வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருள்களில் சோப்பு, டிடர்ஜெண்ட், கற்பூரம், பாச்சா உருண்டை முக்கியமானவை. சிலநேரங்களில் குழந்தைகள் தெரியாமல் இவற்றைத் தின்றுவிடுவார்கள். இதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும். அப்போது என்ன செய்வது என்பதைப் பார்ப்போம்.
கெடுதல் என்ன?
சோப்பும் டிடர்ஜெண்டும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகளைக் கொடுக்கும்.இவை தோலில் பட்டால் அரிப்பை உண்டாக்கும். கற்பூரம், பாச்சா உருண்டை சாப்பிட்ட குழந்தைகள் சுயநினைவை இழக்கும், வலிப்பு வரலாம்.
என்ன முதலுதவி?
அதிகமாகத் தண்ணீரையோ, பாலையோ குடிக்கவைத்து, சோப்பு, டிடர்ஜெண்ட், கற்பூரம், பாச்சா உருண்டை ஆகியவற்றின் வீரியத்தைக் குறைக்க வேண்டும்.
குழந்தை சுயநினைவை இழந்து விட்டால், இந்த முதலுதவியைச் செய்யக்கூடாது.
குழந்தையை மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அமிலத்தைக் குடித்தல்:
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம்.
அமிலம் என்ன செய்யும்?
இந்த அமிலம் தோலில் பட்டால், பட்ட இடத்தில் எரிச்சல் உண்டாகும். தோல் சிவந்து வீங்கும். அரிப்பு உண்டாகும். வலி எடுக்கும். கொப்புளங்கள் ஏற்படலாம். அமிலம் கண்ணில் பட்டு விட்டால், கண் சிவந்து விடும். கண்களில் எரிச்சல் ஏற்படும். கண்ணீர் கொட்டும்.அமிலத்தைக் குடித்தவருக்கு கடுமையான வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். எச்சிலைக்கூட விழுங்க முடியாது. விழுங்கும் போது தொண்டை வலிக்கும். தொண்டையை அடைப்பது போலிருக்கும். நெஞ்சு எரியும். சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். மயக்கம் வரலாம். வலிப்பு ஏற்படலாம்.
என்ன முதலுதவி?
உடனடியாக, உடுத்தியுள்ள ஆடைகளையும், செருப்பு, ஷூ போன்றவற்றையும் அகற்ற வேண்டும்.
தோலில் அமிலம் பட்டிருந்தால், அதிகமாகத் தண்ணீர் விட்டுத் தோலை நன்றாகக் கழுவ வேண்டும்.
இது முக்கியம். சோப்பு போட்டு தோலைக் கழுவக்கூடாது. அப்படிச் செய்தால் எரிச்சல் அதிகமாகிவிடும்.
தோலில் எரிச்சல் அதிகமாக இருந்தால், குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து கொண்டு, அதைத் தோலில் சுற்றலாம்.
அமிலம் கண்ணில் பட்டிருந்தால், கண்களைக் கழுவவேண்டும்.
அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் பாதிக்கப்பட்ட நபரின் கண்களை முக்கி, கண்களைத் திறந்து மூடச் சொல்லுங்கள்.
பாத்திரம் இல்லையென்றால், இப்படியும் செய்யலாம். இமைகளை விலக்கிக்கொண்டு, தண்ணீரைக் கண்ணுக்குள் ஊற்றலாம்.
அமிலம் குடித்தவருக்கு, அதிகமாகத் தண்ணீரைக் குடிக்க வைத்து அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கலாம்.
வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் ’ஆண்டாசிட்’ மருந்து கைவசம் இருந்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.
வாயைத் தண்ணீரால் கொப்பளித்துக் கழுவலாம்.
மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
மருத்துவமனைக்குச் செல்லும்போது, அந்த நபர் குடித்த பொருளையும் எடுத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்தால், சரியான மேல்சிகிச்சை கிடைக்க அது உதவும்.
அமிலம் பட்ட கண்களில் சொட்டு மருந்தை ஊற்றக்கூடாது.
வாந்தி எடுக்க வைக்கக்கூடாது.
வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
வாய்வழியாக கெட்டியான உணவு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.
மண்ணெண்ணெய்,பெட்ரோல்குடித்தல்:
பெரும்பாலான வீடுகளில், சமையல் அறையில் தண்ணீர் இருக்கும் இடத்தின் அருகில் மண்ணெண்ணெய் புட்டியும் இருக்கும். அப்போது குழந்தைகள் அதைத் தண்ணீர் என்று தவறாக நினைத்துக் குடித்துவிடுவார்கள்.
