Monday, May 7, 2012

என்ன செய்யப் போகிறார் சச்சின்?



சச்சின் தெண்டுல்கர் தலைமுறையில் வாழ்கிறோம் என்கிற பூரிப்பு இல்லாத கிரிக்கெட் ரசிகனே இருக்கமுடியாது. ஆனால், அந்த கிரிக்கெட் ரசிகன்தான் இப்போது குழம்பிப் போயிருக்கிறான். சச்சின், ராஜ்யசபா எம்.பி.யாகியிருப்பது தகுதிக் குறைவாய, கௌரவமாய என்று கேட்கிறான் ரசிகன். சச்சின் அரசியல்வாதியாகி விட்டாரா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டாரா என்கிற குழப்பத்துக்கும் விடையில்லை. அலங்காரப் பதவிக்கு மற்றவர்கள் ஆசைப்படலாம். சச்சினுமா? சச்சினின் இந்த முடிவில் எனக்குச் சம்மதமில்லை என்று இணையதள சர்வே-களில் தம் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள் ரசிகர்கள். நிச்சயம், சச்சின் தம் ரசிகர்களிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்.அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின் படி, 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும். கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ராஜ்யசபாவுக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள் (இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்). சச்சின் 100வது செஞ்சுரியை அடித்து முடித்த இந்நேரத்தில், அவருக்கு ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கிறது மத்திய அரசு. தெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்காத மத்திய அரசு, ராஜ்யசபா எம்.பி. பதவியை அளித்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இதற்கு சச்சின் ஒப்புக்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சமீபத்தில் இந்திய விமானப்படை கௌரவ குரூப் கேப்டன் பதவி, சச்சினுக்கு வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது" என்று மகிழ்ந்தார் சச்சின். எனில், எம்.பி. பதவியைப் பெற்றுக் கொண்டது என்ன காரணத்துக்காக? தமது 100வது செஞ்சுரியை அடித்து முடித்தபிறகு, என் வாழ்க்கையில் இனி சாதிக்க ஒன்று மில்லை," என்று பேட்டியளித்தார் சச்சின். எனில், இந்தப் பதவியை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்? 


