கடந்த மூன்று நாட்களாக, அன்னியச் செலாவணி மதிப்பில், இந்திய ரூபாய் மதிப்பு வெகுவாகச் சரிந்து, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. நேற்று, டாலர் ஒன்றுக்கு நிகரான மாற்று மதிப்பாக, 55.03 ரூபாய் என்ற கணக்கில், அன்னியச் செலாவணி பரிவர்த்தனை நடந்தது. இது, கடந்த ஐந்து மாதங்களில் காணாத சரிவாகும்.
இந்திய ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி பற்றி, நிதியமைச்சர் பிரணாப் நேற்று கூறும்போது, "இது, கவலை தரும் விஷயம். உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஐரோப்பிய நிதி நிலைமையும், சர்வதேச பொருளாதார நெருக்கடிகளும், இதற்கு காரணம். இப்பிரச்னையை தீர்க்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்று குறிப்பிட்டார்.
கிரீஸ் தவிப்பு:உலகமயப் பொருளாதார சூழ்நிலை சாதகமாக இல்லை. பொருளாதார இக்கட்டில், கிரீஸ் தவிக்கிறது. அந்த நாட்டின் கடன் சுமை, அது சேர்ந்திருக்கும் ஐரோப்பிய யூனியனின் கரன்சியான யூரோவைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.உலக அளவில், அமெரிக்க டாலர் மதிப்பு கூடிய நிலையில், தற்போது, கிரீஸ் பாதிப்பும், மற்ற சர்வதேச பொருளாதாரச் சூழலும் சேர்ந்து கொண்டு, நம்மை ஆட்டிப் படைக்கின்றன.குறிப்பாக, கிரீஸ் நாட்டில் நடைபெறும் தேர்தலுக்குப் பின், அந்த நாடு, ஐரோப்பிய யூனியனை விட்டு விலகி விட்டால், யூரோ கரன்சி மதிப்புக்கு, அதிக நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தும், சந்தையில் அதிக யூகங்களை எழுப்பி உள்ளது.
டாலர் கிராக்கி :நமது நாட்டில், அன்னியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இறக்குமதியாளர்கள் டாலரை அதிகம் நாடும் போது, அதன் வேகத்தைத் தடுக்க முடியாத சூழ்நிலையில், தொடர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பு சரிவதைத் தவிர, வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.பணவீக்க அளவைக் குறைத்தால், ரூபாய் மதிப்பு உயரும் என்றால், சமீபத்தில் தான் அதற்கான சில நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுத்தது. கடந்த மூன்று நாட்களில், மளமளவெனச் சரிந்த ரூபாய் மதிப்பு, நேற்று, டாலருக்கு எதிரான மாற்று மதிப்பில், மிகக் குறைந்த அளவாக, 55.03 ரூபாய் என்ற நிலை ஏற்பட்டது, கடந்த 5 மாதங்களில் காணப்படாத வீழ்ச்சியாகும்.ரூபாய் மதிப்பு சரிந்ததன் எதிரொலியாக, பங்குச் சந்தைப் புள்ளியும் வெகுவாக குறைந்தது. பங்குச் சந்தை குறியீட்டெண், 340 புள்ளிகள் குறைந்து, 15,988.23 என்று சரிந்தது.
இன்று முடிவு :ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க, இன்று ரிசர்வ் வங்கி உரிய முடிவுகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் கருவூலத்துறைத் தலைவர் என்.எஸ்.வெங்கடேஷ் கூறுகையில், "ரூபாய் மாற்று மதிப்பு, 55 ரூபாய் என்று சரிந்தது, கவலை தரும் அம்சம். இன்றைய வீழ்ச்சியில் இருந்து, ரூபாய் மேல் எழ, அரசு முயற்சிகளை எடுக்கும்.அதனால், மதிப்பு கூடும்' என்று, கருத்து தெரிவித்தார். மேலும், இறக்குமதியாளர்களின் அதிக அமெரிக்க டாலர் தேவை, ரூபாய் மதிப்பு விழக் காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment