Saturday, January 7, 2012

கள்ளம் - கபடம் - வஞ்சகம்!

கண் வெயிலைப் பார்க்கும்; மனம் மழையை நினைக்கும்; வாய் பனியைப் பற்றிப் பேசும்.

இத்தனைக்கும் எல்லா அங்கங்களும் ஒரே உடம்பில் தான் இருக்கின்றன.


‘கண்ணொன்று காண, மனம் ஒன்று நாட, வாயொன்று பேச’ என்று பாடினார்கள்.

அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்!

முகத்துக்கு முன்னால் சிரிப்பார்கள்; முதுகிற்குப் பின்னால் சீறுவர்கள். பக்கத்தில் இருந்து கொண்டே, ‘எப்போது கவிழ்க்கலாம்’ என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எவ்வளவு பேரை நான் பார்த்திருக்கிறேன்?

அவர்களைப் பற்றி எச்சரித்து எத்தனைப் பாடல்கள் எழுதியிருக்கிறேன்?

சிலரை நான் நம்பாமல் இருந்தாலும், மற்றும் சிலரை நம்பி இருந்தாலும் எனக்கு இத்தனைக் கஷ்டங்கள் வந்திருக்காது.

பெதடின் போட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்க மாட்டேன்; பணத்துக்குச் சிரமப்பட்டிருக்கவும் மாட்டேன்.

ஏற்கெனவே நான் கூறியபடி, எனது வாழ்க்கை வரலாற்றுக்கு ‘வனவாசம்’ என்ற தலைப்பைவிட ‘ஒரு முட்டாளின் சுயசரிதம்’ என்ற தலைப்பை பொருத்தமானது.

ஆனால் அந்த முப்பது ஆண்டுகளில் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்தான், இன்று எழுத்துக்களாகப் பரிணமிக்கின்றன.

பாண்டவர்கள் கெளரவர்களால் வஞ்சிக்கப்பட்டாமல் இருந்திருந்தால், பகவானுடைய திருஷ்டி அவர்கள் மேல் விழுந்திருக்கப் போவதில்லை; பாரத யுத்தமும் நடந்திருக்கப் போவதில்லை.

நானும் பல பேரால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்து மதச் சிந்தனை எனக்கு இந்த அளவுக்குத் தோன்றி இருக்கப் போவதில்லை.

எனது தர்க்க அறிவை நான் விருத்தி செய்து கொள்ள வஞ்சகர்களும், துரோகிகளுமே துணையாக இருந்தார்கள்.

அவர்கள் நேரடி எதிரிகளாக இருந்திருந்தால் நான் சமாளித்திருப்பேன். மித்ர துரோகிகளாக இருந்ததாலேயே சங்கடப்பட வேண்டி வந்தது.

புராண இதிகாசங்களிலோ, அரக்கர்கள் நேரடி எதிரிகள். அவர்களை நம்பலாம்; நம்ப முடியாதவன் நண்பன் மட்டுமே.

அதனால்தான் இராமலிங்க அடிகளார், ‘உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்று பாடினார்.

நல்லவர்கள் சேர்ந்து ஒழுகுவது பற்றி வள்ளுவனும் கூறினான்.

வஞ்சக நெஞ்சங்களைக் கம்பனும் பாடினான்.

கள்ளத்தைக் கருவறுக்க, கபடத்தை வேரறுக்க, வஞ்சத்தை வெட்டி வீழ்த்த இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.

இருந்தும் அது முன்னைவிட அதிகமாகி விட்டது!

இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனத்தால், சிறுபருவத்திலேயே மனிதன் வஞ்சகனாகி விடுகிறான்.

கற்பழித்துக் கொலை செய்வதும், காதறுத்து நகை திருடுவதும் சகஜமாகி விட்டன.

‘இரக்கமென் றொருபொரு ளில்லா அரக்கர்’ என்றான் கம்பன்.

இரக்கமற்றவர்கள் இப்போது நிறைந்து காணப்படுகிறார்கள்.

‘ஒரு வேளைச் சோறு தாயே’ என்று சத்தம் போடும் பிச்சைக்காரனுக்குச் சோறு போட மறுக்கிறார்கள்.

ஒரு நண்பர் ஒருவர் மேடைகளிலே ஏழைகளைப் பற்றி மிக உருக்கமாகப் பேசுவார். ஒரு பிச்சைக்காரனுக்கும் காலணா போட்டதில்லை. எந்தக் கொடுஞ்செயலிலும் துணிந்து இறங்குவார். ஆனால் அவரையும் பலர் நம்புகிறார்கள்.

சாகக் கிடக்கும் உயிருக்குக் கூடப் ‘பணம் கொடுத்தால் தான் வருவேன்’ என்று பிடிவாதம் பண்ணும் டாக்டர்கள்-

ஜெயிக்கக் கூடிய வழக்கைக் கூட பணம் கொடுக்காததால் தோற்கடிக்கும் வக்கீல்கள்-

நண்பனோடு பழகி, அவனது மனைவியையே கெடுத்து விடும் தலைவர்கள்-

ஒன்றா, இரண்டா?

லட்ச ரூபாயைத் திருட்டுத்தனமாகச் சம்பாதித்து, இருபதாயிரம் ரூபாயைத் திருப்பதி உண்டியலிலே போட்டு விடுவதால், வெங்கடாசலபதி திருப்தியடைவதில்லை.

மனிதாபிமானத்தை நேசிக்காதவர்கள், நான் முன் பகுதியில் கூறியபடி, நரகவாசிகளே!

நான் பார்த்தவரையில் இரண்டு வகையான நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் குற்றவாளிகளைக் கூட விடுதலை செய்து விடுகிறார்கள். இன்னொரு வகையினர், நிரபராதிகளைக் கூடத் தண்டித்து விடுகிறார்கள்.

வழக்கின் தன்மையைவிட, நீதிபதியின் மனபோக்கே நியாய அநியாயங்களுக்குக் காரணமாகி விடுகிறது.

கூர்மையான கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு மென்மையான குழந்தையிடம் விளையாட்டுக் காட்டுகிறோம் என்பதை, அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

முதலாவது பீச் லைனில் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட், அங்கே என் மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்திருந்தார் பால்காரர் ஒருவர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டும் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர். மிகச் சாதாரணமாகத் தள்ளப்பட வேண்டிய அந்த வழக்கைத் தன் ஜாதிக்காரனுக்குச் சாதகமாக்கி எனக்கு அபராதம் விதித்தார் மாஜிஸ்திரேட்.

கவனிக்க நாதி இல்லாமல், மேல் கோர்ட்டிலும் அது உறுதியாயிற்று.

நானும், என்னுடைய அரசியல் தலைவர் ஒருவரும், ஒரு குறிப்பட்ட தொழிலதிபர் தன் தொழிற்சாலையில் மந்திகரிளுக்கு மது விருந்தளித்ததாகப் பேசி இருந்தோம். நான் அதை எழுதியிருந்தேன்.

அவருடைய சொந்தக்காரர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவரிடம் என்னுடைய சிவில் வழக்கு ஒன்று வந்தது. தன் சொந்தக்காரரை நான் அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி, அந்த சிவில் வழக்கை ‘டிகிரி’ செய்தார் அந்த நீதிபதி.

பிறகு நான் பிரதம நீதிபதி கோர்ட்டில் அப்பீல் செய்து ஜெயித்தேன்.

இப்போது மத்திய அரசியல் நிபுணராக விளங்குகிற ஒருவர் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ஒரு டில்லி மந்திரியும் மற்றும் சிலரும் போய்ச் சொன்னார்கள் என்பதற்காக, ஒரு மிஷின் வழக்கில் என்னைத் தண்டித்தார்.

