படத்துக்குப் படம் புதுப்புது லொகேஷன்கள் வேண்டி உலகை வலம் வரும் தமிழ் சினிமாக்காரர்களால் சீக்கிரமே உலகம் காலியாகி விடப் போகிறது. சமீபத்தில் அப்படி ட்ரீம் வாரியர்பிக்சர்ஸின் 'சகுனி’ படத்துக்காக கார்த்தி, ப்ரணீதா, இயக்குநர் சங்கர்தயாள் உள்ளிட்ட ஒரு டீம் போலந்து நாட்டுக்குப் போய் வந்திருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ரொமான் போலன்ஸ்கி பிறந்த பூமி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்’ படமாகிய லொகேஷன்கள் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தமான மண்ணுக்குப் போய் வந்த சிலிர்ப்புடன் இருந்தார் இயக்குநர் சங்கர்தயாள். இரண்டு பாடல்களை அங்கே சுட்டெடுத்து வந்திருக்கிறார் அவர். ‘மனசெல்லாம் மழை...’ என்று தொடங்கும் நா.முத்துக்குமாரின் பாடலை போலந்தின் அழகிய லேண்ட்ஸ்கேப்புகளிலும், விவேகா எழுதிய ‘வெள்ளை பம்பரம்’ பாடலை சரித்திரம் சொல்லும் பழங்காலக் கட்டிடங்களின் அருகிலும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் கைவண்ணத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து டெல்லி, அங்கிருந்து ரஷ்யா, அங்கே தொடங்கி போலந்து தலைநகர் வார்ஸா என்று நீண்ட நெடிய பயணத்தில் களைத்து விடாத கார்த்தியும், ப்ரணீதாவும் உணர்வுகளுக்கு ஊசி போடும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு மிகவும் ஒத்துழைத்தி ருக்கிறார்கள். வழக்கமாக வெளிநாடு செல்லும் போது படப் பிடிப்புக் குழுவினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதனால் பல சந்தர்ப்பங்களில் நடிக நடிகையரும் பெரும் பாலும் யூனிட்டோடு இணைந்து ஷூட்டிங்கின் பின்னணி யிலும் பணியாற்ற நேரும். இங்கே கார்த்தியும், ப்ரணீதாவும் நடித்ததைத் தாண்டி பங்கெடுத்த வேலைகள் மிகவும் உதவிகரமாக இருந்ததாகச் சொல்லி நெகிழ்ந்த இயக்குநர், போலந்திலும் பரவியிருந்த கார்த்தியின் புகழைச் சொல்லி தோள் குலுக்கினார்.
‘‘கார்த்தியைக் கண்டதும் அடையாளம் கண்டுக் கிட்ட தோட, ‘சகுனி’ தொடங்கியப்ப வெளியான ஸ்டில்களைக் கையில கொண்டு வந்து, அதுல அவர் கிட்ட ஆட்டோ கிராஃப் வாங்கிட்டுப் போனாங்க அந்த நாட்டு மக்கள். அதோட லோக்கல் சேனல்கள்ல ரவுண்டு கட்டி லைவ் புரோக்ராம் எல்லாம் எடுத்து அசத்திட்டாங்க. ‘சகுனி’ போலந்திலும் ரீச்சாயிடுச்சு...’’ என்று சிரித்தார் சங்கர்தயாள்.
சமீபகாலமாக தன் கிளாஸிக் மெலடிகளால் தமிழ் இசை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் முதல்முதலாக ‘அதிர்வேட்டு’ இசையின் பக்கம் வருகிறார். அமிதாப் பச்சன், அனுராக் காஷ்யப், அக்ஷய்குமார் என்று பாலிவுட் ஜாம்பவான்கள் வரிசை கட்டும் இந்திப் படங்களிலும், பாரதிராஜா படம் உள்ளிட்ட கை கொள்ளாத தமிழ்ப் படங்களிலும் பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இவற்றுக்கு இடையில் ‘சகுனி’ படப் பாடல்களின் இசையைப் பெரிதாக எதிர்பார்ப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதை அவரே சொன்னார்...
‘‘எனக்கே ‘சகுனி’ ஆல்பம் புது அனுபவம்தான். கார்த்தி போல ஒரு மாஸ் ஹீரோவுக்கு, அதுக்கான தேவை இருந்ததால முதல் முதலா மாஸ் இசையின் பக்கம் வந்திருக்கேன். கவிஞர் அண்ணாமலை எழுதி , ‘போட்டது பத்தல மாப்பிள்ள...’ ன்னு கார்த்தி பாடறதா வர்ற கலகலப்பான பாடலும், ‘பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்ஸ்’னு கார்த்தியோட குரல்லயே ஆரம்பிச்சு, ‘கந்தா காரவடை’ன்னு சங்கர் மகாதேவன் குரல்ல தொடரும் பாடலும் தூக்கலா இருக்கும்.
‘மனசெல்லாம் மழை’யும், ‘வெள்ளை பம்பரமு’ம் கலகலப்பான டூயட்களா இருக்கும். இந்தப் படப் பாடல்கள் ‘ஏ’ தொடங்கி ‘சி’ சென்டர் வரை போய்த் தாக்கும்னு உறுதியா நம்பறேன். அதுக்காகவே இந்தப் பாடல்களோட வெளியீட்டை ரசிகர்களோட நானும் எதிர்பார்க்கிறேன்..!’’ - உற்சாகமாகச் சொன்ன ஜி.வியிடம், ‘‘மேற்படி பாடல்களில் உங்க சாய்ஸ் எது..?’’ என்றால், ‘‘போட்டது பத்தல மாப்பிள்ள... எளிதா ஹிட்டாகிறதோட ‘பார்களின் கீதமா’வும் இருக்கும்...’’ என்று சிரிக்கிறார்.
ஸ்டார்ட் மியூசிக்...
No comments:
Post a Comment