சித்தப் பேச்சாக அமைந்திருப்பதுதான் வர வேற்கத்தக்கது. 'நேர்மையற்ற வாழ்வு வாழ்ந்தவன் தூக்கம் இல்லாமல் தவித்தான்’... என்பதற்குக் குட்டிக் கதை சொல்லி விளக்கம் அளித்த அவர், ''இதைப் போலத்தான் நாம் செய்யும் தவறும் துரோகமும் தூக்கத்தைத் தொலைத்துவிடும். மனசாட்சி நம்மைத் தினம் பிடித்து உலுக்கும். அத்தகைய அமைதியைக் கெடுக்கும் காரியங்களில் ஈடுபடாமல், பொது வாழ்வை அமைத்துக்கொண்டால் நம் இயக்கம், உலகமே உற்று நோக்கும் அதிசயப் பீடமாக உயர்ந்து நிற்கும்'' என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்.

'அ.தி.மு.க-விடம் இருந்து இனி யாரும் வெற்றியைத் தட்டிப் பறிக்க முடியாது’ என்று அவர் நினைப்பது நிஜத்தில் நடக்க வேண்டுமானால் இதையும் செய்யலாம்!
தகுதியான அமைச்சர்கள்!
அலை அடித்ததால் தகுதி இல்லாதவர்கள்கூட எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்கள். காலம் கடந்த கவலை என்பதால், இனி எதுவும் செய்ய முடியாது. ஆனால், இதில் இருந்து தகுதியான 30 பேரை ஜெயலலிதாதான் தேர்ந்து எடுக்க வேண்டும். இப்போது அமைச்சர்கள் ஆன சிலர் 'பணம் கொடுத்து’ அந்தத் தகுதியை அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதனால்தான் முதல் தடவை எம்.எல்.ஏ. ஆனவர் கள்கூட பெரிய துறைக்கு அமைச்சர்கள் ஆக்கப்பட்டார்கள். 'பசை’யான துறை என்பதற்காக அனுபவம் இல்லாதவர் கள்கூட அமைச்சர்கள் ஆக்கப்பட்டார் கள். பொது வாழ்வில் நீண்ட அனு பவம், நிர்வாக விஷயங்களைக் கையாண்டவர்கள், குறிப்பிட்டநபரை ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டுகளாகத் தெரியும், இதுவரை அவர் மீது புகார் உண்டா, தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் தன்மைகொண்டவரா... என்பது எல்லாம் யோசித்து, அவர்களை அமைச்ச ராகத் தேர்ந்து எடுக்க வேண்டும். இவர்களது எல்லாத் தவறுகளுக்கும் ஜெயலலிதாதான் பதில் சொல்லி ஆக வேண்டும் என்பதால் மிகவும் எச்சரிக்கை தேவை!


சுத்தமான முதல்வர் அலுவலகம்!
அமைச்சர்கள் தேர்வைவிட ஜெயலலிதா கவனமும் சிரத்தையும் எடுக்க வேண்டிய இடம் தனது அலுவலகம். தன்னைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 'சாமி வழிவிட்டாலும் பூசாரி விடல’ என்ற டைப் ஆட்களோ, தங்களைத் தாங்களே 'ஆக்டிங் சி.எம்.’ ஆக நினைத்துக்கொள்பவர்களோ அல்ல. முதலமைச்சர் அலுவல கத்தில் மூன்று பேர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகிய மூன்று பேர்... இந்த ஆறு பேரும் நேர்மை யானவர்களாக அமைந்துவிட்டால், அந்த முதலமைச்சரைக் காத்துக் கருப்பு அண்டவே அண்டாது. ஸ்ரீராமுலு,

கா.திரவியம், சபாநாயகம், சொக்கலிங்கம், எஸ்.ஆர்.கருப்பண்ணன், பரமசிவம் என்று பக்தவச்சலம் காலம் முதல் எம்.ஜி.ஆர். ஆண்டது வரை விரல்விட்டு எண்ணக் கூடிய நல்லவர்கள் இருந்து, அந்த முதல்வர் களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். கடந்த முறை ஜெயலலிதா அவரது சகாக்களோடு சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். முந்தைய ஆட்சியில் கருணாநிதியின் கவனத்துக்குப் போகாமல், ராஜ ஆட்சி நடத்திச் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இவர்களை ஜெ. தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும்!

நேர்மையான அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் ஒரே நாள் ராத்திரியில் நல்லவர்களாக மாற்றிவிட முடியாது. ஆனால், இதில்தான் நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்பாவியாக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்ளும் அமைச்சர்களுக்கு

சதவிகிதக் கணக்குப் பால பாடத்தை எடுப்பவர்கள் இதில் சில அதிகாரிகள்தான். எந்த ஆட்சி வந்தாலும் இந்த மாதிரியான அதிகாரிகளுக்கு உச்சகட்டப் பதவிகள் ஒழுங்காகக் கிடைத்துவிடும். தி.மு.க. சார்பு அதிகாரிகள், அ.தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று இவர்களாகவே பிரிந்து கொண்டு பங்கு வைத்துக்கொள்வதும் தொடர்கிறது.



ஒரு ஆட்சியின் அவசர அவசியத் தேவை யான முக்கியத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் என சுமார் 90 பேர்தான் அனைத்துக்கும் அடித்தளம். இந்த இடங்களுக்காவது சரியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். முதல்வருக்கும் மக்களுக்குமான பாலம் இவர்கள்தான். பாலம் பழுதானால் பயணம் இலக்கு சேராது!