கலையுலகப் பிரமுகர்கள் சிலர் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்துள்ளார்கள். ராஜ்ய சபாவில், பிரபலங்களுக்குப் பதவி தருவதற்குக் காரணம், அவர்களுடைய துறை சார்ந்த அறிவு, மக்களவை விவாதங்களுக்குப் பயன்படும் என்பதால்தான். ஆனால், இது காலப்போக்கில் ஒரு சடங்காகவும், அர்த்தமற்றதாகவும் ஆகிப்போனதுதான் வருத்தத்துக்குரியது. 1999ல் நியமன எம்.பி.யான பாடகி லதா மங்கேஷ்கர், மாநிலங்களவையில் ஒரு விவாதத்தில்கூட உருப்படியாகக் கலந்துகொள்ளவில்லை. அவைக்கு தொடர்ந்து விடுப்பு எடுத்த காரணத்தால் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். எனக்குத் தினமும் ரெக்கார்டிங் இருந்தது.அதனால்தான் விவாதங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னால் வெளிப்படையாக என் கருத்துகளைச் சொல்ல முடியாது. எனக்குப் பாட மட்டும்தான் தெரியும். ராஜ்யசபாவில் நான் என்ன செய்ய முடியும்?" என்று தம் மீதான விமர்சனங்களுக்கு இப்படியெல்லாம் பதிலளித்தார் கானக்குயில். லதா மங்கேஷ்கரால் திரைத்துறைக்கு அவமானம்" என்றார் ஷபானா ஆஸ்மி. ராஜ்யசபாவுக்கு நியமன உறுப்பினர்கள் அவசியமாய் என்கிற விவாதம் லதா மங்கேஷ்கரால் ஏற்பட்டது. இந்த நிலையில் சச்சினின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது?  கிரிக்கெட்டுக்கு வெளியே பல சர்ச்சைகளை உருவாக்கியவர், சச்சின். 2002ல், டான் பிராட்மேனின் 29 சதத்தின் சாதனையை சச்சின் சமன் செய்தபோது, அவருடைய சாதனையைப் பாராட்டி ஃபெராரி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஃபியட் கார் நிறுவனம், சச்சினுக்கு ஃபெராரி காரைப் பரிசளித்தது. அந்தக் காரின் விலை Rs.75 லட்சம். காரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு சச்சின் வரிவிலக்கு (Rs.1.13 கோடி) கோரினார். இதையடுத்து சச்சினுக்காக சட்டத்திருத்தம் கொண்டுவந்து, வரிவிலக்கு அளித்தது மத்திய அரசு. இதனால் சர்ச்சை உருவாகி, நீதிமன்றம்வரை சென்றபிறகுதான், நிலைமையை சுமுகமாக்க, வரித் தொகையைச் செலுத்தியது ஃபியட் நிறுவனம். இன்னொரு முறை, விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு கோருவதற்காக (Rs.2 கோடி), தான் ஒரு நடிகர் என்று அறிவித்தார் சச்சின். இதனால் அவருக்கு அன்னியச் செலாவணியில் விலக்கு அளிக்கப்பட்டது. சமீபத்தில், குடியேற்றச் சான்றிதழ் பெறாமல் மும்பையிலுள்ள தம் சொகுசு வீட்டுக்குக் குடியேறியதற்காக சச்சினுக்கு Rs.4.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கிரிக்கெட் மூலம் இந்தியாவுக்கும், மும்பைக்கும் பெருமை சேர்த்ததால் சச்சினுக்கு இந்த விவகாரத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு மகாராஷ்டிர மாநில அரசு கோரிக்கை விடுத்தது. சச்சினுக்கு எம்.பி. பதவியளித்த காங்கிரஸ் கட்சிக்கு, இச்செயலுக்குப் பின்னால் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவே எண்ண முடிகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலர், சச்சினை எம்.பி.யாக்கியிருப்பது காங்கிரஸின் புத்திசாலித்தனமான காய் நகர்த்தல் என்கிறார்கள். தெண்டுல்கர், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்வோம்," என்கிறார் வடக்கு மும்பையின் காங்கிரஸ் எம்.பி. சஞ்ச நிருபம். தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாலும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளாலும் கட்சிக்குள்ள செல்வாக்கு குறைவதை ஈடுகட்டவே சச்சினை எம்.பி.யாக்கியிருக்கிறது காங்கிரஸ். பிரச்னைகளைத் திசை திருப்பும் விதமாகவே சச்சினுக்கு எம்.பி. பதவி என்கிற குற்றச்சாட்டை எளிதில் ஒதுக்கமுடியாது. குஜராத் படுகொலைகளால் நாடு முழுக்க பி.ஜே.பி.க்கு எதிரான அலை வீசியபோது அப்துல்கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்ததன் மூலமாக அரசு மதபாகுபாடு எதுவும் காண்பிக்கவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு, தம்மீதான கறைகளைப் போக்க முயற்சி செய்தது பி.ஜே.பி. பி.ஜே.பி.க்கு கலாம்; காங்கிரஸுக்கு சச்சின். ஆனால், நான் ஆறு பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு அரசியல் தெரியும். அரசியல் வாதிகளை எப்படிக் கையாள்வது என்பதும் தெரியும்," என்று அப்போது பதிலளித்தார் கலாம். சச்சினுக்கு எந்தவோர் அரசியல் அனுபவமும் கிடையாது. சச்சின் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகப் புகழப்பட்டாலும் ஐ.பி.எல். வரை அவருடைய தலைமைப் பண்பு சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. தெண்டுல்கர் இயற்கையிலேயே அமைதியானவர். கிரிக்கெட் தொடர்பான பிரச்னைகளில்கூட வெளிப்படையாக தம் கருத்துகளை வெளிப்படுத்தியது கிடையாது. 

சச்சினுக்கு முன்பு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலிப் திர்கே, ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அவர், நாட்டில், பல பள்ளிகள் அடிப்படைக் கட்டமைப்புகள்கூட இல்லாமல் இருக்கின்றன. அவற்றுக்கு எதிராகவும் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன்," என்று ஒரு எம்.பி. யாக தம் திட்டங்களை அறிவித்துள்ளார். விளையாட்டு மசோதா விஷயத்தில் பி.சி. சி.ஐ.க்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமுகமான உறவு கிடையாது. இதுபோன்ற விளையாட்டுத்துறை பிரச்னைகளைக் களைய சச்சின் முயற்சி எடுப்பார் என்று நம்பலாமா? மெக்ராத், வாசிம் அக்ரம், வார்னே போன்ற பௌலர்களின் சவாலான பந்துவீச்சுகளை எளிதாக எதிர்கொண்ட சச்சினுக்கு அரசியல் என்ன மாதிரியான பௌன்சர்களை வீசப்போகிறது?

No comments:

Post a Comment