மண்ணெண்ணெய் குடித்தவருக்கு, மண்ணெண்ணெய் வயிற்றுக்குள் மட்டும் சென்றுவிட்டிருந்தால், அமிலத்தைப் போன்று கடுமையான பாதிப்புகள் எதுவும் இருக்காது. வயிற்றுவலி, எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி முதலிய அறிகுறிகள் ஏற்படும். இதற்குப் பயப்படத் தேவையில்லை.
ஆனால், மண்ணெண்ணெயைக் குடிக்கும்போது, புரையேறிவிட்டால், அது நுரையீரலுக்குள் சென்றுவிடும். அப்போது தொடர்ச்சியாக இருமல் வரும். நெஞ்சு வலிக்கும். நிமோனியா காய்ச்சல் வரும். இது ஆபத்தைத் தரும்.
இளநீர் குடிக்கத் தரலாம்.
30 மி.லி. ‘லிக்விட் பாரஃபின்’ எண்ணெயைக் குடிக்க வைக்கலாம்.
மேல்சிகிச்சைக்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
வாந்தி எடுக்க வைக்கக்கூடாது.
வயிற்றைச் சுத்தப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
விஷப் பொருள்களைக் குடித்தல்:
சாதாரணமாகவே வீடுகளில் மூட்டைப்பூச்சி மருந்து, எறும்புப்பொடி, எலி மருந்து போன்றவையும், விவசாயி வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இருப்பது வழக்கம். இவற்றைத் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் குடித்து விடுவதுண்டு. இவை உயிருக்கு ஆபத்து தருபவை. ஆகவே, இந்த நபர்களுக்கு முதலுதவி செய்வதற்குத் தாமதிக்கக் கூடாது.
எவ்வளவு விரைவாக விஷத்தை இரைப்பையிலிருந்து வெளியேற்றுகிறோமோ, அவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவர் குணமடைவார் என்பதால், விரைவாக முதலுதவி தர வேண்டும்.
ஒரு தம்ளர் தண்ணீரில் இரண்டு கரண்டி சமையல் உப்பு வீதம் கலந்து, சுமார் ஐந்து தம்ளர் உப்புத்தண்ணீரைக் குடிக்க வைக்க வேண்டும்.
அல்லது ஒரு தம்ளர் தண்ணீரில் சுமார் 15 கிராம் கடுகுத்தூளைக் கலந்து, ஐந்து தம்ளர் குடிக்க வைக்கலாம்.
அல்லது இரண்டு விரல்களை அவரது வாக்குள் நுழைத்து, நாக்கின் உள்பாகத்தை அழுத்தமாகத் தேத்து, வாந்தி எடுக்க வைக்கலாம்.
ஒவ்வொரு விஷத்துக்கும் குறிப்பிட்ட ‘விஷமுறிப்பான்’ உண்டு. அதையும் கொடுத்தால்தான் உயிருக்கு ஆபத்து வராது. அந்த விஷமுறிப்பானை மருத்துவரால்தான் தர முடியும்.
ஆகவே, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன், பாதிக்கப்பட்ட நபரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
1. மண்ணெண்ணெய், அமிலம், காரம், கற்பூரம், பாச்சா உருண்டை, கிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மாத்திரைகள், வண்ணப்பூச்சு திரவங்கள், பெட்ரோல் போன்றவற்றைக் குழந்தைகள் கைக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும்.
2. மேற்சோன்ன பொருள்களை ஓர் அட்டைப்பெட்டியில் வைத்துப் பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.
3. மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை வீட்டில் குடிக்கப் பயன்படுத்தும் பாட்டில்களில், தண்ணீர் கேன்களில் வாங்கிப் பத்திரப்படுத்தக்கூடாது.
4. நாள்பட்ட மருந்துகள், மாத்திரைகள், கெட்டுப்போன பொருள்கள் முதலியவற்றை உடனுக்குடன் வெளியேற்றிவிட வேண்டும்.
5. விஷப்பொருள்கள் தரும் ஆபத்துகளை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
6. மாத்திரை, மருந்து போன்றவற்றைக் குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடுவதற்கு முன்னால், பெற்றோரிடம் காண்பித்துவிட்டுச் சாப்பிடப் பழக்குங்கள்.
No comments:
Post a Comment