Tuesday, May 1, 2012

எனது இந்தியா! (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு !) - எஸ். ராமகிருஷ்ணன்....



குர்தாஸ்பூரில் முஸ்லிம்கள் அதிகம் வசித்தபோதும், நகரின் முக்கிய வணிகர்​களாகவும் பொருளாதார வளமையோடு இருந்ததும் சீக்கியர்களே. ஆகவே அவர்கள், குர்தாஸ்பூரை பாகிஸ்தானோடு இணைக்கக் கூடாது என்றார்கள். லாகூரில் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் வங்கி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை நடத்தியவர்கள் இந்துக்களே. ஆகவே, அதை எப்படி பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுப்பது என்ற பிரச்னை ஏற்பட்டது. இன்னொரு பக்கம், காஷ்மீரைப் பிரிக்கும்போது தரை வழியாக காஷ்மீருக்குள் நுழையும் வழி இந்தியாவுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இன்னொரு பக்கம், நீர்ப் பாசனத்துக்காக அமைக்கப்​பட்ட கால்வாய்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது? தபால், தந்தி மற்றும் ரயில்வே அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தை எப்படிப் பிரிப்பது என்ற சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை. லாகூர், கல்கத்தா என்று இரண்டு கமிஷன்களிலும் மாறி மாறிப் பயணம் செய்துகொண்டே இருந்தார் ரெட் கிளிஃப். இதுவரை, நிர்வாக வசதி கருதி அமைக்கப்பட்ட எல்லைகளை அப்படியே வைத்துக்கொண்டு, இந்தியாவைப் பிரிப்பது எளிதாக இருக்கும் என்று கருதினார் ரெட் கிளிஃப். பாகிஸ்தானுக்கு லாகூரும், இந்தியாவுக்கு கல்கத்தாவும் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெரிய நகரம் இருக்கட்டும் என்று ரெட் கிளிஃப் முடிவு செய்தார். பஞ்சாபுக்குத் தேவையான நீரைத் தரும் காஷ்மீர் நதிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் கவனமாக இருந்தார். இந்தியாவில் சேருவதா இல்லை... பாகிஸ்தானில் சேருவதா என்ற முடிவை இந்திய மன்னர்கள் எவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மௌன்ட் பேட்டனை, நேரு தூண்டிவிட்டு தங்களுக்குச் சாதகமானப் பகுதிகளை இந்தியாவோடு இணைக்கத் திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இப்படி, பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு பக்கம், நேருவும் படேலும் பிரிவினை குறித்த ஆலோசனையை ரெட் கிளிஃபோடு நடத்தினர். மறு பக்கம், பாகிஸ்தானுக்கு உரியதைத் தாருங்கள் என்ற கோரிக்கையோடு ரெட்கிளிஃபை மிரட்டிக்கொண்டு இருந்தார் ஜின்னா. தனக்குக் கிடைத்த வரைபடங்களையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் வைத்துக்கொண்டு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை வரைந்து முடித்தார் ரெட்கிளிஃப். இந்த எல்லைக்கோடு சரியாக இல்லையோ என்ற எண்ணம் ரெட் கிளிஃபுக்கு ஏற்பட்டது. அதுகுறித்து ஆலோசனை செய்ய மௌன்ட் பேட்டனைச் சந்தித்தார். 'எது சரி? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம். சுதந்திர தினம் வரை இந்தியப் பிரிவினையின் வரைபடங்கள், அறிவிப்பு எதுவும் வெளியே வர வேண்டாம்’ என்று மௌன்ட் பேட்டன் கேட்டுக்கொண்டார்.ஆகவே, ஆகஸ்ட் 13-ம் தேதி தனது பணியைப் பூர்த்தி செய்துவிட்டபோதும், ரெட்கிளிஃப் அதை வெளியிடவில்லை. யார் எந்தப் பக்கம் பிரிந்து போகப்போகிறார்கள் என்று தெரியாத சூழலில்தான், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இந்தியக் கொடியோடு சுதந்திர தினம் கொண்டாடிய ஊர், மறுநாளே பாகிஸ்தானுக்குப் பிரிந்துபோனது. பாகிஸ்தான் என நினைத்து களியாட்டம் ஆடிய மக்கள், மறு நாள் இந்தியாவின் பகுதியாகிப்போனார்கள். தாங்கள் எந்த நாட்டில் வசிக்கிறோம் என்று தெரியாமல் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடிய அவலம் இந்தியாவில் நடந்தேறியது.ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரிவினையின் வரைபடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. மறுநாள், மக்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அதோடு, மக்கள் உடனே ஊரைக் காலி செய்து இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்ற கூக்குரல் இரண்டு பக்கமும் எழுந்தது. மௌன்ட் பேட்டன் அந்த குரல்களுக்குச் செவிசாய்க்கவே இல்லை. மாறாகக், கலவரம் ஏற்படக்கூடும் என்று நினைத்து லாகூரிலும் கல்கத்தாவிலும் 50 ஆயிரம் பேர் கொண்ட பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டது. ஆனால், அந்தப் படையால் சிறிய கிராமம் வரை பரவிய கிளர்ச்சியையும் வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. உலக வரலாற்றில் 12.5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் இடப்பெயர்ச்சி செய்ததே இல்லை எனும்படியாக, சாரை சாரையாக ஊரைக் காலிசெய்து மக்கள் கிளம்பினர். 10 லட்சம் பேருக்கும் மேலான மக்கள் அகதிகள் போல நடந்தும், பேருந்துகள் மற்றும் ரயில் ஆகியவற்றில் ஏறி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும், இங்கே இருந்து பாகிஸ்தானுக்கும் சென்றுகொண்டு இருந்தனர்.