ஊழல் இல்லாத நிர்வாகம்!
ஊழல், லஞ்சம், முறைகேடுகள், கமிஷன், கட்டிங் போன்ற வார்த்தைகள் அண்டாத ஒரு நிர்வாகம் இன்றைய சூழ்நிலையில் கற்பனைதான்! அதற்காக அந்த இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடங்காமல் இருக்க முடியாது. காலம் தவிர்க்க முடியாமல் ஒரு கட்டாயத்தை ஜெயலலிதாவுக்கு உருவாக்கி இருக்கிறது. குடும்பம், சொந்தம், பந்தம்... போன்ற எந்த ஒரு நெருக்கடியும் இல்லாத வாழ்க்கை அவருக்கு வாய்த்து இருக்கிறது. தேவையின் பொருட்டே எல்லாத் தவறுகளும் நடக்கின்றன. இன்று அவருக்கு எந்தத் தேவையும் இல்லை. இதை அவர் உணர்ந்ததால்தான் கிறிஸ்துமஸ் விழாவிலும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்திலும் பொதுத் தூய்மையைப் பற்றி அதிகம் பேசி இருக்கிறார். இதை அவர் யுத்தமாகவே தொடங்கியாக வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் எல்லாத் துறைகளிலும் ஆரம்பித்தால், அடுத்த தவறுகள் அண்டுவதற்கு 30 ஆண்டுகள் ஆகும்.

நிர்வாகத்தில் துறைரீதியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை செய்ய கருணாநிதி ஆட்சியில் ராமானுஜம் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த ஆலோசனைகளை வழக்கம்போல கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு, குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அதைத் தூசிதட்டி எடுத்து அமல்படுத்தலாம். மிகப் பெரிய திட்டங்களை இரண்டு மூன்று அமைச்சரவைச் செயலகங்கள் கூடி முடிவு எடுக்கலாம். 50 கோடியைத் தாண்டிய டெண்டர் களை எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்களின் பரிசீலனைக்குப் பின் வெளியிடலாம் - இப்படிப் பல கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமாகத்தான் கமிஷன் கலாசாரத்தை ஒழிக்க முடியும்.

மாநில நிர்வாகத்தை 'லோக் ஆயுக்தா’ அமைப்பு இல்லாமல் சீர்திருத்த முடியாது. லோக் ஆயுக்தாவை உருவாக்காமல் ஊழலுக்கு எதிராகப் பேசுவது வெறும் பேச்சாகவே முடியும்!

கட்சியைச் சீர்படுத்துங்கள்!
தோட்டத்தில் யாருடைய க்ராஃப் ஏறுகிறதோ, அவர் கட்சியிலும் தனது கோதாவைச் செலுத்தி வந்த காலம் முடிந்து விட்டது. சசிகலா குடும்பத்தின் கிளைப் பிரமுகர்கள் குறுநில மன்னர்களாக வலம் வந்ததற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஆனால், இத்தகைய பிரமுகர்களுக்குப் பணமும் வசதிகளும் செய்து கொடுத்தவர்கள் முக்கியப் பொறுப்புகளில் மாவட்ட அளவில் இருக்கிறார்கள். குடியிருக்கும் சொந்த வார்டில் ஜெயிக்க முடியாதவர்கள், மாவட்டச் செயலாளர்களாக இருந்தால் எப்படிக் கட்சியை வளர்ப்பார்கள்? இத்தகைய நியமனங்களுக்கு ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பல இடங்களில் பஞ்சாயத்துக்கள், விட்டுக்கொடுத்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு நடந்தாலும் தி.மு.க-வில் கொஞ்ச மாவது ஜனநாயகக் காற்று வீசுவதாக அந்த உள்கட்சித் தேர்தல்களைச் சொல்லலாம். இதனை ஜெயலலிதாவும் கடைப்பிடிக்கலாம். இப்படித் தேர்ந்துஎடுக்கப்படுபவர்களால்தான் கட்சிக்குப் பயன். நியமனங்களால் அந்த நபர்களுக்கு மட்டுமே பலன். இந்த நடவடிக்கைகளில் இருந்து தனது கட்சிச் சீர்திருத்தத்தை ஜெயலலிதா தொடங்க வேண்டும். கட்சிரீதியான முடிவுகளை எடுக்க அதிகஅதிகாரம் பொருந்திய குழு அமைக்கப்பட வேண்டுமே தவிர, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வேலை பார்ப்பவர்களும் கார்டனில் சம்பளம் வாங்குபவர்களும் தீர்மானிப்பவர்களாக இருக்கக் கூடாது.

எம்.ஜி.ஆர். தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றியதால் உருவான கட்சி அ.தி.மு.க. மதிய வெயிலில் கூடி நள்ளிரவுக் குளிரையும் தாண்டி தனக்காகக் காத்திருந்த பெருங் கூட்டத்தைப் பார்த்ததும்... எம்.ஜி.ஆர். கையைத் தூக்குவதற்கு முன்னால் கண்களில் நீர் கோத்துவிட்டது. 'எனக்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள்... இதெல்லாம் எதற்காக?’ என்று யோசித்தபோது வந்தது அந்த அழுகை.

'மகராசன்... முகத்தைப் பார்த்தா போதும்’ என்று காரணம் சொன்னான் ரசிகன். இத்தகைய ரசிகனின் மனதில் ஊன்றிய இயக்கத்தை முதலீடாக வைத்து, இனி யாரும் ஆதாயம் பார்த்து விடாமல் தடுக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதை அவர் இனியும் செய்யத் தவறினால், பாவங்களுக்குப் பங்குதாரர் ஆகித்தான் தீர வேண்டும்!

No comments:

Post a Comment