பிறகு நான் உயர் நீதிமன்றத்தில் தோழர் மோகன் குமாரமங்கலத்தை வக்கீலாக வைத்து, ஒரு மணி நேரத்தில் அந்த வழக்கை ஜெயித்தேன்.

மற்றும் வேலூரில் ஒரு வழக்கு. பல வழக்குகள்.

இப்போது எல்லா நீதிபதிகளுமே ரிடையராகி விட்டார்கள்.

இப்போது என் மீது வழக்குகள் அதிகமில்லை.

இந்த நாலைந்து ஆண்டுகளில் நான் கோர்ட்டுப் படிக்கட்டு ஏறியதில்லை. இனி அதற்கான அவசியமும் இருக்காது.

இன்றைய நீதிபதிகளில் பலர் உயர்ந்த தத்துவப் பேச்சாளர்கள்.

கடந்த ஆறேழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மனிதாபிமானிகள், அவர்கள் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

கள்ளம், கபடம், வஞ்சக நெஞ்சம் அவர்களிடம் இல்லை.

நானும் ஐந்தாண்டுகளுக்கு முந்திய கண்ணதாசனாக இல்லை. அதனால் எல்லாருடனும் சந்தோஷமாகப் பழக முடிகிறது.

கடந்து போன காலங்களை எண்ணிப் பார்த்தால் இப்போதும் எனக்குக் கண்ணீர் வரும்.

வஞ்சகர்களையே என் வாழ்நாள் முழுவதும் சந்தித்திருக்கிறேன்.

யாரோ ஒருவர் கவியரங்கத்திலே பாடியது போல் கவர்னர் அளவுக்குச் சம்பளம் வாங்கி, ராஷ்டிரபதி அளவுக்குச் செலவு செய்திருக்கிறேன்.

அன்றைய சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும் போது பொய், சூது, வஞ்சக நெஞ்சம் பற்றி இந்து மதம் சொன்னதே என் நினைவுக்கு வருகிறது.

மனிதனைத் தெய்வமாக்க இந்து மதம் விரும்புகிறது. ஆனால் மனிதனை மனிதனாக்கும் முயற்சியிலேயே இன்னும் அது வெற்றி பெறவில்லை.

இதயம் பரிசுத்தமாகவும், வார்த்தைகள், உண்மையாகவும் உள்ள ஒரு ஏழையைக் கண்டால், அவன் காலில் விழுந்துவிட நான் தயார்.

உண்மையில் ஏழைகளில் தான் பலர் அப்படி இருக்கிறார்கள். ஓரளவு வசதியுள்ளவன் கூட, குடி கெடுப்பவனாகத் தான் இருக்கிறான்.

தன்னையே கண்ணாடியில் பார்த்த இரணியனைப் போல், பலர் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமுதாய உணர்வு என்பது சிறிதும் இல்லை.

நாம் சுமந்து கொண்டிருப்பது உடம்பு தான் என்பதைச் சாகும் வரையில் அவர்கள் நினைப்பதில்லை.

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களையே, மதம் வளர்க்கிறது.

பொய் சொல்லாத சந்நியாசி, நாணயம் தவறாத சம்சாரி இருவரையும் அது உற்பத்தி செய்கிறது.

நாணயம், இரக்கம், ஒழுக்கம், மனிதாபிமானம் பற்றி இந்து மதம் போதித்த அளவுக்கு, எந்த மதமும் போதிக்கவில்லை.

இன்றைய இளைஞன் அப்படி ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

பத்துப் பேரை நல்லவர்களாக்குவது போல் ஒரு புனிதமான பணி, உலகத்தில் வேறெதுவும், இல்லை. அதற்கு இளைஞர்கள் கைக் கொள்ள வேண்டிய ஒரே நம்பிக்கை, மத நம்பிக்கை.

மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழி வந்த அவதார புருஷர்களுமே, ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாயகர்த்தாக்கள்.

நன்றி : அர்த்தமுள்ள இந்துமதம்.

No comments:

Post a Comment