சர்ச்சையில் சிக்கியுள்ள மு.க.அழகிரியின் 'தயா சைபர் பார்க்’ முகப்பில் 'மாநகராட்சி இடம்’ என்று கடந்த வாரம் அறிவிப்பு பலகை வைத்தார்கள். அடுத்த கட்டமாக, அழகிரி மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்க இருக்கிறார், மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பா. இதனால், அனலாய் கொதிக்க ஆரம்பித்து உள்ளது மதுரை.
ஏப்ரல் 25-ம் தேதி, மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மண்டலத் தலைவர் சாலைமுத்து, 'மத்திய அமைச்சர் ஒருவர், தெரிந்தே மாநகராட்சி இடத்தை அபகரித்து இருக்கிறார். அங்கு உள்ள ஆக்கிரமிப்பை இடித்துத் தள்ளாமல் போர்டு வைக்கிறீர்கள். அவர் மீது ஏன் நில அபகரிப்புப் புகார் கொடுக்கவில்லை?’ என்று கேட்டார். இதை, ஆளும் கட்சி கவுன்சிலர்கள்
ஏகமனதாக ஆமோதிக்கவும், 'மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த அழகிரி மீது போலீஸில் புகார் செய்யப்படும்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மேயர் ராஜன் செல்லப்பா.
இதைஅடுத்து, கடந்த 26-ம் தேதி காலை, மிசா பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் புடைசூழ தயா சைபர் பார்க்குக்கு வந்தார் முன்னாள் துணை மேயர் மன்னன். நிருபர்களையும் வரவழைத்தார்கள். மாநகராட்சி ஆணை என்று சொல்லி, ஆணையருக்காக அப்போது இருந்த நகரமைப்பு அலுவலர் முருகேசன் கையெழுத்து போட்டிருந்த உத்தரவு நகல் ஒன்றைபத்திரிகையாளர்களிடம் காட்டினார். இப்போது, 'அந்த உத்தரவு போலியானது’ என அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்யத் தொடங்கி இருப்பதால், கொதிப்பில் இருக்கிறது அழகிரி வட்டாரம்.
மண்டலத் தலைவர் சாலைமுத்துவிடம் பேசினோம். ''தயா சைபர் பார்க்கின் முகப்பில் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானதுன்னு தெரிந்தும், அதை ஏதோ தனியார் இடம் போல் காட்டி அதிகாரிகள் பிளான் அப்ரூவல் கொடுத்திருக்காங்க. இது நில அபகரிப்பு இல்லையா? அப்பாவி ஒருத்தன் 92 வருஷமா அனுபவத்தில் வைத்திருந்தால், ஆக்கிரமிப்புன்னு இடிச்சுத் தள்ளுறீங்க... அழகிரின்னா பயமா இருக்கா?’ என்று மாமன்றத்தில் கேட்டேன். 'போலீஸ்ல புகார் கொடுத்துட்டு, அடுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று சொல்லி இருக்கிறார் மேயர். ஆக்கிரமிப்பை இடிச்சு, இடத்தைக் கையகப்படுத்துற வரைக்கும் ஓய மாட்டோம்'' என்று சூளுரைத்தார்.
மேயர் ராஜன் செல்லப்பாவோ, ''பூங்கா அமைத்துக்கொள்ள மாநகராட்சி வழங்கியதாகச் சொல்லப்படும் உத்தரவு தொடர்பான கோப்புகள் எதுவும் மாநகராட்சியில் இல்லை. ஒருவேளை, ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், முன்பு அதிகாரத்தில் இருந்த தி.மு.க-வினரே கோப்புகளை எடுத்துட்டுப் போயிட்டாங்களானு தெரியலை. அழகிரி மீது நிலஅபகரிப்புப் புகார் கொடுக்கப்போறோம். அதற்குமுன், 2006-ம் ஆண்டு கோப்புகளை இன்னும் முழுமையாக தேடச்சொல்லி இருக்கேன். அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்கணும். இல்லாவிட்டால், கட்டாயம் நில அபகரிப்புப் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்போம்'' என்றார்.
இதுபற்றிக் கேட்டதுமே ஆவேசப்பட்ட மன்னன், ''துணை மேயராக இருந்தவன் என்பதால், இந்த மேட்டர் எனக்கு முழுமையாகவே தெரியும். 'தயா சைபர் பார்க்’ முகப்பில் உள்ள 10.5 சென்ட் நிலத்தில் பூங்கா அமைத்துக்கொள்வதற்கு 27.6.2006-ல் தயா பார்க் நிர்வாகம் மனு கொடுத்தது. 'அங்கு கட்டடம் கட்டக் கூடாது. உதவிப் பொறியாளர் மேற்பார்வையில் சொந்தச் செலவில் பூங்கா அமைக்க வேண்டும். அந்த இடத்தை சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. தேவைப்படும் பட்சத்தில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அந்த இடத்தை மாநகராட்சி எடுத்துக்கொள்ளலாம். அப்போது, இருக்கும் நிலையிலேயே பூங்காவை ஒப்படைக்க வேண்டும்’ என்று ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து 21.12.2006-ல் அனுமதி கொடுக்கப்பட்டது. 'இடத்தை எப்ப வேணும்னாலும் எடுத்துக்கங்க’ன்னு சொல்லிட்டோம். அப்படி இருக்கையில், மத்திய அமைச்சர் அண்ணன் அழகிரியை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 'நிலஅபகரிப்பு, போலி உத்தரவு’ என்றெல்லாம் அவதூறு பரப்புகிறார் மேயர். இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், அவரை நீதிமன்றத்தில் சந்திப்போம். '' என்று சீறினார்.
விவகாரம் வில்லங்கத்தில்தான் முடியும் போலிருக்கிறது!
No comments:
Post a Comment