அகதி முகாம் போல வழி முழுவதும் மக்கள் தங்கி இருந்தனர். குடிநீரும் உணவும் கிடைக்காமல் தவித்தனர். காலரா நோய் பரவியது. வழிப்பறி, வன்முறை என்று அடக்க முடியாத பெருங்கலவரம் வெடித்தது. 72 மணி நேரத்தில், 4,000 பேர் கொல்லப்பட்டனர். 10,000 பேர் பலத்த காயம் அடைந்தனர்.பிரிவினை ஏற்படப்போகிறது என்று தெரிந்த உடனேயே பல தொழில்அதிபர்கள் பாகிஸ்தானில் இருந்த தங்களது முதலீடுகளை இந்தியாவுக்கு மாற்றிவிட்டனர். அந்த நேரத்தில், பஞ்சாப் மற்றும் சிந்துப் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லியில் உள்ள வங்கிகளுக்கு மாற்றப்பட்ட பணம் 250 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இந்தப் பிரிவினையை தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டனர்.பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள்தான். அதிலும், சீக்கியர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்கள், தங்களது பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக வெளியேறினர். வீடு, சொத்து, கடைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அவர்கள் துரத்தப்பட்டனர். பல இடங்களில் மக்கள் திரண்டு, வணிக வளாகங்களைக் கொள்ளை அடித்தனர். பல வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கிருந்த சீக்கியர்களை துரத்தினர். இந்தியப் பிரிவினையின்போது, கற்பழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு புள்ளி விவரம். கற்பழிக்கப்பட்ட பெண்களில் பலர், அடுத்த இரண்டு மாதங்களில் கர்ப்பிணிகளாக ஆனார்கள். அவர்களுக்கு ஒரே நாளில் ஒட்டுமொத்தமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இந்திய அரசு, தங்கள் பகுதியில் இருந்து 33 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டும் கற்பழிக்கப்பட்டும் கொடுமைக்கு ஆளானர்கள் என்றது. பாகிஸ்தானோ, தங்கள் பகுதியில் இருந்து 51 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றது. இரண்டு புள்ளிவிவரங்களும் காட்டும் பொது உண்மை கலவரத்தைக் காரணமாகக்கொண்டு, பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதே. கூடுதலாக, பெண்களில் மார்பில் சூட்டுக்கோலால் இந்து அல்லது முஸ்லீம் அடையாளக் குறி போடப்பட்டதும் நடந்தது.  இந்திய வரலாற்றில் இருண்ட நாட்கள் என்று அழைக்கப்படும் பிரிவினை காரணமாக இறந்து​ போனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்கின்றனர். இறந்த உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆட்கள் இல்லை. சாலை ஓரங்களில் சடலங்கள் எறியப்பட்டன. அவற்றை நாய்கள் கடித்து இழுத்துச் செல்லும் காட்சி சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. 7 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும்... 7 கோடியே 25 லட்சம் சீக்கியர் மற்றும் இந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இடம் மாறினர் என்று, 1951-ம் ஆண்டின் கணக்கெடுப்பு கூறுகிறது. இதில், தலைநகரான டெல்லிக்குத்தான் அதிகப்பட்சமாக 10  லட்சம் அகதிகள் வந்து சேர்ந்தார்கள்.

