இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.
‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.
இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.
இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.
‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.
இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.
ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!
No comments:
Post a Comment