இவை எல்லாம் நடக்கத் தொடங்கும்போது, ரெட் கிளிஃப் எங்கே இருந்தார்?ரெட் கிளிஃபுக்கு இந்திய சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, ஆகஸ்ட் 17-ம் தேதியே அவரை பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பியது மௌன்ட் பேட்டன் அரசு. காரணம், பிரிவினையால் கோபமடைந்த யாராவது ரெட் கிளிஃபைக் கொலை செய்துவிடக்கூடும் என்று மௌன்ட் பேட்டன் பயந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ரெட் கிளிஃப் ஒருமுறைகூட இந்தியாவுக்கு வரவே இல்லை. மேலும், தனது குறிப்புகள் மற்றும் ஆதார வரைபடங்களை அவரே தீ வைத்து எரித்துவிட்டார்.மௌன்ட் பேட்டன் பயந்தது போலவே, ரெட் கிளிஃபின் கமிஷன் உறுப்பினராகப் பணியாற்றிய சீக்கியர் ஒருவரின் மனைவியும் பிள்ளைகளும் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மௌன்ட் பேட்டனின் இந்தியப் பிரிவினை இந்தியர்​​களுக்கும் சாதகமானதாக இல்லை. பாகிஸ்​தானிகளுக்கும் சாதகமாக இல்லை. மாறாக, பிரிட்டிஷ் அரசுக்குச் சாதகமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகளாகவே இருக்க வேண்டும் என்ற பிரிட்டிஷின் சதி, மிகத் திறமையாக நிறைவேற்றப்பட்டது. மௌன்ட் பேட்டன் அழகாகக் காய் நகர்த்தி வெற்றி கண்டார்.இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து அதன் நீர்ப் பங்கீட்டைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று, ரெட் கிளிஃப் தன் பங்குக்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டுவிட்டுச் சென்றார். அதன்படி, இந்தியாவில் ஓடும் நதியில் இருந்து பாகிஸ்தானின் நீர்ப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீரை, கால்வாயில் திறந்துவிட வேண்டும். அதை இரண்டு நாடுகளும் சேர்ந்து பராமரிக்க வேண்டும் என்று, ரெட் கிளிஃப் குறிப்பிட்டு இருந்தார். இந்த முடிவை இரண்டு நாடுகளும் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நீதி கேட்டு உலக நீதிமன்றத்துக்கு போக முடிவு செய்தது. நேரு அதை எதிர்த்து, விட்டுக்கொடுப்பதன் வழியே இருவருமாக இதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவை அறிவித்தார். அதோடு, காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீர்ப் பங்கீட்டை இந்தியா முறையாகத் தந்து உதவும் என்றும் நேரு அறிவித்து, அதன்படியே பாகிஸ்தானுக்குத் தண்ணீர் வழங்கினார்.


ஆட்சி, அதிகாரம் என்றிருந்த இரண்டு தேசத் தலைவர்களும். இடம்பெயர்ந்துபோன லட்சக்​கணக்கான மக்களைப்பற்றியோ, அவர்கள் வாழ்​விடத்தைப் பறிகொடுத்த துக்கத்தைப்பற்றியோ கவலையின்றி புதிய மந்திரி சபையை நியமித்து அரசாளத் தொடங்கினர். இந்தியா ஒரு படி மேலே போய் அதே மௌன்ட் பேட்டனை மீண்டும் வைஸ்ராயாகவே நியமித்து தங்களின் பெருந்தன்​மையைக் காட்டிக்கொண்டது.உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோல அந்நியர் ஒருவர் ஒரு கமிஷன் தலைவராக இருந்து, ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாட்டைத் துண்டு போட்டது நடந்ததே இல்லை. பிரிவினையின் வடு இன்றும் இந்தியாவில் ஆழமாக உள்ளது. காணாமல்போன குடும்பங்களைத் தேடும் பணி இத்தனை ஆண்டு​களுக்குப் பிறகும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரிவினையின் கசப்புதான் இந்திய-​பாகிஸ்தான் யுத்தத்துக்கு அடிநாதமான காரணமாக அமைந்தது.இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிய பிரிட்டிஷ், பிரிவினை என்ற பெயரில் என்றும் தீராத வடுவை இந்தியாவுக்கு ஏற்படுத்திவிட்டுச் சென்று இருக்கிறது. காஷ்மீர் பிரச்னை தொடங்கி, இந்திய எல்லைப் பாதுகாப்பு வரை இன்று உள்ள அத்தனை முக்கிய பிரச்னைகளுக்கும் தொடக்கப் புள்ளி இதுவே!


விகடன் 

No comments:

Post a Comment